வில்வித்தை சாம்பியன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!


வில்வித்தை சாம்பியன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!
x

வில்வித்தை போட்டிகளில் சிறுவயது முதலே அசத்தி வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன், சிறு நேர்காணல்...

* உங்களுக்கு பிடித்தமான வில்வித்தை வீரர்-வீராங்கனைகள் யார்?

இந்திய வீராங்கனை கோமாலிகா பாரியை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் எந்த சூழ்நிலையையும், பதற்றமில்லாமல் மிகவும் நிதானமாக எதிர்கொள்வார். அதேபோல, கொரிய வீரர் ஆன்சன் என்பவரும் எனக்கு பிடிக்கும். இவர் சர்வதேச வில்வித்தை போட்டிகளில் பல சாதனை படைத்திருக்கிறார். கூடவே அம்பு எய்தும் திறனிலும் கெட்டிக்காரர்.

தேசிய அளவிலான, சீனியர் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகள் சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் நடந்து முடிந்தது. அதில் இந்தியா முழுவதிலும் இருந்து, 1500-க்கும் மேற்பட்ட வில்வித்தை வீராங்கனைகள் பங்கேற்றனர். நம் தமிழ்நாடு அணியும், மற்ற மாநில அணிகளுக்கு சரிசமமாக நின்று களமாடியது. அதில், நம் தமிழக வில்வித்தை வீராங்கனைகள் (குழு விளையாட்டு), பலம் வாய்ந்த பல அணிகளை தோற்கடித்து வெள்ளிப்பதக்கம் வென்றதுடன், பல சாதனைகளையும் படைத்தனர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த், காமனா, சினேகவர்ஷினி மற்றும் ஹனான் இவர்கள் நால்வரது பங்களிப்பும், வெள்ளிப்பதக்கம் வென்று வர முக்கிய காரணம் என்றாலும், இதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பங்களிப்பு மிக முக்கியமானது.

ஆம்...! தனிநபராக 632 புள்ளிகள் சேர்த்து, தமிழக அணியை 'நாக்-அவுட்' போட்டிகளுக்கு தகுதி பெற செய்ததுடன், முக்கிய போட்டிகளில் குறி தவறாமல் அம்பு எய்து, தேசிய பயிற்சியாளர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.

* வில்வித்தை போட்டிகளில் ஆர்வம் பிறந்தது எப்படி?

8-ம் வகுப்பு படிக்கும்போதுதான், வில்வித்தை போட்டிகள் மீதான ஆர்வம் பிறந்தது. பள்ளி விளையாட்டுகளில், வில்வித்தை என்பது தனித்துவமானது என்பதால், அதை தேர்ந்தெடுத்து பயிற்சி பெற தொடங்கினேன். வெகுவிரைவாகவே, வில்வித்தையின் நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன்.

* எந்த கட்டத்தில், வில்வித்தை போட்டிகளை தீவிரமாக எடுத்துக்கொண்டீர்கள்?

பயிற்சி பெற தொடங்கிய ஒரே வருடத்தில், பள்ளிகளுக்கு இடையிலான தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில், தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களும் கிடைத்தன. கூடவே, வில்வித்தை விளையாட்டில் நிறைய சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும் கிடைத்தது. அதிலிருந்துதான், வில்வித்தை போட்டிகளில் தீவிரமாக பயிற்சி பெற தொடங்கினேன்.

* சீனியர் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற அனுபவங்கள் எப்படி இருந்தது?

நிறைய விஷயங்களை, நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன். ஏனெனில் இந்த சீனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளில், இந்திய அணிக்காக சர்வதேச அரங்கில் விளையாடும் நிறைய சீனியர்கள் அங்கம் வகித்தனர். அவர்களுடன் பயிற்சி பெற்றதும், ஒருகட்டத்தில் அவர்களையே எதிர்த்து விளையாடி பதக்கம் வென்றதும், சுவாரசியமாக இருந்தது.

* சீனியர் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வெல்ல முடியும் என்று நம்பினீர்களா?

பதக்கம் வெல்லும் ஆசை, எனக்கு மட்டுமல்ல எல்லா வீராங்கனைகளுக்கும் உண்டு. ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள், எங்களுக்கு மிகவும் குறைவாகவே இருந்தன. ஏனெனில், தமிழக அணி 'நாக்-அவுட்' சுற்றுகளுக்கு முன்னேறியதும், அனுபவமிக்க சீனியர் வீராங்கனைகள் அங்கம் வகிக்கும் சில அணிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்ததால், பதக்கம் வெல்லும் சாத்தியக்கூறுகள் குறைவாகவே இருந்தன. இருப்பினும், தமிழ்நாடு வில்வித்தை சங்க செயலாளர் மற்றும் அணியின் பயிற்சியாளர் ஹுசைனியின் வழிகாட்டுதலோடு, பதற்றமில்லாமல் போட்டிகளை எதிர்கொண்டோம். வெற்றி கிடைத்தது.

* போட்டி அனுபவங்களை கூறுங்கள்?

