உலகக் கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து வீராங்கனைகள் சென்னையில் பயிற்சி


உலகக் கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து வீராங்கனைகள் சென்னையில் பயிற்சி
x

Image Courtesy: X (Twitter) / File Image

தினத்தந்தி 11 Aug 2025 7:56 AM IST (Updated: 11 Aug 2025 2:41 PM IST)
t-max-icont-min-icon

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் தொடங்குகிறது.

சென்னை,

இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை அடுத்த மாதம் (செப்டம்பர்) 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந்தேதி வரை இந்தியா, இலங்கை இணைந்து நடத்துகின்றன. இதில் 20 ஆட்டங்கள் இந்தியாவில் பெங்களூரு, கவுகாத்தி, விசாகப்பட்டினம், இந்தூர் ஆகிய இடங்களிலும், 11 ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பிலும் நடைபெறுகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் உள்ள சீதோஷ்ணநிலை மற்றும் சூழலுக்கு உகந்த ஆடுகளங்களுக்கு ஏற்ப தங்களை பழக்கப்படுத்தி போட்டிக்கு சிறந்த முறையில் தயாராவதற்காக ஆல்-ரவுண்டர் ஜெஸ் கெர், ஜார்ஜியா பிளிமெர், புரூக் ஹாலிடே உள்பட 10 நியூசிலாந்து வீராங்கனைகள் சென்னைக்கு வந்துள்ளனர்.

இங்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அகாடமியில் அவர்கள் 2 வாரம் பயிற்சி மேற்கொள்கிறார்கள். தலைமை பயிற்சியாளர் பென் சாயேர், உதவி பயிற்சியாளர் கிரேக் மெக்மில்லன் ஆகியோர் பயிற்சி அளித்து வருகிறார்கள். இது குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் பென் சாயேர் கூறுகையில்,

‘நியூசிலாந்தில் தற்போது குளிர் காலம். அது மட்டுமின்றி தற்சமயம் அவர்களுக்கு சர்வதேச போட்டி ஏதும் இல்லை. உலகக் கோப்பை போட்டி தொடங்குவதற்கு ஏறக்குறைய 2 மாதங்கள் உள்ளன. அதனால் இந்திய சூழலில் இந்த போட்டிக்கு தயாராவதற்கு 7 ஒப்பந்த வீராங்கனைகள் மற்றும் 3 இளம் வீராங்கனைகளுடன் சென்னைக்கு வந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

இந்த பயிற்சி வீராங்கனைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அடுத்ததாக துபாய்க்கு சென்று இங்கிலாந்துக்கு எதிராக ஒரு நாள் தொடரில் ஆட உள்ளோம்’ என்றார். உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 1-ந்தேதி இந்தூரில் சந்திக்கிறது.

1 More update

Next Story