டி20 தொடர்: கில்லா..? சாம்சனா..? தொடக்க ஆட்டக்காரர் யார்...? சூர்யகுமார் யாதவ் பதில்


டி20 தொடர்: கில்லா..? சாம்சனா..?  தொடக்க ஆட்டக்காரர் யார்...? சூர்யகுமார் யாதவ் பதில்
x

இந்தியா - தென் ஆப்பிரிக்கா டி20 தொடர் நாளை தொடங்குகிறது.

கட்டாக்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்காவும் (2-0), அதன்பின் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்தியாவும் (2-1) கைப்பற்றின.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. அதன்படி இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி கட்டாக்கில் நாளை நடைபெற உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் அபிஷேக் சர்மாவுடன் மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கப்போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் அந்த இடத்திற்கு சுப்மன் கில் மற்றும் சஞ்சு சாம்சன் இடையே போட்டி நிலவுகிறது. இதில் சுப்மன் கில் இந்திய டி20 அணியின் துணை கேப்டனாகா இருப்பதால் அவருக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிகிறது.

இந்நிலையில் இந்த போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் கலந்துகொண்டார். அதில் அவர் கில் - சாம்சன் இருவரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கபோவது யார்? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், “சஞ்சு சாம்சனை பொறுத்தவரை அவர் அணிக்குள் வந்தபோது முன்வரிசையில் பேட்டிங் செய்தார். இப்போது விஷயம் என்னவென்றால், தொடக்க வீரர்களைத் தவிர, எல்லோரும் மிகவும் நெகிழ்வானவர்களாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

அவர் (சாம்சன்) தொடக்க ஆட்டக்காரராக மிகவும் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் சுப்மன் அவருக்கு முன் இலங்கைத் தொடரில் விளையாடியிருந்தார். எனவே, அவர் அந்த இடத்தைப் பிடிக்கத் தகுதியானவர். எனவே அவருக்குத்தான் நாங்கள் தொடக்க வீரருக்கான வாய்ப்பை வழங்குவோம்.

அதே வேளையில் சஞ்சு சாம்சன் எந்த இடத்திலும் களமிறங்கி விளையாட தயாராக இருக்கிறார். அதனால் நாங்கள் அவருக்கும் தொடர்ந்து வாய்ப்பினை வழங்குவோம். உண்மையில் எந்த ஒரு வீரரும் 3 முதல் 6 வரை எங்கும் பேட்டிங் செய்வதைப் பார்ப்பது நல்லது. எனவே, நான் அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் சொன்ன ஒரு விஷயம் இதுதான். தொடக்க வீரர்களைத் தவிர, அனைவரும் மிகவும் நெகிழ்வானவர்களாக இருக்க வேண்டும். சாம்சன் அவருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அங்கு விளையாடும் படி அவர் தன்னை தகவமைத்துக் கொள்வார்” என்று கூறினார்.

1 More update

Next Story