இளையோர் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்தியா

இந்த வெற்றியால் 3-0 என தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது.
பெனோனி,
இந்திய இளையோர் கிரிக்கெட் அணி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்கா சென்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.இதில் நடந்து முடிந்துள்ள 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் முகமது பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடியது. வைபவ் சூர்யவன்ஷி , ஆரோன் ஜார்ஜ் ஆகியோர் சிறப்பாக விளையாடி சதமடித்தனர்.இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் குவித்தது. வைபவ் சூர்யவன்ஷி 127 ரன்கள், ஆரோன் ஜார்ஜ் 118 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து 394 ரன்கள் இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.இதனால் அந்த அணி 35 ஓவர்களில் 160 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் குமார் சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியால் 3-0 என தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது.






