இந்திய அணியின் தோல்விக்கு ஜடேஜாவும்.. - இர்பான் பதான் குற்றச்சாட்டு


இந்திய அணியின் தோல்விக்கு ஜடேஜாவும்.. - இர்பான் பதான் குற்றச்சாட்டு
x

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.

மும்பை,

ராய்ப்பூரில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 358 ரன்கள் குவித்த போதிலும் அந்த இலக்கை தென் ஆப்பிரிக்கா 49.2 ஓவர்களில் எட்டிப்பிடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் விராட் கோலி (102 ரன்), ருதுராஜ் கெய்க்வாட் (105 ரன், 83 பந்து, 12 பவுண்டரி, 4 சிக்சர்) சதம் நொறுக்கியும் பலன் இல்லை.

இந்திய அணியின் இந்த தோல்விக்கு பனிப்பொழிவு முக்கிய காரணமாக அமைந்ததாக பலரும் கூறி வருகின்றனர். பனிப்பொழிவின் காரணமாக பந்து வீச்சாளர்களால் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பனிப்பொழிவை தாண்டி இந்திய அணியின் தோல்விக்கு ஜடேஜாவும் ஒரு காரணம் என்று முன்னாள் வீரரான இர்பான் பதான் குற்றம் சாட்டியுள்ளார். இந்த போட்டியில் 7-வது வரிசையில் களமிறங்கிய ஜடேஜா 27 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 24 ரன்கள் மட்டுமே அடித்தார். அவரது மெதுவான பேட்டிங் இந்திய அணியின் தோல்விக்கு ஒரு காரணம் என இர்பான் பதான் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “இந்த போட்டியில் எனக்கு ஒரு பிரச்சினை இருந்தது. அது ரவீந்திர ஜடேஜாவின் இன்னிங்ஸ்தான். வர்ணனையின்போது இது இந்தியாவை பாதிக்கக்கூடும் என்று நாங்கள் கூறினோம். இறுதியில் அதுவே தோல்விக்கு காரணமாக மாறியது. ஏனெனில் 300 ரன்களுக்கு மேல் இந்திய அணி எடுத்திருக்கும்போது பின் வரிசையில் விளையாடும் நீங்கள் 88 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினால் அது சரியானது கிடையாது. அவர் மெதுவாக விளையாடியது கூட பரவாயில்லை. ஆனால் ஜடேஜாவின் நோக்கம் ஏமாற்றமளிக்கிறது.

நான் இதை ஆட்டம் முடிந்த பின் சொல்லவில்லை. வர்ணனையின் போதே சொன்னோம். பனிப்பொழிவு இருக்கும் மைதானங்களில் இரண்டாவதாக பந்துவீசும் அணிக்கு பிரச்சனை அதிகமாக இருக்கும். எனவே முதலில் விளையாடும்போது பெரிய ரன்களை குவித்திருக்க வேண்டும். அந்த வகையில் இந்த போட்டியில் ஜடேஜா அதிரடியாக விளையாடாதது நமக்கு ஏமாற்றமளிக்கும் காரணியாக மாறியது” என்று கூறினார்.

1 More update

Next Story