இந்தியா அபார பேட்டிங்.. முதல் இன்னிங்சில் 471 ரன்கள் குவிப்பு


இந்தியா அபார பேட்டிங்.. முதல் இன்னிங்சில் 471 ரன்கள் குவிப்பு
x
தினத்தந்தி 21 Jun 2025 6:39 PM IST (Updated: 21 Jun 2025 9:32 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 147 ரன்கள் அடித்தார்.

லீட்ஸ்,

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்சில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 359 ரன்கள் குவித்திருந்தது. கேப்டன் சுப்மன் கில் 127 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 65 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஜெய்ஸ்வால் 101 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்த சூழலில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. சுப்மன் கில், ரிஷப் பண்ட் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். சிறப்பாக ஆடிய இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு தண்ணி காட்டினர். இதில் கில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த பண்ட் சிறிது அதிரடி காட்டினார்.

99 ரன்களில் இருந்தபோது பண்ட் சிக்சர் அடித்து தனது சதத்தை பூர்த்தி செய்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 7-வது சதம் இதுவாகும். பண்ட் சதமடித்த சிறிது நேரத்திலேயே கில் 147 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கருண் நாயர் டக் அவுட்டில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவரைதொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பண்ட் 134 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த ஷர்துல் தாகூர் ஒரு ரன்னில் நடையை கட்டினார்.

இந்திய அணியில் ஜெய்ஸ்வால், கில், பண்ட், கே.எல்.ராகுல், தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது. பின்வரிசை 6 பேட்ஸ்மேன்களில் ஜடேஜா (11 ரன்கள்) மட்டுமே இரட்டை இலக்கத்தை தொட்டார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்சன் மற்றும் கருண் நாயர் இருவரும் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.

முடிவில் 113 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்தியா முதல் இன்னிங்சில் 471 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஷ் டங் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை விளையாட உள்ளது.

1 More update

Next Story