உலகக் கோப்பை கனவு நனவானது எப்படி? மனம் திறந்த ஹர்மன்பிரீத் கவுர்

இந்திய அணி 52 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது
மும்பை,
13-வது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 52 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 52 ஆண்டு கால உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி கோப்பையை உச்சி முகர்வது இதுவே முதல்முறையாகும்.
இந்த நிலையில் உலகக் கோப்பை வெற்றி எப்படி சாத்தியமானது என்பது குறித்து ஹர்மன்பிரீத் கவுர் கிரிக்கெட் வாரிய இணையதளத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது,
சிறுவயதில் விருப்பு, வெறுப்புகள் என்ன என்பதை புரிந்துகொள்ள தொடங்கியதில் இருந்து எப்போதும் எனது கையில் ஒரு பேட் இருப்பதை பார்க்கிறேன். எனது தந்தையின் விளையாட்டு உபகரணங்கள் உள்ள பையில் இருந்து ஒரு பேட்டை எடுத்து விளையாடியது இன்னும் நினைவில் உள்ளது. அந்த பேட் மிகவும் நீளமாக இருந்தது. ஒரு நாள் எனது தந்தை அந்த பேட்டை வெட்டி சிறியதாக்கி தந்தார். அந்த பேட்டை கொண்டு நான் விளையாடி இருக்கிறேன். நாங்கள் டி.வி.யில், இந்திய அணி விளையாடுவதையோ அல்லது உலகக் கோப்பை போட்டியையோ பார்க்கும் போதெல்லாம் எனக்கும் இது போன்று விளையாட வாய்ப்பு கிடைக்குமா? ஏன நினைத்து பார்த்து இருக்கிறேன். ஆனால் அந்த சமயத்தில் பெண்கள் கிரிக்கெட் குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
இந்த நீல நிற சீருடையை அணியும் வாய்ப்பு எப்போது கனியும்? என கனவு கண்டு கொண்டிருந்தேன். பெண்கள் கிரிக்கெட்டை பற்றியே அறிந்திராத ஒரு இளம் பெண், ஒரு நாள் நாட்டில் கிரிக்கெட்டின் முகத்தையே மாற்ற வேண்டும் என கனவு கண்டிருக்கிறாள் என்றால், அது தான் இங்கு முக்கியமானது. இவை எல்லாம், நீங்கள் ஒரு போதும் கனவு காண்பதை நிறுத்தக்கூடாது என்பதையே காட்டுகிறது. உங்கள் விதி உங்களை எங்கு கொண்டு செல்லும் என்பது உங்களுக்கு தெரியாது. அது எப்போது நடக்கும், எப்படி நடக்கும் என நீங்கள் ஒரு போதும் நினைக்கமாட்டீர்கள். ஆனால் இது நடக்கும் என்று மட்டுமே நம்புவீர்கள். எனவே இது சாத்தியமாகும் (உலகக் கோப்பை வெற்றி) என்பதே எனது தன்னம்பிக்கை என நினைக்கிறேன். அது இப்போது சரியாக நடந்துள்ளது
தனிப்பட்ட முறையில் உலகக் கோப்பையை வென்ற அந்த தருணம் மிகவும் உணர்வுபூர்வமானது. ஏனெனில் இது தான் எனது சிறுவயது கனவு. கிரிக்கெட் விளையாடத் தொடங்கியதில் இருந்தே ஒரு நாளில் உலகக் கோப்பையை தூக்கிப்பிடிக்க வேண்டும் என்பதே கனவாக இருந்தது. அதுவும் அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்தால், அந்த வாய்ப்பை நழுவவிட்டு விடக்கூடாது. இவற்றை எல்லாம் எனது மனதின் ஆழத்தில் இருந்து சொல்லி இருக்கிறேன். கடவுள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக கேட்டார். இது ஒரு மந்திரம் மாதிரி. எப்படி திடீரென எல்லாம் கச்சிதமாக நடந்து முடிந்தது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
எது எப்படியோ இறுதியாக நாங்கள் உலக சாம்பியனாகி விட்டோம். இப்போது மிகவும் நிம்மதியாக, பணிவாக, இந்த அணியை வழங்கிய கடவுளுக்கு நன்றியுடைவளாக இருக்கிறேன். அந்த தருணத்தை அனுபவித்து வாழ்கிறோம்.
இவ்வாறு ஹர்மன்பிரீத் கவுர் கூறியுள்ளார்.






