பெண்களின் வாழ்க்கை தரத்தை வளப்படுத்தும் பெண்மணி
பெண்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்காக பல தளங்களில் இயங்குகிறார் சங்கமித்திரை பாட்டழகன்.
சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவரான சங்கமித்திரை பாட்டழகன், பெண்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்காக பல தளங்களில் இயங்குகிறார். கடந்த 15 வருடங்களில் இவர் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளினால் பல பெண்கள் தொழில்முனைவோர்களாகவும், சமூக அங்கீகாரம் பெற்றவர்களாகவும் உருமாறி உள்ளனர். எங்கு, எப்படி, எதற்காக தொடங்கியது இவரது வழிகாட்டுதல் பயணம் என்பதை அவரிடமே கேட்டு தெரிந்து கொள்வோம்...
* உங்களை பற்றி கூறுங்கள்?
எங்களது பூர்வீகம், பர்மா. என்னுடன் பிறந்தவர்கள், மொத்தம் 7 பேர். 4 அண்ணன்கள், 3 சகோதரிகளுக்கு கடைசி தங்கையாக நான் பிறந்து வளர்ந்தேன். எங்கள் குடும்பத்திலேயே நான்தான் கல்வி பயில மிகவும் ஆர்வமாக இருந்தேன் என்பதால், என்னுடைய தந்தை என்னை ஆங்கில வழியில் கல்வி பயில வழிவகை செய்தார். அந்தவகையில், எங்கள் குடும்பத்திலேயே படித்து, பட்டம் பெற்ற முதல் பட்டதாரி நான். ஆம்...! ராணி மேரி கல்லூரியில் பி.எஸ்சி ஹோம் சயின்ஸ் படித்து முடித்தேன்.
* பெண்களுக்கு உதவும் எண்ணம் தோன்றியது எப்போது?
கல்லூரி படிப்பை முடித்தது முதலே, பெண்களின் நலன் குறித்து சிந்திக்க தொடங்கி விட்டேன். பர்மா குடும்பங்கள் செட்டிலாகிய பகுதியில், என் தந்தைக்கு பிறகு என் குடும்பத்தில் அதிகம் படித்த பெண் நான் என்பதால், தந்தையை தொடர்ந்து என்னிடமும் உதவி கேட்க ஆரம்பித்தனர். அப்படி ஆரம்பமானதுதான், சமூக சேவைக்கான சிந்தனை. இதற்கு என்னுடைய தந்தை மிகப்பெரிய 'இன்ஸ்பிரேஷன்'. ஏனெனில், பர்மாவில் இருந்து சென்னையில் செட்டிலான பல குடும்பங்களுக்கு என்னுடைய தந்தை பல வகைகளில் உதவி செய்திருக்கிறார். என் மாமாவும் சமூக பணியாற்றியவர் என்பதால் அவர்களை தொடர்ந்து என்னை நானே சமூக பணிகளில் ஐக்கியப்படுத்திக்கொண்டேன்.
* பெண்கள் நலனுக்காக இதுவரை என்னென்ன செய்திருக்கிறீர்கள்?
2000-ம் ஆண்டு தொடங்கி, 2019-ம் ஆண்டு வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு இருசக்கர வாகனம் ஓட்ட பயிற்சி கொடுத்திருக்கிறேன். ஏனெனில் நாங்கள் வசிக்கும் ஆதம்பாக்கம் பகுதியில், பேருந்து வசதிகள் மிக குறைவாகவே இருந்தது. 2008-ம் ஆண்டுகளில் ஆதம்பாக்கம் பகுதியில் இருந்து வெளி இடங்களுக்கு செல்ல, வெகுநேரம் காத்திருக்க வேண்டும். அத்தகைய இன்னல்களின்போது, 20-30 பெண்கள் பேருந்து நிலையங்களில் வெகுநேரம் காத்துக்கிடக்க வேண்டி இருந்தது. இதற்கு தீர்வாக இருசக்கர வாகனங்களை பயன்படுத்த நினைத்தாலும், குடும்ப தலைவிகளுக்கு இருச்ககர வாகனங்களை சாலைகளில் இயக்குவதும், உரிமம் பெறுவதும் பெரும் சவாலாக இருந்தது. கல்லூரி படிக்கும் போதே நான் இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெற்றிருந்ததால் என் பகுதியில் வாழும் பெண்களுக்கும் டூ-வீலர் ஓட்ட கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன். ஒன்று.... இரண்டு.... என ஆரம்பித்த கணக்கு, இன்று ஆயிரத்தை எட்டியிருக்கிறது.
* வேறு என்ன செய்திருக்கிறீர்கள்?
கொரோனாவிற்கு முன்பு வரை பெண் களுக்கு ஓட்டுனர் பயிற்சி அளிப்பதில் பிசியாக இருந்தேன். இப்போது, கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் பவுண்டேசன் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் பெண்கள் நலனுக்கான பல நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகிறேன். குறிப்பாக, குடும்ப பெண்கள், கல்லூரி மாணவிகளுக்கு என பிரத்யேக திறன் வளர்ப்பு பயிற்சிகளை ஆன்லைன் முறையிலும், நேரடியாகவும் வழங்கி வருகிறேன்.
ஆங்கில பயிற்சி, தையல் கலை-ஆரி வேலைப்பாடுகள் போன்ற தொழிற்பயிற்சி, கணினி பயிற்சி, உளவியல் ஆலோசனைகள், சட்ட விழிப்புணர்வு பயிற்சிகள்... என குடும்ப பெண்களுக்கு தேவையான நிறைய முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறேன். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருக்கும் நிறைய பள்ளிகளுக்கு சென்று அனுபவ பகிர்தல் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி இருக்கிறேன்.
* உங்களுடைய தனித்துவம் என்ன?
நிறைய பெண்களை சந்தித்திருக்கிறேன். அவர்களது கடினமான, சுவாரசியமான வாழ்க்கையை கேட்டறிந்திருக்கிறேன். அதில் ஒருசில பெண்களுடைய வாழ்க்கை அனுபவங்களை புத்தகமாக பதிவு செய்யும் முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறேன். அதிலும் குறிப்பாக, ஏழ்மையை வென்ற பெண்கள், கடின உழைப்பால் முன்னேறிய பெண்கள், பணி நிமித்தமாக வெளிநாடுகளில் செட்டிலான பெண்களின் வாழ்க்கை போராட்டம் இப்படியாக.... நிறைய பெண்களை புத்தக எழுத்தாளர்களாக மாற்றி இருக்கிறேன். இந்த புத்தக பதிவு, அவர்களுக்கும் தன்னம்பிக்கையை கொடுக்கும். அதை படிக்கும் மற்ற பெண்களுக்கும் உற்சாகத்தை கொடுக்கும்.
* உங்களுடைய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உதவியாக இருக்கிறார்களா?
நிச்சயமாக, ஆரம்பத்தில் என் தந்தை உறுதுணையாக இருந்தார். திருமணத்திற்கு பிறகு என்னுடைய கணவரும், அவருடைய குடும்பத்தினரும் எனக்கு உதவிகரமாக இருக்கிறார்கள். இப்போது சட்டம் பயின்றிருக்கும் என்னுடைய மகனும், எனக்கு ஆதரவாக இருக்கிறார். இவர்களை போலவே, பெண்கள் நலனில் அக்கறை காட்டும் பல நல்ல உள்ளங்களும், என்னுடைய முயற்சிக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.
உங்களுடைய ஆசை என்ன?
பெண்களுக்கு ஏதாவது ஒரு வழியில் உதவி செய்து, அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்துவதுதான் என்னுடைய லட்சியம்.