40 ஏக்கர் நிலத்தில் காடு உருவாக்கிய விவசாயி...!


40 ஏக்கர் நிலத்தில் காடு உருவாக்கிய விவசாயி...!
x

40 ஏக்கரில் இயற்கை காடு அமைத்து, அதில் அரிய வகை மரங்களை வளர்த்து வருகிறார், ஆர்.கே.செல்வமணி. இயற்கை மீது பேரார்வம் கொண்டவரான இவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.

தற்போது இயற்கை சூழலில், பிரமாண்ட பசுமை வீட்டையும் கட்டமைத்து வருகிறார். அவரிடம் பேசினோம். பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

* உங்களை பற்றி கூறுங்கள்?

நான் எம்.ஏ. வரலாறு படித்திருக்கிறேன். மேலும் தோட்டக்கலை துறையில், டிப்ளமோ படிப்பும் முடித்திருக்கிறேன். ஆரம்பத்தில், தோட்டக்கலை படிப்பை மையப்படுத்தி, தனியார் நிறுவனம் ஒன்றில் 8 ஆண்டுகள் பணியாற்றினேன். அந்த காலகட்டத்தில்தான், விவசாயிகளிடம் நேரடியாக பேசக்கூடிய, பழகக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. கூடவே, சொந்தமாக நிலம் வாங்கி, பயிர்செய்யும் ஆசையும், ஆடு-மாடுகள் வளர்க்கும் ஆர்வமும், காடு உருவாக்கும் எண்ணமும் பிறந்தது.

* விவசாயம் செய்வதும், கால்நடை வளர்ப்பதும் எல்லோருக்கும் இருக்கும் ஆசைதான். அதில் நீங்கள் தீவிரம் காட்டியது ஏன்?

1993 காலகட்டங்களில், தமிழ்நாட்டில் மாவட்ட அளவில் பயிர் விளைச்சல் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. அந்த சமயத்தில், நான் விவசாயிகளுடன் நேரடி களப்பணியில் இருந்ததால், அவர்களுக்கு சில யோசனைகளை வழங்கி, கூடுதல் லாபம் ஈட்டவும், பயிர் விளைச்சல் போட்டிகளில் முதல்பரிசு பெறவும் காரணமாக இருந்தேன். அந்த நம்பிக்கை தான், என்னை தனியார் நிறுவன பணியை விட்டு விலகி, விவசாய துறையில் கால்பதிக்க செய்தது.

* விவசாயியாக உங்களது பயணத்தை எப்படி ஆரம்பித்தீர்கள்?

1998-ம் ஆண்டு ஒரு ஏக்கர் நிலத்தில் கிணறு அமைத்து, மரநடவு வேலைகளை ஆரம்பித்தேன். பிறகு பூர்வீக குடும்ப நிலங்களை விற்று, எனது ஊருக்கு அருகில் உள்ள தா.சோழன் குறிச்சி கிராமத்தில் 10 ஏக்கரில் நிலம் வாங்கி, வாழை சாகுபடி செய்ய ஆரம்பித்தேன். ஆரம்பத்தில், கொஞ்சம் கடினமாக இருந்தாலும், நிறைய அனுபவம் கிடைத்தது. அதனால் அடுத்தடுத்த சாகுபடிகளில், நல்ல விளைச்சல் கிடைத்தன. வாழை சாகுபடியுடன், மதிப்பு மிகுந்த மரம் நடவு பணிகளை தொடர்ந்து, கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டினேன்.

மாடுகளை நிறைய வளர்த்து, பால், நெய், வெண்ணெய் போன்றவற்றை உற்பத்தி செய்தேன். ஒருகட்டத்தில் என்னிடம், 500-க்கும் மேற்பட்ட மாடுகள் ஆயிரம் ஆடுகள் இருந்தன. அந்த காலகட்டத்தில் விவசாய பணிகளை மேற்பார்வை செய்வதும், மாட்டு பண்ணையை பராமரிப்பதும் சவாலான வேலையாக இருந்தது. இப்போது, முழுமையாக விவசாய பணிகளை மேற்கொள்வதால், மாடுகளின் எண்ணிக்கையை குறைத்துவிட்டேன். இப்போது 50 மாடுகள் இருக்கின்றன.

