முத்தரப்பு டி20 தொடர்: இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து இன்று மோதல்

Image Courtesy: @ZimCricketv
எல்லா ஆட்டங்களிலும் தோல்வியை தழுவிய ஜிம்பாப்வே அணி வெளியேறியது.
ஹராரே,
தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய 3 நாடுகள் இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரேவில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் நியூசிலாந்து அணி 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று முதலிடமும், தென்ஆப்பிரிக்கா 2 வெற்றி, 2 தோல்வியுடன் 2-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறின. எல்லா ஆட்டங்களிலும் தோல்வியை தழுவிய ஜிம்பாப்வே அணி வெளியேறியது.
இந்த நிலையில் சாம்பியன் பட்டம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. இதில் நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு லீக் ஆட்டங்களிலும் முறையே 21 ரன், 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மிட்செல் சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும்.
அதேநேரத்தில் வான்டெர் டஸன் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி முந்தைய தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற வரிந்து கட்டும். வலுவான இரு அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.






