விஜய் ஹசாரே கோப்பை: பஞ்சாப் அணியை வீழ்த்தி சவுராஷ்டிரா இறுதிப்போட்டிக்கு தகுதி

சவுராஷ்டிரா அணியில் சேத்தன் சகரியா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்
பெங்களூரு,
33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் பஞ்சாப் - சவுராஷ்டிரா அணிகள் மோதின.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற சவுராஷ்டிரா அணியின் கேப்டன் ஹார்விக் தேசாய் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் பஞ்சாப் அணி வீரர்கள் அதிரடியாக விளையாடினர். அந்த அணியில் அன்மோல்பிரீத் சிங், பிரப்சிம்ரன் சிங் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர் . அன்மோல்பிரீத் சிங் சதமடித்து அசத்தினார். பிரப்சிம்ரன் சிங் 87 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 291 ரன்கள் எடுத்தது. சவுராஷ்டிரா அணியில் சேத்தன் சகரியா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.தொடர்ந்து 292 ரன்கள் இலக்குடன் சவுராஷ்டிரா அணி விளையாடியது.
பின்னர் ஆடிய சவுராஷ்டிரா அணியின் தொடக்க வீரர் கேப்டன் ஹர்விக் தேசாய் 64 ரன்னில் (63 பந்து, 9 பவுண்டரி) குர்னோர் பிரார் பந்து வீச்சில் கேட்ச்சானார். அடுத்து பரேக் மன்கட், விஸ்வராஜ் ஜடேஜாவுடன் இணைந்தார். இருவரும் நேர்த்தியாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.
39.3 ஓவர்களில் சவுராஷ்டிரா அணி ஒரு விக்கெட்டுக்கு 293 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை பதம் பார்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 3-வது சதம் விளாசிய விஸ்வராஜ் ஜடேஜா 165 ரன்களுடனும் (127 பந்து, 18 பவுண்டரி, 3 சிக்சர்), பரேக் மன்கட் 52 ரன்களுடனும் (49 பந்து, 7 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். 165 ரன் குவித்த விஸ்வராஜ் ஜடேஜா ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா-விதர்பா அணிகள் மோதுகின்றன.






