நியூசிலாந்து வெற்றி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் சரிவை சந்தித்த இந்தியா

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.
வெலிங்டன்,
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் வெலிங்டனில் நடைபெற்ற இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி இன்று நிறைவடைந்தது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டி முடிவடைந்ததை அடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் ஆஸ்திரேலிய அணி 100 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது. தென் ஆப்பிரிக்கா 75 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்தில் நீடிக்கிறது.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டில் வெற்றி பெற்ற நியூசிலாந்து (66.67 சதவீதம்) அணி சில புள்ளிகள் கூடுதலாக பெற்ற நிலையில் 6-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதனால் 3-வது இடத்தில் இருந்த இலங்கை அணி (66.67 சதவீதம்) 4-வது இடத்திற்கு இறங்கியுள்ளது. அதேபோல் பாகிஸ்தான் (50.00 சதவீதம்) மற்றும் இந்தியா (48.15 சதவீதம்) அணிகளும் தலா ஒரு இடம் சரிந்து 5 மற்றும் 6-வது இடத்திற்கு இறங்கியுள்ளன.
இங்கிலாந்து (30.95 சதவீதம்) 7-வது இடத்திலும், வங்காளதேசம் (16.67 சதவீதம்) 8-வது இடத்திலும் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் (4.76 சதவீதம்) கடைசி இடத்திலும் உள்ளன.






