கோப்பையை கையில் ஏந்துவோம் என்று உறுதியாக நம்புகிறேன் - ஹர்மன்ப்ரீத் கவுர்


கோப்பையை கையில் ஏந்துவோம் என்று உறுதியாக நம்புகிறேன் - ஹர்மன்ப்ரீத் கவுர்
x

Image Courtesy: @ICC

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது.

மும்பை,

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இந்தியாவில் மகளிர் உலகக் கோப்பை அரங்கேறுவது இது 4-வது முறையாகும்.

இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்தியாவில் பெங்களூரு, கவுகாத்தி, விசாகப்பட்டினம், இந்தூரிலும், இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் மொத்தம் 31 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன. பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கையில் இடம் பெறுகின்றன. செப்.30-ந்தேதி பெங்களூருவில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.

உலகக் கோப்பை போட்டி தொடங்குவதற்கு இன்னும் 50 நாட்கள் மட்டுமே இருப்பதை குறிக்கும் கவுண்ட்டவுன் நிகழ்ச்சி மும்பையில் நேற்று நடந்தது. இதில் ஐ.சி.சி. தலைவர் ஜெய்ஷா, தலைமை செயல் அதிகாரி சஞ்ஜோக் குப்தா, இந்திய முன்னாள் வீரர் யுவராஜ்சிங், முன்னாள் வீராங்கனை மிதாலிராஜ், இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், துணை கேப்டன் மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறியதாவது, உள்ளூர் ரசிகர்களின் முன் விளையாடுவது எப்போதும் சிறப்பு வாய்ந்தது. இந்த முறை எங்களது 100 சதவீத பங்களிப்பை வழங்கி தடைகளை தகர்த்தெறிந்து கோப்பையை கையில் ஏந்துவோம் என்று உறுதியாக நம்புகிறேன்.

அந்த தருணத்துக்காகத்தான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். உலகக் கோப்பை போட்டிகள் எப்போதும் சிறப்பு வாய்ந்தவை. அதில் தேசத்துக்காக விசேஷமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். சாதனை நாயகன் யுவராஜ் சிங்கை (2011-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின் தொடர்நாயகன்) பார்க்கும் போதெல்லாம் எனக்கு நிறைய உத்வேகம் கிடைக்கிறது.

உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆட உள்ளோம். அவர்களுக்கு எதிராக விளையாடுவது எப்போதும் சவால் ஆனது. ஏனெனில் அவர்கள் கடும் போட்டி அளிக்கக்கூடியவர்கள். இதன் மூலம் நாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம், ஒரு அணியாக எந்த பகுதியில் முன்னேற்றம் காண வேண்டும் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

அந்த தொடர் எங்களுக்கு நிச்சயம் அதிக நம்பிக்கையை தரும். எங்களது பயிற்சி முகாமில் நிறைய உழைப்பை கொட்டுகிறோம். அதற்குரிய பலன் கிடைத்து வருகிறது. அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை கைப்பற்றினோம். இதனால் எங்களது நம்பிக்கை உயர்ந்த நிலையில் இருக்கிறது. கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளாக எப்படி விளையாடுகிறோமோ அதை தொடர விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story