அவருடன் இணைந்து விளையாடுவது மிகச்சிறப்பாக இருக்கிறது - ரிக்கெல்டன் நெகிழ்ச்சி


அவருடன் இணைந்து விளையாடுவது மிகச்சிறப்பாக இருக்கிறது - ரிக்கெல்டன் நெகிழ்ச்சி
x
தினத்தந்தி 2 May 2025 2:28 PM IST (Updated: 2 May 2025 2:31 PM IST)
t-max-icont-min-icon

ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ரிக்கெல்டன் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

ஜெய்ப்பூர்,

ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு நடந்த 50-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 217 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் ரிக்கெல்டன் 61 ரன்களும், ரோகித் 53 ரன்களும், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலா 48 ரன்களும் அடித்தனர்.

பின்னர் 218 ரன் இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணி 16.1 ஓவர்களில் 117 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் மும்பை 100 ரன் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சர் 30 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் டிரென்ட் பவுல்ட், கரண் ஷர்மா தலா 3 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெட்டும், தீபக் சாஹர், ஹர்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். ரிக்கெல்டன் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இந்நிலையில் இந்த போட்டிக்குப்பின் ஆட்ட நாயகன் ரிக்கெல்டன் அளித்த பேட்டியில், "என்னுடைய குடும்பத்தினர் இந்தியா வந்துள்ளார்கள். அவர்கள் முன்னிலையில் என்னுடைய சிறப்பான ஆட்டம் வெளிவந்ததில் மிகவும் மகிழ்ச்சி. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இது போன்ற பங்களிப்பை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மும்பை இந்தியன்ஸ் சிறந்த அணி. சரியான நேரத்தில் எங்களது அணி நல்ல பார்மிற்கு வந்துள்ளது மிகவும் சிறப்பான ஒன்று.

ரோகித் சர்மாவுடன் இணைந்து விளையாடுவது மிகச்சிறப்பாக இருக்கிறது. இந்த தொடரின் ஆரம்பத்தில் எங்கள் இருவருக்கும் சரியான தொடக்கம் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது அனைத்தும் சரியாகி மிகச் சிறப்பாக விளையாடி வருகிறோம். ரோகித் சர்மாவுடன் விளையாடும்போது உண்மையிலேயே நல்ல உணர்வு இருக்கிறது.

இந்த போட்டியில் பாண்ட்யா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆடிய விதம்தான் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது. இந்தியாவிற்கு வந்து இங்குள்ள சூழ்நிலைகளை புரிந்து கொண்டு எனது பேட்டிங் ஸ்டைலை மாற்ற கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது. தற்போது அனைத்தும் சரியாக நடந்து வருகிறது. என்னிடம் கருத்து கேட்கப்படும் போதெல்லாம், நான் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆனால் அணியின் பின்னால் உள்ள மூளை நம்பமுடியாத அளவிற்கு சக்திவாய்ந்தது. எனவே நாங்கள் அவர்களை அவர்களின் வேலையைச் செய்ய விடுகிறோம். நாங்கள் எங்கள் வேலைகளைச் செய்கிறோம்" என்று கூறினார்.

1 More update

Next Story