பஞ்சாப் அணியால் கோப்பையை வெல்ல முடியாது.. காரணம் இதுதான் - மனோஜ் திவாரி

கொல்கத்தா - பஞ்சாப் ஆட்டம் மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது.
கொல்கத்தா,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்றிரவு நடந்த 44-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது.
பின்னர் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி முதல் ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. மழை பலமாக கொட்டியதால் மைதானத்தில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியது. மழை நீடித்ததால் போட்டியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இரவு 11 மணியளவில் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தபோது நல்ல பார்மில் உள்ள இந்திய வீரர்களான நேஹல் வதேரா, ஷசாங்க் சிங் ஆகியோருக்கு முன்னதாக வெளிநாட்டு வீரர்களான மேக்ஸ்வெல், மார்கோ ஜான்சன் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோர் களமிறங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் நடப்பு தொடரில் சுமாரான பார்மில் உள்ள மேக்ஸ்வெல் 7 ரன்கள் (8 பந்துகள்) மற்றும் மார்கோ ஜான்சன் 3 ரன்கள் (7 பந்துகள்) மட்டுமே அடித்து இறுதி கட்டத்தில் பஞ்சாப் அணியின் ரன் வேகம் குறைந்ததில் முக்கிய பங்கு வகித்தனர்.
இந்நிலையில் பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களுக்குள் வந்தாலும் கோப்பையை வெல்ல முடியாது என்று இந்திய முன்னாள் வீரர் மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார். அதற்கு அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்தான் காரணம் என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்த சீசனில் பஞ்சாப் அணியால் கோப்பையை வெல்ல முடியாது என்று என் உள்ளுணர்வு சொல்கிறது. ஏனென்றால் இன்று அவர்கள் பேட்டிங் செய்யும்போது நான் பார்த்தது என்னவென்றால், பயிற்சியாளர் இந்திய பேட்ஸ்மேன்களான நேஹல் வதேரா மற்றும் ஷசாங்க் சிங்கை அனுப்பவில்லை. மாறாக அவர் தனது வெளிநாட்டு வீரர்களை நம்பினார். இது அவருக்கு இந்திய வீரர்கள் மீது உள்ள நம்பிக்கையின்மையை தெளிவாகக் காட்டியது. அவர் இந்த வழியில் தொடர்ந்தால், முதல் இரண்டு இடங்களில் தகுதி பெற்றாலும் கோப்பை அவர்களிடமிருந்து வெகு தொலைவில் உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.






