பெங்களூரு அணியிலிருந்து வெளியேறுவது கடினமாக உள்ளது - சிராஜ் உருக்கம்

image courtesy: PTI
18-வது ஐ.பி.எல். சீசனில் சிராஜ், குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார்.
காந்திநகர்,
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நாளை (சனிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன்கார்டனில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ெகால்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதையொட்டி 10 அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக இந்த சீசனுக்கான வீரர்களின் மெகா ஏலம் கடந்த வருடம் நடைபெற்றது. இதில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜை ரூ.12.25 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியது.
இவர் கடந்த காலங்களில் விராட் கோலியுடன் இணைந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார். அந்த வாய்ப்பில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக தற்போது இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.
அறிமுகம் ஆன புதிதில் ரன்களை வாரி வழங்கியதால் ரசிகர்களால் கிண்டலடிக்கப்பட்ட அவருக்கு விராட் கோலி பெருமளவில் ஆதரவு கொடுத்தார். அதன் பின் எழுச்சி பெற்ற அவர் தற்போது சிறப்பாக செயல்பட்டு முன்னணி வீரராக வலம் வருகிறார்.
இந்நிலையில் பெங்களூரு அணியிலிருந்து வெளியேறுவது உணர்வுபூர்வமாக கடினமாக இருப்பதாக சிராஜ் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். ஏனெனில் கடின காலங்களில் விராட் கோலி அவருக்கு ஆதரவு கொடுத்ததாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "புதிய சீசனுக்கு முன்னதாக குஜராத்தில் இணைவது ஒரு நல்ல உணர்வை கொடுக்கிறது. அதேவேளை கடினமான காலங்களில் விராட் பாய் எனக்கு நிறைய ஆதரவளித்ததால், ஆர்சிபியை விட்டு வெளியேறுவது எனக்கு கொஞ்சம் உணர்வுபூர்வமாக கடினமாக உள்ளது. ஆனால் இங்கேயும் கில்லின் தலைமையின் கீழ் எங்களுக்கு ஒரு அருமையான அணி உள்ளது" என்று கூறினார்.
இந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் ஆட்டம் ஏப்ரல் 2-ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.