காலணிகள் தயாரிப்பில் கலக்கும் ஆக்ரா..!


காலணிகள் தயாரிப்பில் கலக்கும் ஆக்ரா..!
x

ஆக்ரா என்றதும் எல்லோருக்கும் காதல் சின்னமான தாஜ்மகால்தான் நினைவுக்கு வரும். அடுத்து, அக்பரின் கோட்டை நிழலாடும். ஆனால் இன்னொரு முகமும் ஆக்ராவுக்கு இருக்கிறது. அதுதான், காலணி தயாரிப்பு.

ஆம்... உலகிலேயே காலணி தயாரிப்பில் ஆக்ராதான் அசத்தி வருகிறது. காலணிகள் தயாரிப்பில் இந்தியாவிலேயே ஆக்ராவுக்குத்தான் முதல் இடம். அது மட்டுமல்ல, உலக அளவில் ஆக்ராவுக்கு இரண்டாவது இடம்.

ஆக்ராவில் தினமும் 3 லட்சம் ஜோடி காலணிகள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்காக உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவின் மொத்த காலணித் தேவையில் ஆக்ரா மட்டுமே 65 சதவீதத்தைப் பூர்த்தி செய்கிறது.

இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் மொத்த உற்பத்தியில் 30 சதவீதம் காலணிகள் ஆக்ராவில்தான் தயாரிக்கப்படுகின்றன. இவ்வளவும் வீடுகளிலும், கைவினை கலைஞர்களின் தனிப்பட்ட முயற்சியிலுமே தயாரிக்கப்படுகின்றது.

இங்கு சாதாரண காலணிகள், நவீன பேஷன் காலணிகள், அலுவலக ஷூக்கள், விசேஷ ஷூக்கள், மருத்துவ ஷூக்கள் என பல ரகங்களில் காலணிகள் தயாரிக்கப்படுகின்றன.

உலகின் பிரபல பிராண்டுகளான புகாட்டி, கிளார்க்ஸ், கபோர், ஜியாக்ஸ், டிம்பர்லேண்ட், ஆரா, லாயிட் அண்ட் ஹஷ் பப்பீஸ் என பலவும் இங்குதான் தயாரிக்கப்படுகின்றன! ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், அமெரிக்கா, இத்தாலி, ஹாங்காங், நெதர்லாந்து, டென்மார்க், போலந்து போன்ற பல நாடுகளுக்கு ஆக்ராவிலிருந்து காலணிகள் ஏற்றுமதியாகின்றன. குறிப்பாக, ரஷிய மார்க்கெட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் 90 சதவிகித காலணிகள், ஆக்ராவிலிருந்து அனுப்பப்பட்டவை.

உலக மக்களின் காலணி மற்றும் தோல் பொருட்கள் தேவையை ஆக்ரா எந்த அளவுக்குத் தீர்த்து வைக்கிறது, தெரியுமா...? 2021-ல் உலக அளவில் தோல் மற்றும் தோல் பொருட்களுக்கு இருந்த தேவை சுமார் 259.89 பில்லியன் டாலர். இது 2030-ல் 445 பில்லியன் டாலராக உயரும் என கணக்கிட்டுள்ளனர்.


Next Story