சர்வதேச கிரிக்கெட்டிலும் என்னுடைய திட்டம் இதுதான் - அபிஷேக் சர்மா

image courtesy:PTI
லக்னோவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அபிஷேக் சர்மா ஆட்ட நாயகன் விருது வென்றார்.
லக்னோ,
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 61-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்ஷ் 65 ரன்களும், மார்க்ரம் 61 ரன்களும் அடித்தனர். ஐதராபாத் தரப்பில் இஷான் மலிங்கா 2 விக்கெட்டும், ஹர்ஷல் படேல், நிதிஷ்குமார் ரெட்டி, ஹர்ஷ் துபே தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 206 ரன் இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 206 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 59 ரன்கள் அடித்தார். லக்னோ தரப்பில் திக்வேஷ் ரதி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அபிஷேக் சர்மா ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்த ஆட்டத்தில் லக்னோ வீரர் திக்வேஷ் ரதி, அபிஷேக் சர்மாவின் விக்கெட்டை கைப்பற்றியவுடன் ஆக்ரோஷமாக கொண்டாடினார். இதனால் கோபமடைந்த அபிஷேக் சர்மா, திக்வேஷ் ரதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில் இந்த போட்டிக்குப்பின் ஆட்ட நாயகன் அபிஷேக் சர்மா அளித்த பேட்டியில், "ஆட்டம் முடிந்த பிறகு நான் அவரிடம் (திக்வேஷ் ரதி) பேசினேன். இப்போது எல்லாம் நன்றாக இருக்கிறது. நாங்கள் முதலில் பேட்டிங் செய்திருந்தால் வேறு திட்டம் வைத்திருந்தேன். இவ்வளவு பெரிய ஸ்கோரை துரத்த எங்களுக்கு ஒரு தெளிவான திட்டம் இருந்தது. 200 ரன்களை சேசிங் செய்யும்போது அதிரடியாக விளையாட வேண்டும்.
200 ரன்களுக்கு மேல் உள்ள இலக்கை துரத்தும் எந்த வீரரிடமும் நீங்கள் கேட்டால், பவர்பிளேயை நீங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள். நான் என்னை வெளிப்படுத்த விரும்பினேன். நான் நன்றாகச் செயல்பட்டால், அணியும் சிறப்பாகச் செயல்படும் என்பது எனக்குத் தெரியும். சர்வதேச கிரிக்கெட்டிலும் நான் வைத்திருந்த திட்டம் இதுதான். அது முதல் பந்திலிருந்தே அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்க வேண்டும் என்பதுதான்" என்று கூறினார்.






