இந்த தருணத்துக்காகத் தான் நீண்ட காலம் காத்திருந்தோம்: இந்திய கேப்டன் நெகிழ்ச்சி

இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக உலகக் கோப்பையை தட்டித்தூக்கியது.
மும்பை,
13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம், மும்பை புறநகரான நவிமும்பையில் உள்ள டி.எஸ். பட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் . இதில் தங்களது முதல் மகுடத்துக்காக இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மல்லுக்கட்டின. மழை காரணமாக ஆட்டத்தை தொடங்க 2 மணி நேரம் தாமதம் ஆனது. ஆனாலும் ஓவர் ஏதும் குறைக்கப்படவில்லை. இரு அணியிலும் அரையிறுதியில் ஆடிய வீராங்கனைகள் மாற்றமின்றி அப்படியே இடம் பெற்றனர். இதில் டாஸ் ஜெயித்த தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷபாலி வர்மா 87 ரன்களும், தீப்தி ஷர்மா 58 ரன்களும் அடித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அயாபோங்கா காகா 3 விக்கெட் கைப்பற்றினார். பின்னர் இறுதிப்போட்டியில் இதுவரை யாரும் விரட்டிப்பிடிக்காத ஒரு இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 45.3 ஓவர்களில் 246 ரன்களில் சுருட்டினர். இதன் மூலம் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக உலகக் கோப்பையை தட்டித்தூக்கியது.
இந்த நிலையில் இது தொடர்பாக இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறியதாவது,
ரசிகர்களின் அன்பும், அமோக ஆதரவும் வியப்பூட்டுகிறது. அவர்களுக்கு நன்றி கடன்பட்டுள்ளேன். அணி ஏற்றங்களை கண்டாலும் சரி, சரிவை சந்தித்தாலும் சரி எப்போதும் எங்களுடன் இருக்கிறார்கள். லீக் சுற்றில் அடுத்தடுத்து 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோற்ற போது கூட நம்பிக்கையை இழக்கவில்லை. எப்படியும் சிறப்பு வாய்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த நிலைமையை மாற்ற முடியும் என்பது தெரியும். அதற்காக ஒவ்வொரும் இரவும், பகலுமாக உழைத்தோம். அதனால் நாங்கள் இங்கே (வெற்றி மேடை) நிற்பதற்கு தகுதியானவர்கள்.
லாரா வோல்வார்ட்டும், சுனே லூசும் பேட்டிங் செய்த போது அந்த அணி வலுவான நிலையை நோக்கி பயணிப்பது போல் தெரிந்தது. அப்போது ஷபாலி வர்மாவை பார்த்தேன். அவர் பேட்டிங் செய்த விதம், இன்றைய நாள் அவருக்குரியதாகவே எனக்கு தோன்றியது. குறைந்தது ஒரு ஓவராவது அவருக்கு கொடு என உள்ளுணர்வு சொல்லியது. அது போலவே அவரிடம் பந்தை வழங்கினேன். அவர் அடுத்தடுத்து இரு விக்கெட்டுகளை வீழ்த்தி எங்களுக்கு திருப்பத்தை ஏற்படுத்தினார். அணியின் ஆலோசனை கூட்டத்தில் பேசும் போது, 2-3 ஓவர்கள் பந்து வீச வேண்டி வரலாம் என ஷபாலியிடம் சொன்னோம். அதற்கு ஷபாலி 10 ஓவர்கள் தந்தாலும் வீசுவதற்கு தயார் என்று சொன்னார். அணிக்காக பந்து வீசுவதற்கு எந்த அளவுக்கு அவர் நம்பிக்கையுடனும், ஆர்வமுடனும் இருக்கிறார் என்பதையே இது காட்டியது. எல்லா பெருமையும் அவரையே சாரும். இதற்காக அவருக்கு ஒரு ‘சல்யூட்’.
ஒவ்வொரு உலகக் கோப்பை போட்டி முடிந்ததும் இறுதி தடையை எப்படி கடப்பது என எப்போதும் விவாதிப்பது உண்டு. ஆனால் இப்போது இறுதிதடையை வெற்றிகரமாக தகர்த்து விட்டோம். இனி இதை ஒரு பழக்கமாக வைத்திருப்பதே எங்களது அடுத்த இலக்கு.
இந்த தருணத்துக்காகத் தான் நீண்ட காலம் காத்திருந்தோம். அது நடந்து விட்டது. இன்னும் நிறைய முக்கியமான தருணங்கள் வர இருக்கின்றன. தொடர்ந்து முன்னேற்றம் காண விரும்புகிறோம். இது ஒன்றும் முடிவல்ல. தொடக்கமே.
இவ்வாறு ஹர்மன்பிரீத் கவுர் கூறினார்.