* காடுகளை உருவாக்கும் எண்ணம் வந்தது எப்படி?

விவசாயம், கால்நடை வளர்ப்பு இவ்விரண்டை போலவே, எனக்கு காடுகளை உருவாக்குவதிலும் ஆர்வம் அதிகம். அதனால், பயிர் செய்தது போக மீதமிருக்கும் நிலங்களில் மதிப்பு மிகுந்த மரங்களை வளர்க்க ஆரம்பித்தேன். அந்த ஆசை, இப்போது 40 ஏக்கரில், பிரத்யேக காட்டை உருவாக்கி இருக்கிறது.

அரியலூர் மாவட்டம் தா.சோழன் குறிச்சியில் உருவாக்கப்பட்டிருக்கும், இந்த 40 ஏக்கர் காடு முழுக்க முழுக்க என்னுடைய சொந்த உழைப்பில் உருவானது.

சாலை விரிவாக்க பணிகளின் போது மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதால் குரங்கு, மயில், நரி, காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் எனது காட்டில் தஞ்சமடைந்துள்ளது. அதுபோக, தேக்கு, இலுப்பை மரம், செம்மரம், மலை வேம்பு, மகாகனி, ஈட்டி, மா, பலா மற்றும் சந்தன மரங்களை கொண்டு, மதிப்புமிக்க இயற்கை காட்டை உருவாக்கி இருக்கிறேன். இந்த காட்டில், வளர்ந்திருக்கும் பெரும்பாலான மரங்களுக்கு வயது 12-ஐ தாண்டியிருக்கும்.

* பிரமாண்ட காட்டை உருவாக்கியதற்கு பதிலாக பயிர் செய்து லாபம் பார்த்திருக்கலாமே?

இதுவும் லாபம் தரக்கூடிய பயிர் சாகுபடிதான். 10 வயதை கடந்திருக்கும் சில மரங்களின் மதிப்பு, பல கோடியை தாண்டியிருக்கும். இதில் இருக்கும், தேக்கு, செம்மரம், சந்தன மரம் போன்றவற்றின் மதிப்பு காலத்திற்கு ஏற்ப, உயர்ந்து கொண்டே இருக்கும். அந்தவகையில், இது லாபம் தரக்கூடிய பசுமை காடு.

* பசுமை காடுகளை தொடர்ந்து, பசுமை சூழலில் பசுமை வீடு கட்டுகிறீர்களே, அதுபற்றி கூறுங்கள்?

என்னுடைய 40 ஏக்கர் காட்டிற்குள்ளும் ஒரு பசுமை வீடு கட்டியிருக்கிறேன். அது முழுக்க முழுக்க, மரங்களை பயன்படுத்தி கட்டப்பட்ட வீடு. அதுபோலவே, மரங்களை அதிகமாக பயன்படுத்தி, பழமையான யுக்திகளை கொண்டு பிரமாண்ட இயற்கை வீட்டை, நகருக்குள் அமைத்து வருகிறேன். அதன் வடிவமைப்பும், கட்டமைப்பும் முற்றிலும் வேறுபட்டது. மரம் அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்காக, என்னுடைய காட்டிற்குள் வளர்ந்த 600-க்கும் மேற்பட்ட மரங்களையே பயன்படுத்திக் கொண்டேன். மேலும், இந்த பசுமை வீட்டில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கற்கள், கட்டுமான துறைக்கு கொஞ்சம் புதுமையானது.

ஆம்...! முன்னொரு காலத்தில் கடலாக இருந்து கடல் படிவுகளால் கடற்கரை பகுதிகளில் உருவான செம்பராங் கற்கள் எனப்படும் செந்நிற படிமங்களை வெட்டி எடுத்து, அதை கற்களாக பயன்படுத்தி கட்டமைக்கிறேன். இது, கடினமானது. மேலும் வெப்பத்தை அதிகம் கடத்தாதது. மேலும் இதை பூச்சு வேலைகள் செய்யாமல், செந்நிறத்திலேயே இருக்கும்படி செய்வதினால், வெளிப்புற வெப்பம் வீட்டிற்குள் வராது. மேலும் வெப்ப பிரதிபலிப்பும் நடக்காது.

