பும்ராதான் மாற வேண்டும்.. இந்திய கிரிக்கெட் அல்ல- முன்னாள் வீரர்

image courtesy:PTI
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.
மும்பை,
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ‘ஆண்டர்சன்-தெண்டுல்கர்’ கோப்பைக்கான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் டிரா ஆனது. இதையடுத்து 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பையை இரு அணிகளும் கூட்டாக பெற்றுக் கொண்டன.
இந்த தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா குறிப்பிட்ட 3 டெஸ்டுகளில் மட்டுமே விளையாடினார். பணிச்சுமையை காரணம் காட்டி 2 டெஸ்டில் ஒதுங்கிக் கொண்டார். இதில் அவர் விளையாடாத அந்த 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றது. அவர் விளையாடிய போட்டிகளில் 2-ல் தோல்வியும் ஒன்றில் டிராவும் கண்டது. இதனால் அவரை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்தனர். அதோடு பும்ரா தனது விருப்பத்திற்கு ஏற்ப போட்டிகளை தேர்வு செய்து விளையாடக்கூடாது என்று பல முன்னாள் வீரர்களும் விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவுக்காக விளையாட வேண்டுமெனில் ஜஸ்ப்ரித்பும்ரா தான் ஏதேனும் வழியில் தம்மை மாற்ற வேண்டும் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். அதனை இந்த இங்கிலாந்து தொடர் நிரூபணமாக்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “பெரிய பெயர்களைக் கொண்ட வீரர்களைப் பொறுத்தவரை சில கடினமான முடிவுகளை எடுக்க இந்திய தேர்வாளர்களை இது (இங்கிலாந்து டெஸ்ட் தொடர்) தைரியப்படுத்தும். இந்தத் தொடர் அவர்களுக்கு ஒரு சிறந்த பாடமாக அமைந்தது, ஏனெனில் விராட், ரோகித், புஜாரா, ஷமி ஆகியோர் மட்டுமின்றி பும்ராவும் இல்லாமல் இங்கிலாந்தில் நாம் 2 மகத்தான வெற்றிகளைப் பெற்றுள்ளோம். இது நமக்கு விளையாட்டில் தவிர்க்க முடியாத பெரியவர் யாரும் கிடையாது என்பதை நினைவூட்டுகிறது.
இந்தியா இப்படித்தான் பும்ராவை கையாள வேண்டும். அவரால் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளுக்கு மேல் அல்லது சில நேரங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட போட்டிகளில் விளையாட முடியாவிட்டால், அவர் உங்கள் முன்னணி தேர்வாக இருக்கக்கூடாது. சிறப்பாக செயல்பட ஆர்வமுள்ள திறமையான வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இது அத்தகைய உற்சாகமான வீரர்களை இன்னும் ஊக்குவிக்கும்.
பும்ராவை பொறுத்த வரை நானும் அவருடைய ரசிகன். அவர் உண்மையிலேயே இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சேவை செய்ய விரும்பினால் நிலைத்தன்மை அவருக்கு அவசியம். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு சிறந்த விளையாட்டு வீரரின் உண்மையான சோதனை 100 சதவீத உடற்தகுதி இல்லாதபோதும் அணிக்கு பங்களிப்பதாகும். எனவே இந்திய கிரிக்கெட் பும்ராவுக்காக மாற கூடாது. இந்தியாவுக்காக பும்ரா தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். அதற்காக சில கடினமான முடிவுகள் அல்லது உடற்தகுதியில் கடினமாக உழைப்பது போன்றவற்றை அவர் செய்ய வேண்டும்” என்று கூறினார்.






