மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை: இந்திய அணி அறிவிப்பு எப்போது..?

இதன் தொடக்க ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.
மும்பை,
13-வது மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (செப்டம்பர்) 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இந்தியாவில் மகளிர் உலகக்கோப்பை அரங்கேறுவது இது 4-வது முறையாகும்.
இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்தியாவில் பெங்களூரு, கவுகாத்தி, விசாகப்பட்டினம், இந்தூரிலும், இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் மொத்தம் 31 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன. பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கையில் இடம் பெறுகின்றன. இதன் தொடக்க ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு எப்போது? என்பது குறித்து எந்தவித தகவலும் வெளிவராமல் இருந்தது. அத்துடன் ரசிகர்களும் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய மகளிர் அணியில் யார்-யாரெல்லாம் இடம்பெறபோகிறார்கள்? என்று எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையில் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நீத்து டேவிட் தலைமையிலான தேர்வு குழுவினர் அணியை தேர்வு செய்கிறார்கள்.
இந்திய மகளிர் அணி இதுவரை உலகக்கோப்பையை வென்றதில்லை. அதிகபட்சமாக 2005 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் இறுதிப்போட்டி வரை வந்து தோற்று இருக்கிறது. அந்த நீண்ட கால ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க தற்போது சொந்த மண்ணில் வாய்ப்பு கிடைத்துள்ளது.