* வேறு என்ன புதுமைகளை புகுத்தி இருக்கிறீர்கள்?

இந்த பிரமாண்ட வீடு, சுயசார்பு அடிப்படையில் கட்டமைக்கப்படுகிறது. மின்சாரத்திற்கு சோலார் பேனல்களை பயன்படுத்த இருக்கிறோம். மழைப்பொழிவில் கிடைக்கும் மழைநீரையே, வீட்டிற்கான நீர் ஆதாரமாக திட்டமிட்டிருக்கிறோம். இதற்காக, 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, நீர் தேக்க தொட்டியை கட்டியிருக்கிறோம். இதில் ஒருமுறை மழைநீரை தேக்கிவிட்டால், கிட்டத்தட்ட 8 முதல் 12 மாத காலத்திற்கு நீர் தேவை இருக்காது. அப்படி நீருக்கான தேவை உருவானாலும், அதை பூர்த்தி செய்ய மழைக்காலம் வந்துவிடும். மேலும், சூரிய ஒளியும், காற்றும் வீட்டிற்குள் அதிகமாக இருக்கும்படியாக, பிரமாண்ட ஜன்னல்கள் மற்றும் திறந்தவெளிகளை அமைத்திருக்கிறேன்.

* எப்போது கட்டுமான பணிகள் நிறைவடையும்?

70 சதவிகித பணிகள் முடிந்துவிட்டன. மீதமிருக்கும் பணிகளும் மும்முரமாக நடைபெறுகிறது. துபாய் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பேரீச்சை மரங்கள் காம்பவுண்ட் சுவர்கள் ஓரத்தில் நடவு செய்யவும் உள்ளேன். வீட்டின் பராமரிப்பு செலவுகளை ஈடுகட்ட மாடித்தோட்டம் அமைத்து அதன் மூலம் ரூ.1 லட்சம் வரை வருமானம் பெற திட்டமிட்டுள்ளேன், விரைவில் எனக்கு பிடித்தமான பசுமை வீட்டிற்குள் குடியேறிவிடுவேன்.

* விவசாய துறையிலும், பசுமை கட்டுமான துறையிலும் பல புதுமைகளை மேற்கொண்டு வருகிறீர்கள். உங்களுக்கு இதுவரை பாராட்டுகளோ, அங்கீகாரங்களோ கிடைத்திருக்கிறதா?

நிறைய பாராட்டுகள் கிடைத்திருக்கின்றன. உயர்நீதிமன்ற நீதிபதிகள், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல் கண்காணிப்பு ஆணையர்... என பலரும், என்னுடைய விவசாய நிலங்களையும், அதில் நடக்கும் லாபம் தரக்கூடிய பயிர் சாகுபடிகளையும் பார்த்து வியந்திருக்கின்றனர்.

மேலும் அருகில் இருக்கும் வேளாண் கல்லூரி மாணவ-மாணவிகள், என்னுடைய விவசாய நிலத்திலும், பசுமை காட்டிலும் அவர்களுக்கு தேவையான பாடக்குறிப்புகளை எடுத்து செல்கிறார்கள். ஒருசிலர், ஆராய்ச்சிகளையும் முன்னெடுத்திருக்கிறார்கள்.

சில பள்ளி-கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டு இயற்கை விவசாயம் பற்றி மாணவர்களிடம் கலந்துரையாடி இருக்கிறேன். மேலும் எங்களுடைய தோட்டத்தில், தினமும் ஒரு டன் இயற்கை உரம் உற்பத்தியாகும் என்பதால், அக்கம் பக்கத்து ஊர் விவசாயிகளுக்கு எங்களுடைய விவசாய பண்ணை பரீட்சயமானது.

இயற்கை உரம், பசு கன்றுகள் வாங்கி செல்வதோடு, விவசாய நுணுக்கங்களையும் கேட்டு செல்வார்கள். இதுவே, நான் விரும்பும் அங்கீகாரம்.

கொரோனா களத்திலும் இப்பொழுதும் அது எனக்கு மனம் நிறைவாகவே கிடைத்துக்கொண்டிருக்கிறது.


Next Story