'ஐ.பி.எல்.2025-ன் சிறந்த ஷாட்' ஸ்ரேயாஸ் ஐயருக்கு டி வில்லியர்ஸ் பாராட்டு


ஐ.பி.எல்.2025-ன் சிறந்த ஷாட் ஸ்ரேயாஸ் ஐயருக்கு டி வில்லியர்ஸ் பாராட்டு
x

மும்பைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

கேப்டவுன்,

10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது. இதில் அகமதாபாத்தில் நேற்றிரவு நடைபெற்ற இறுதிப்போட்டியை எட்டும் மற்றொரு அணி எது என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்றில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

மழை காரணமாக 2¼ மணி நேரம் தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா தலா 44 ரன்கள் அடித்தனர். பஞ்சாப் தரப்பில் அஸ்மத்துல்லா ஓமர்சாய் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 204 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் 19 ஓவர்களில் 5 விக்கெட்டுககு 207 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. பஞ்சாப் தரப்பில் ஸ்ரேயாஸ் ஐயர் 87 ரன்கள் அடித்து அசத்தினார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

முன்னதாக இந்த ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா வீசிய யார்க்கர் பந்தை ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக எதிர்கொண்டு தேர்டுமேன் திசையில் பவுண்டரிக்கு ஓடவிட்டார்.

இந்நிலையில் பும்ராவின் யார்க்கர் பந்தில் ஸ்ரேயஸ் ஐயர் அடித்த இந்த ஷாட்தான் நடப்பு ஐ.பி.எல். தொடரின் சிறந்த ஷாட் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "என்னை பொறுத்த வரை ஐ.பி.எல். 2025 தொடரின் சிறந்த ஷாட் இதுதான். பும்ரா வீசிய அந்த யார்க்கர் மிடில்-ஸ்டம்பை உடைக்கும் அளவிற்கு வந்தது. அது உண்மையில் பேட்ஸ்மேனின் கால் விரலை உடைக்கும் அளவிற்கு வந்தது. நீங்கள் அதை தடுக்க முடியாது.

நான் அதை எதிர்கொண்டிருந்தால் கண்டிப்பாக போல்டாகி இருப்பேன். ஆனால் ஸ்ரேயாஸ் அதில் பவுண்டரி அடித்து, உலகின் சிறந்த பந்து வீச்சாளருக்கு நேரடியாக அழுத்தம் கொடுக்கிறார். இது அற்புதமான பேட்டிங். இது முரட்டுத்தனமான வலிமை மற்றும் பலம். ஸ்ரேயாஸ் என்ன ஒரு அற்புதமான வீரர்!" என்று கூறினார்.

1 More update

Next Story