மகளிர் உலகக்கோப்பை: இந்திய நட்சத்திர வீராங்கனைக்கு காயம்


மகளிர் உலகக்கோப்பை: இந்திய நட்சத்திர வீராங்கனைக்கு காயம்
x

image courtesy:twitter/@BCCIWomen

இவர் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சதம் அடித்திருந்தார்.

மும்பை,

மகளிர் உலகக்கோப்பை தொடரில் மும்பை புறநகரான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறிய 28-வது மற்றும் கடைசி லீக்கில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டத்தை தொடங்குவதில் 2 மணி நேரம் தாமதம் ஆனது. இதனால் ஆட்டம் 43 ஓவராக குறைக்கப்பட்டு தொடங்கப்பட்டது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 39 ரன்கள் எடுத்திருந்தபோது மறுபடியும் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி 27 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக மாறியது. தொடர்ந்து ஆடிய வங்காளதேசம் 27 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ராதா யாதவ் 3 விக்கெட்டும், ஸ்ரீசரணி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிப்படி இந்தியாவுக்கு 27 ஓவர்களில் 126 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. அதை நோக்கி ஆடிய இந்திய அணி 8.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை பெய்தது. அப்போது ஸ்மிர்தி மந்தனா 34 ரன்களுடனும், அமன்ஜோத் கவுர் 15 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். மழை நீடித்ததால், அத்துடன் ஆட்டம் கைவிடப்பட்டது. நடப்பு தொடரில் பாதியில் ரத்தான 6-வது ஆட்டம் இதுவாகும்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் பீல்டிங்கின்போது இந்திய நட்சத்திர தொடக்க வீராங்கனை பிரதிகா ராவலுக்கு வலது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து கைத்தாங்கலாக வெளியே அழைத்து செல்லப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இவர் இந்த ஆட்டத்தில் பேட்டிங் செய்யவரவில்லை. அரையிறுதிக்கு முன்னர் இவர் உடற்தகுதியை எட்டுவது இந்திய அணிக்கு முக்கியம். ஏனெனில் நடப்பு தொடரில் இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அத்துடன் நியூசிலாந்துக்கு எதிரான கடந்த ஆடத்தில் இவர் சதமடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story