பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றாலும்.... - பஞ்சாப் பயிற்சியாளர் பேட்டி

Image Courtesy: @IPL
நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்றது.
ஜெய்ப்பூர்,
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் எடுத்தார்.
பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங், மார்கோ ஜான்சென், விஜய்குமார் வைஷாக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து 185 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணி 18.3 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 187 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி முதலாவது தகுதி சுற்றில் விளையாட உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஸ்ரேயாஸ் ஐயருடன் சேர்ந்து மீண்டும் வேலை செய்வதில் நான் ஆர்வத்துடன் இருந்தேன். அதற்காக ஏலத்தில் அவருக்கு எவ்வளவு பணம் செலவழிக்க தயாராக இருக்கிறேன் என்பதிலும் தெளிவு இருந்தது.
டெல்லி அணியில் இருந்த போது எங்களுக்கிடையே நல்ல நட்புறவு ஏற்பட்டது. அவருடைய தலைமையில் டெல்லி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு சென்றது. அந்த வகையில் ஒரு வீரராகவும், நபராகவும் அவரை நான் நீண்ட காலம் அறிந்திருக்கிறேன். அவர் மிகவும் தரமான வீரர். நீங்கள் பஞ்சாப் போன்ற அணியில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினால் அதற்கு தரமான நபர்களைச் சுற்றி புதிய கலாச்சாரத்தை உருவாக்க முயற்சிக்க வேண்டும். அதுவே உங்களுக்கு தேவை.
எங்கள் அணியில் இருக்கும் ஒவ்வொருவரும் ஸ்ரேயாஸ் பற்றி நல்ல அபிப்பிராயத்தைக் கொடுப்பார்கள். ஏனெனில், அவர்களுடன் அவர் நிறைய நேரத்தை செலவிட்டுள்ளார். அவர்களுக்கு அவர் தேவைப்படும் நேரத்தில் உத்வேகத்தைக் கொடுக்கிறார். அதுவே நல்ல லீடருக்கான அறிகுறி. எங்களுடைய கடின உழைப்பு இது போன்ற நல்ல வெற்றிகளைக் கொடுக்கிறது.
நாங்கள் அனைவரும் ஒரே பக்கத்தில் ஒரே பாதையில் செல்கிறோம். இதுவரை நாங்கள் உண்மையாக எதையும் சாதிக்கவில்லை. பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றாலும் கோப்பையை வெல்வதே உண்மையான சாதனை என்று எங்கள் வீரர்களிடம் நான் கூறியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.






