என்னுடன் சேர்ந்து மீண்டும் எப்போது... நினைவூட்டிய ஜெமிமா; கவாஸ்கர் அளித்த பதிலென்ன?

இந்திய கிரிக்கெட் சமூகத்திற்கும், ரசிகர்களுக்கும் நீங்கள் மகிழ்ச்சியை அளித்துள்ளீர்கள் என கவாஸ்கர் தெரிவித்து உள்ளார்.
மும்பை,
இந்தியாவில் நடந்த மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நவிமும்பையில் நடந்த பரபரப்பான அரையிறுதி போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை விரட்டியடித்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
அக்டோபர் 30-ந்தேதி நடந்த இந்த போட்டியில், ஆஸ்திரேலியா நிர்ணயித்த 339 ரன் இலக்கை ஜெமிமா ரோட்ரிக்ஸ் (127 ரன், 14 பவுண்டரி), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (89 ரன்) இணை தங்களுடைய திறமையான பேட்டிங்கால் 48.3 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. இதன் மூலம் பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை விரட்டிப்பிடித்த அணி என்ற புதிய சாதனையை இந்தியா படைத்தது.
இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் விளையாடின. அதில் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்று உலகக்கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது.
இந்நிலையில் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று உலகக்கோப்பையை வென்றால் ஜெமிமா ரோட்ரிக்ஸ் உடன் சேர்ந்து பாட்டு பாட உள்ளேன் என இந்திய முன்னாள் வீரர் மற்றும் 1983-ம் ஆண்டு உலக கோப்பை வெற்றி அணியில் இடம் பெற்றவரான சுனில் கவாஸ்கர் அறிவித்தது பரபரப்பானது.
அவர் பேசும்போது, இந்தியா உலகக்கோப்பையை வென்றால், நானும் ஜெமிமாவும் சேர்ந்து ஒரு பாடலை பாடுவோம். அவர் கிடார் வாசிக்கட்டும் நான் பாடுவேன். சில வருடங்களுக்கு முன்பு பி.சி.சி.ஐ. விருது வழங்கும் நிகழ்ச்சியில் நாங்கள் இதனை செய்தோம் என்றார்.
இந்நிலையில், இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது. இதனை தொடர்ந்து, எப்போது பாடலாம் என கவாஸ்கருக்கு ஜெமிமா நினைவூட்டினார். இதற்கு கவாஸ்கர் பதிலளித்து உள்ளார். இதுபற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் கவாஸ்கர் வெளியிட்ட செய்தியில், ஜெமிமா மற்றும் பிற வீராங்கனைகளுக்கு இன்று தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
அதில், இந்திய கிரிக்கெட் சமூகத்திற்கும், ரசிகர்களுக்கும் நீங்கள் மகிழ்ச்சியை அளித்துள்ளீர்கள். இன்பம் தந்திருக்கிறீர்கள். வாக்குறுதி, வாக்குறுதிதான். அதனை நான் நினைவில் வைத்துள்ளேன். நீங்கள் கிடார் வாசிப்பீர்கள். நான் பாடுவேன் என்ற நம்பிக்கை எப்போதும் எனக்கு உண்டு. ஆனால், உடைமாற்றும் அறைக்கு வர எனக்கு அப்போது அனுமதி இல்லை.
நான் மைதானத்தில் இருந்தேன். ஆனால், ஒரு தேதியை நீங்கள் கூறுங்கள். வார இறுதி நாளாக கூட அது இருக்கட்டும். நாம் அதனை செய்ய நான் ஆவலாக காத்திருக்கிறேன் என பதிவிட்டு உள்ளார். இதனால், இருவரும் சேர்ந்து எப்போது பாடுவார்கள் என ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.






