இந்திய அணியின் எதிர்கால சூப்பர் ஸ்டார் அந்த தமிழக வீரர்தான் - ஆகாஷ் சோப்ரா

சாய் சுதர்சனை இந்திய அணிக்குள் கொண்டுவர வேண்டும் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி சமீப காலங்களாக டெஸ்ட் போட்டிகளில் சொதப்பி வருகிறது. அண்மையில் முடிவடைந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பையில் தோல்வியடைந்ததன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதன் காரணமாக எதிர்வரும் டெஸ்ட் தொடர்களுக்கான இந்திய அணியில் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழக வீரரான சாய் சுதர்சனை அணிக்குள் கொண்டுவர வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "எதிர்கால டெஸ்ட் அணியில் கே.எல் ராகுல் மூத்த வீரராக இருப்பார். எனவே அவரை நாம் தொடர்ச்சியாக அணியில் வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோன்று என்னை பொறுத்தவரை ஜெய்ஸ்வாலுடன் தொடக்க வீரராக சாய் சுதர்சனை களமிறக்கலாம். ஏனெனில் அவர்கள் இருவரால் நல்ல தொடக்கம் கிடைக்கும். அதோடு விராட் கோலி ஓய்வு பெற்றவுடன் சுப்மன் கில் 4-வது இடத்திற்கு வரலாம். ஆனால் அவரது பார்ம் எப்படி இருக்கிறது என்பதை கணித்தே அந்த முடிவை எடுக்க வேண்டும். அதனை தொடர்ந்து ரிஷப் பண்ட் ஐந்தாவது இடத்தில் தொடர்வார்.
ரிஷப் பண்ட், சுப்மன் கில், ஜெய்ஸ்வால் ஆகிய மூவரும் பெரிய தூண்களாக இருப்பார்கள். அதே போன்று தமிழக வீரரான சாய் சுதர்சன் விளையாடி வரும் முறையை பார்க்கும்போது இந்திய அணியின் எதிர்கால சூப்பர் ஸ்டாராக அவர்தான் பேட்டிங் துறையில் இருப்பார் என்று கருதுகிறேன். என்னை பொறுத்தவரை அவருக்கு மூன்று வகையான போட்டிகளிலும் வாய்ப்பளிக்க வேண்டும்" என்று கூறினார்.






