இங்கிலாந்திலேயே அடுத்த 3 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி - ஐ.சி.சி. அறிவிப்பு

image courtesy:ICC
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) ஆண்டு பொதுக்குழு கூட்டம் சிங்கப்பூரில் கடந்த 4 நாட்கள் நடந்தது.
சிங்கப்பூர்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) ஆண்டு பொதுக்குழு கூட்டம் சிங்கப்பூரில் கடந்த 4 நாட்கள் நடந்தது. இதில் சர்வதேச கிரிக்கெட்டை மேலும் மேம்படுத்துவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
மேலும், இந்த கூட்டத்தில் அடுத்து வரும் 3 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகளை 2027, 2029, 2031-ம் ஆண்டுகளில் இங்கிலாந்தில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதுவரை இங்கிலாந்தில் நடந்த 3 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகளும் சிறப்பாக நடந்ததுடன் நல்ல வரவேற்பையும் பெற்றதால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐ.சி.சி.யின் புதிய அசோசியேட் உறுப்பினர்களாக ஜாம்பியா, திமோர் லெஸ்டி ஆகிய நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் அமெரிக்க கிரிக்கெட் அமைப்பில் நிர்வாக சீர்திருத்தம் செய்ய மேலும் 3 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த காலத்துக்குள் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நிர்வாகிகள் தேர்தலை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.






