ரஞ்சி கிரிக்கெட்: தமிழகத்திற்கு எதிரான ஆட்டம்... 3ம் நாள் முடிவில் நாகாலாந்து 365/5


ரஞ்சி கிரிக்கெட்: தமிழகத்திற்கு எதிரான ஆட்டம்... 3ம் நாள் முடிவில் நாகாலாந்து 365/5
x

Image Courtesy: @TNCACricket

தினத்தந்தி 27 Oct 2025 6:45 PM IST (Updated: 27 Oct 2025 6:45 PM IST)
t-max-icont-min-icon

நாகாலாந்து அணி இன்னும் 147 ரன்கள் பின்னிலையில் உள்ளது.

பெங்களூரு,

91-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ‘எலைட்’ பிரிவில் இடம் பிடித்துள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் பெங்களூவில் நடைபெறும் ஆட்டம் ஒன்றில் (ஏ பிரிவு) தமிழ்நாடு- நாகாலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் ஜெயித்து முதலில் ஆடிய தமிழக அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 512 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இரட்டை சதம் அடித்த பிரதோஷ் ரஞ்சன் பால் 201 ரன்களுடனும், இந்திரஜித் 32 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆந்த்ரே சித்தார்த் 65 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நாகாலாந்து அணி நேற்றைய 2ம் நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் அடித்திருந்தது. தேகா நிஸ்சல் 80 ரன்களுடனும், யுகந்தர் சிங் 58 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தமிழக அணி தரப்பில் குர்ஜப்னீத் சிங் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். இந்நிலையில், இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெற்றது.

இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த நாகாலாந்து தரப்பில் யுகந்தர் சிங் 67 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து தேகா நிஸ்சல் உடன் இம்லிவதி லெம்தூர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்து கொண்டதோடு அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தது.

இறுதியில் இன்றைய 3ம் நாள் முடிவில் நாகாலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 127 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 365 ரன்கள் குவித்துள்ளது. நாகாலாந்து தரப்பில் தேகா நிஸ்சல் 161 ரன்னுடனும், இம்லிவதி லெம்தூர் 115 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

நாகாலாந்து அணி இன்னும் 147 ரன்கள் பின்னிலையில் உள்ளது. தமிழக அணி தரப்பில் குர்ஜப்னீத் சிங் 4 விக்கெட்டும், சந்திரசேகர் 1 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர். நாளை 4ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

1 More update

Next Story