தயவு செய்து அவரை விளையாட விடுங்கள் - இந்திய வீரருக்கு அஸ்வின் ஆதரவு


தயவு செய்து அவரை விளையாட விடுங்கள் - இந்திய வீரருக்கு அஸ்வின் ஆதரவு
x

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.

சென்னை,

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி மெல்போர்னில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 18.4 ஓவர்களில் 125 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 68 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் 126 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் அடித்து எளிதில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 46 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் பும்ரா, வருண் சக்ரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஹேசில்வுட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த 2 போட்டிகளிலும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக ஹர்ஷித் ராணா இடம்பெற்ற பலரது மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக 100 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்த அர்ஷ்தீப் சிங்குக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது பலரது மத்தியில் பேசு பொருளாகியுள்ளது.

இருப்பினும் இந்திய அணியின் பேட்டிங் வரிசையை ஆழப்படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அர்ஷ்தீப் சிங்கை கழற்றி விட்டுள்ள கம்பீர், ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்பை வழங்கியுள்ளார். அந்த வாய்ப்பில் 2-வது போட்டியில் ராணா 33 ரன்கள் அடித்தும் அது இந்தியாவின் வெற்றிக்கு உதவவில்லை.

இந்நிலையில் அர்ஷ்தீப் சிங் பிளேயிங் லெவனில் விளையாடுவதற்கு 100 சதவீதம் தகுதியானவர் என்று இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். எனவே அவரை தொடர்ந்து விளையாட விடுங்கள் என்று அவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “பும்ரா விளையாடினால், உங்கள் வேகப்பந்து வீச்சாளர்களின் பட்டியலில் அர்ஷ்தீப் சிங்கின் பெயர் 2-வதாக இருக்க வேண்டும். பும்ரா விளையாடவில்லை என்றால், அந்த பட்டியலில் அர்ஷ்தீப் உங்கள் முதல் வாய்ப்பாக மாறுவார். இந்த அணியில் அர்ஷ்தீப் சிங் எப்படி பிளேயிங் லெவனில் இருந்து தவறுகிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

எனக்கு அது உண்மையில் புரியவில்லை. நிச்சயமாக, ஹர்ஷித் ராணா பேட்டிங்கில் நன்றாக ஆடினார். ஆனால் இது அவரைப் பற்றியது அல்ல. இது அர்ஷ்தீப் சிங்கைப் பற்றியது. 2024 டி20 உலகக் கோப்பையில் அபாரமாக விளையாடிய பின்பும் அர்ஷ்தீப் தொடர்ச்சியாக பெஞ்சில் அமர வைக்கப்படுகிறார். இப்படி செய்தால் அவர் பார்மை இழந்து விடுவார். ஆசிய கோப்பையில் இப்படி செய்த காரணத்தால் அவர் ஆரம்பத்தில் தடுமாறினார். அப்படி உங்களுடைய சாம்பியன் பவுலர் தடுமாறுவது சரியல்ல. தயவுசெய்து அவரை விளையாட விடுங்கள்” என்று கூறினார்.

1 More update

Next Story