நாங்கள் சண்டையில் தோற்றுள்ளோம்.. ஆனால் போரில் தோற்கவில்லை - ஸ்ரேயாஸ் ஐயர்

image courtesy:PTI
நடப்பு ஐ.பி.எல். தொடரின் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் தோல்வியடைந்தது.
முல்லான்பூர்,
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் நேற்று இரவு நடந்த இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப் கிங்ஸ், 2-வது இடம் பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி, பெங்களூரு வீரர்களின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியதுடன், விக்கெட்டுகளையும் வேகமாக பறிகொடுத்தது. வெறும் 14.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த பஞ்சாப் அணி 101 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ஸ்டோய்னிஸ் 26 ரன்கள் அடித்தார். பெங்களூரு அணி தரப்பில் ஹேசில்வுட், சுயாஷ் ஷர்மா தலா 3 விக்கெட்டுகளும், யாஷ் தயாள் 2 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார், ரொமாரியோ ஷெப்பர்டு தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 106 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பில் சால்ட் 56 ரன்களுடனும், ரஜத் படிதார் 15 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். பெங்களூரு சுழற்பந்து வீச்சாளர் சுயாஷ் ஷர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்நிலையில் இந்த போட்டியில் தாங்கள் தோல்வியடைந்ததற்காக காரணம் குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயர் அளித்த பேட்டியில், "இது மறக்கக்கூடிய நாள் அல்ல. நாங்கள் ஓய்வறைக்கு மீண்டும் சென்று இது குறித்து விவாதிக்க வேண்டும். முதல் இன்னிங்சில் நாங்கள் நிறைய விக்கெட்டுகளை இழந்தோம். அதில் நிறைய வேலை செய்ய வேண்டியுள்ளது. உண்மையில் என்னுடைய முடிவுகள், திட்டமிடுதல் பற்றி நான் எந்த சந்தேகமும் படவில்லை. களத்திற்கு வெளியே நாங்கள் வகுத்த திட்டங்கள் சரியானது என்று நினைக்கிறேன். ஆனால் மைதானத்தில் அதைச் செயல்படுத்த முடியவில்லை.
இலக்கு குறைவாக இருந்ததால் எங்களுடைய பவுலர்களையும் குறை சொல்ல முடியாது. இது போன்ற பிட்ச்சில் பேட்டிங்கில் நாங்கள் உழைக்க வேண்டியிருந்தது. இந்த மைதானத்தில் நாங்கள் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் மாறுபட்ட பவுன்ஸ் இருந்தது. இதுபோன்ற காரணங்களை நாங்கள் கூற முடியாது. ஏனென்றால் நாள் முடிவில் நாங்கள் தொழில்முறை வீரர்கள், சூழ்நிலைக்கு ஏற்ப பேட்டிங் செய்ய வேண்டும். நாங்கள் சண்டையில் தோற்றுள்ளோம். ஆனால் ஐ.பி.எல். என்ற போரில் தோற்கவில்லை" என்று கூறினார்.






