இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: ஆஸ்திரேலிய அணியிலிருந்து முன்னணி வீரர் விடுவிப்பு

ஆஸ்திரேலியா - இந்தியா இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.
சிட்னி,
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானது. மெல்போர்னில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது போட்டி ஹோபர்ட்டில் நேற்று நடந்தது. இதில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்துள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி வருகிற 6-ம் தேதியும், 5-வது மற்றும் கடைசி போட்டி 8-ம் தேதியும் நடைபெற உள்ளன.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய டி20 தொடரில் இருந்து ஆஸ்திரேலிய முன்னணி வீரரான டிராவிஸ் ஹெட் விடுவிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளது. அதன்படி அவர் ஷெபீல்ட் ஷீல்டு தொடரில் விளையாட உள்ளார்.






