அன்று விமர்சனம்.. இன்று பாராட்டு- ஹர்ஷித் ராணாவை புகழ்ந்த ஸ்ரீகாந்த்


அன்று விமர்சனம்.. இன்று பாராட்டு- ஹர்ஷித் ராணாவை புகழ்ந்த ஸ்ரீகாந்த்
x

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இதில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவர்களில் 236 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ரென்ஷா 56 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா - விராட் கோலி ஜோடி சிறப்பாக ஆடி வெற்றியை பெற்று கொடுத்தது. வெறும் 38.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் அடித்த இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 121 ரன்களுடனும், விராட் கோலி 74 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

முன்னதாக இந்த தொடரில் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா தேர்வு செய்யப்பட்டதை முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்தார்.

இது தொடர்பாக அவர், “தற்போது இந்திய அணியில் ஒரே ஒரு நிரந்தர வீரர்தான் இருக்கிறார். அவர் எதற்கு இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. சிலர் நன்றாக ஆடினாலும் அணியில் இடமில்லை. சிலர் சரியாக ஆடாவிட்டாலும் அணியில் இடம் கிடைக்கிறது. அணிக்கு தேர்வாக வேண்டும் என்றால் கம்பீருக்கு ஆமாம் சாமி போட வேண்டும் போல” என ஸ்ரீகாந்த் கூறியிருந்தார்.

ஸ்ரீகாந்தின் இந்த கருத்திற்கு பதிலடி கொடுத்த கவுதம் கம்பீர், “யூ-டியூப் சேனலுக்காக ஒரு இளம் வீரரைக் குறிவைப்பது வெட்கக்கேடானது” என ஸ்ரீகாந்த் பெயரை குறிப்பிடாமல் கடுமையாக சாடினார்.

இருப்பினும் ஆஸ்திரேலிய தொடரில் தனக்கு கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி கொண்ட ராணா 2வது போட்டியில் முக்கியமான தருணத்தில் 24 ரன்கள் எடுத்தார். அத்துடன் கடைசிப் போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் அன்று விமர்சித்த ஸ்ரீகாந்த் இந்த தொடரின் முடிவில் ஹர்ஷித் ராணாவை புகழ்ந்து பேசியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், “இன்று ஹர்ஷித் ராணா அனைவரின் பாராட்டுக்கும் உரியவர். உங்களை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆம், நான் உங்களை நிறைய விமர்சித்தேன், ஆனால் நாளின் இறுதியில், நீங்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டீர்கள். கடந்த போட்டியில் பேட்டிங்கில் அடித்த முக்கிய ரன்கள் மற்றும் முதல் ஸ்பெல் பவுலிங் ஆகியவற்றால் அவர் தனது நம்பிக்கையை மீண்டும் பெற்றுள்ளார். அவர் இந்த வழியில் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறாரோ, அவ்வளவு நம்பிக்கையுடன் அவர் தொடர்ந்து பந்து வீசுவார்.

இன்று (கடைசி போட்டி) அவர் மிகவும் தன்னம்பிக்கை கொண்ட பந்து வீச்சாளராகத் தெரிந்தார். ஹர்ஷித் ராணா சிறப்பாக பந்து வீசினார். ஒருநாள் போட்டியில் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்துவது ஒரு பெரிய சாதனை. எனக்கு மிகவும் பிடித்தது ஓவனின் விக்கெட். அது ஒரு சிறந்த பந்து வீச்சு. அவர் அற்புதமான லைன் அண்ட் லென்த்தில் பந்து வீசினார். கடந்த போட்டியில் அவர் டெத் ஓவர்களில் மோசமாக பந்து வீசினார், ஆனால் இந்த போட்டியில், டெத் ஓவர்களிலும் மிகச்சிறப்பாக பந்து வீசினார். இன்று அவர் அதிகம் ஷார்ட், ஸ்லோ பந்துகளைப் போடவில்லை” என்று கூறினார்.

1 More update

Next Story