'நாக்-அவுட்' தகுதி போட்டிகளுக்கு, மொத்தம் 16 அணிகள் தேர்வாகின. அதில் நம்முடைய தமிழக அணி, கடைசி இடமான 16-ம் இடம் பிடித்தது. இதில் என்ன சுவாரசியம் என்றால், முதல் 'நாக்-அவுட்' போட்டியானது, டாப்-16 பட்டியலில் முதலிடம் பிடித்த ராஜஸ்தான் அணிக்கும், கடைசி இடம் பிடித்த தமிழக அணிக்கும்தான். ராஜஸ்தான் மிகவும் பலமான அணி என்றாலும், நாங்கள் சாதுரியமாக இலக்கை தாக்கினோம். யாருமே எதிர்பார்க்காத வண்ணம், 6-4 என்ற புள்ளி கணக்கில், ராஜஸ்தானை வீழ்த்தி முன்னேறினோம். அடுத்ததாக, மகாராஷ்டிரா அணியை, 6-0 என்ற புள்ளி கணக்கில் துவம்சம் செய்தோம். அரை இறுதியில், தேசிய அளவில் மிகவும் திறமையான அணியாக அறியப்படும், ஜார்கண்ட் அணிக்கு, அதிர்ச்சி கொடுத்தோம். இரண்டு சர்வதேச தரத்திலான வீராங்கனைகள் ஜார்கண்ட் அணியில் அங்கம் வகித்தாலும், அவர்களால் ஒரு புள்ளிகள் கூட பெற முடியவில்லை. 6-0 என்ற புள்ளி கணக்கில் வென்று, இறுதிப்போட்டிக்கு சென்றோம். மேற்கு வங்காள அணிக்கு இடையேயான இறுதிப்போட்டியில், ஒருசில தவறுகள் நடந்ததால், தங்கம் பறிபோனது. இருப்பினும், கடைசி அணியாக நாக்-அவுட் சுற்றுக்குள் உள்நுழைந்து, வெள்ளிப்பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளித்தது.

* இந்த வெற்றி மூலம் கிடைத்த பெருமை என்ன?

தேசிய வில்வித்தை போட்டிகளில், தமிழக சீனியர் அணி பதக்கம் வெல்வது இதுவே முதல்முறை. அப்படியொரு பெருமைவாய்ந்த சிறப்பு கிடைத்திருக்கிறது. இதற்கு காரணமாக இருந்த மற்ற வீராங்கனைகளுக்கும் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

* உங்களுக்கு கிடைத்த பாராட்டுகள் பற்றி கூறுங்கள்?

இந்திய வில்வித்தை அணியின் பயிற்சியாளர் பூர்ணிமா எந்த ஒரு வீராங்கனைகளையும், அவ்வளவு எளிதாக பாராட்ட மாட்டார். ஆனால் என்னுடைய செயல்பாடுகளையும், விளையாட்டு நுணுக்கங்களையும் வெகுவாக பாராட்டி, என்னை ஆச்சரியப்படுத்தினார்.

* உங்களுடைய ஆசை, லட்சியம் என்ன?

தமிழக சீனியர் அணி, முதல்முறையாக தேசிய வில்வித்தை போட்டியில் பதக்கம் வென்று சாதனை படைத்ததுபோல, தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் புதுப்புது சாதனைகளை படைத்திட ஆசையாக இருக்கிறேன். அதேபோல ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று, பதக்கம் வென்று நம் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் லட்சியமும் இருக்கிறது. இவைகளை நோக்கிதான் குறிவைத்து கொண்டிருக்கிறேன்.

* பெற்றோர் மற்றும் பயிற்சியாளர்களின் ஆதரவு பற்றி கூறுங்கள்?

என்னுடைய அப்பா ரஜினிகாந்த் மற்றும் அம்மா விமலா ஆகியோர், நான் எதிர்பார்த்ததை விட சிறப்பாகவே அரவணைத்து செல்கிறார்கள். துவளும்போது தட்டிக்கொடுப்பதுடன், என்னை உற்சாகமாக வழிநடத்துகிறார்கள். அதேபோலதான், பயிற்சியாளர்களும்.

நான் தயான்சந்த் அகாடெமியில் கடந்த 6 வருடங்களாக பயிற்சி பெறுகிறேன். அங்கிருக்கும் லவ்லி சுந்தர் மற்றும் சதீஷ் ஆகியோர் சிறப்பாக பயிற்றுவிக்கிறார்கள். கூடவே, தமிழக வில்வித்தை செய லாளர் மற்றும் பயிற்சியாளர் ஹுசைனியின் வழிகாட்டுதலும் சிறப்பாக இருக்கிறது. 'கேலோ இந்தியா' திட்டத்தின் கீழ், தேசிய பயிற்சியாளர்களுடன் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்திருப்பதால், அவர்களின் அரவணைப்பும் கிடைத்திருக்கிறது.

* விளையாட்டில் கெட்டிக்காரரான நீங்கள் படிப்பில் எப்படி?

மாநில, தேசிய வில்வித்தை போட்டிகளில் பங்கேற்றபடி, நான் எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் பி.காம் படிப்பும் படித்துக்கொண்டிருக்கிறேன். என்னுடைய விளையாட்டு ஆர்வத்தையும், பதக்கம் வெல்லும் திறமையையும் கல்லூரி நிர்வாகத்தினர் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக சீனியர் தாளாளர் லலிதா பாலகிருஷ்ணன் மற்றும் உடற்கல்வி துறை தலைமை பேராசிரியர் அமுதா ஆகியோரின் உதவியுடன், விளையாடிக்கொண்டே படித்து வருகிறேன். தோழிகளும், பாடக்குறிப்புகளை வழங்குகிறார்கள்.


Next Story