சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்: வாட்சன், பென் டங்க் அதிரடி சதம்.. இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி


சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்: வாட்சன், பென் டங்க் அதிரடி சதம்.. இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி
x

image courtesy:twitter/@imlt20official

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

வதோதரா,

ஓய்வு பெற்ற வீரர்களுக்கான முதலாவது சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் வதோதராவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷான் மார்ஷ் - ஷேன் வாட்சன் ஆகியோர் களமிறங்கினர். இதில் மார்ஷ் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜோடி சேர்ந்த வாட்சன் - பென் டங்க் கூட்டணி இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. இந்திய பவுலர்களின் பந்துவீச்சை சிக்சருக்கும் பவுண்டரிக்கும் விரட்டிய இருவரும் சதமடித்து அசத்தினர்.

இவர்களின் விக்கெட்டை இறுதி வரை இந்திய பவுலர்களால் வீழ்த்த முடியவில்லை. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த ஆஸ்திரேலியா 269 ரன்கள் குவித்தது. வாட்சன் 110 ரன்களுடனும், பென் டங்க் 132 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இதனையடுத்து 270 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சச்சின் மட்டுமே தனி ஆளாக போராட மறுமுனையில் அவருக்கு சரியான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.

20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய இந்திய அணி 174 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் சச்சின் 64 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் சேவியர் டோஹர்ட்டி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

1 More update

Next Story