பூந்தோட்டமாக மாறிய மயானம்


பூந்தோட்டமாக மாறிய மயானம்
x

'இதயம் இயங்க மறுத்து நின்று போன மனிதர்களின் புகலிடம்' - இது 70 வயதான அர்ச்சுனனின் பராமரிப்பில் இருக்கும் பொது மயானத்தில் எழுதப்பட்ட வாசகம். மும்தாஜ் மீது கொண்ட காதலில் ஷாஜகான் உருவாக்கியது தாஜ்மஹால் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், தனது மகனை அடக்கம் செய்த இடத்தில் ஒரு பசுமை வனத்தை உருவாக்கி, அங்குள்ள மரங்களோடு கொண்ட காதலில் தனது குடும்பத்தையே பிரிந்து நிற்கிறார் அர்ச்சுனன். அவரை பற்றிய ஒரு கட்டுரை தான் இது.

அர்ச்சுனனின் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்துள்ள அரங்கூர் கிராமம். இவருடைய மனைவி கல்யாணி. இவர்களது மூத்த மகன் சுரேந்தர், 2-வது மகன் பாண்டியன், மகள் மீனா.

சுரேந்தர் தனது 18-வது வயதில் (1995-ம் ஆண்டு) உயிரை மாய்த்துக்கொண்டார். அவரது இழப்பை குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் துவண்டு போய் விட்டனர்.

அதேநேரத்தில், சுரேந்தர் உடலை அங்குள்ள மயானத்தில் அடக்கம் செய்ய கொண்டு சென்றனர். அங்கு நெருஞ்சி முள் செடிகள் படர்ந்து இருந்தது. மனதில் உள்ள வலியோடு, காலில் குத்திய முள் செடிகளின் வலியோடு சென்று அர்ச்சுனன் தனது மகன் உடலை அடக்கம் செய்தார்.

அதோடு அவர் நின்றுவிடவில்லை. மகன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் உள்ள முட்செடிகளை அகற்றினார். பின், அங்கு தென்னை மரக்கன்று ஒன்றை நட்டார். அதன் தொடர்ச்சியாக பல்வேறு வகையான மரங்களை நடவு செய்து, அடுத்த சில ஆண்டுகளில் மயானத்தை ஒரு பசுமை வனமாக மாற்றிக்காட்டினார். அவரது முயற்சியை கிராமத்து மக்களும் பாராட்டுவதற்கு தவறவில்லை. அர்ச்சுனன்-கல்யாணியை அழைத்து பாராட்டு தெரிவித்ததுடன், அர்ச்சுனனுக்கு ½ பவுனில் மோதிரம் ஒன்றையும் அணிவித்து கவுரவித்தார்கள்.

இந்த சூழலில் இறந்தவர்களின் உறவுகள் மேலும் சிரமத்துக்கு ஆளாக்காத வகையில் மயானங்கள் மற்றும் சுடுகாடுகளை பசுமை மயானங்களாக உருவாக்க வேண்டும், மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்து, மயானம் உள்ளே பூச்செடிகள் மற்றும் மரங்களை நட வேண்டும், மக்கள் அமர கொட்டகை அமைப்பது, குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கு, முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் ஒன்றையும் அனுப்பினார். அதில், சேவை நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் உதவியோடு ஒரு மாதிரி பசுமை மயானத்தை உருவாக்குங்கள் என்றும் தெரிவித்து இருந்தார். இந்த அறிவிப்புக்கு கிரீடம் வைப்பது போன்று, அர்ச்சுனன் உருவாக்கிய பசுமை மயானம் அமைந்தது. இதையறிந்த இறையன்பு, அர்ச்சுனனை நேரில் அழைத்து வெகுமதி கொடுத்து பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

எந்த ஒரு சேவை நிறுவனங்களின் உதவியும் இன்றி, தனி மனிதனாக அர்ச்சுனன் இந்த வனத்தை உருவாக்கினாலும், அதற்காக அவர் இழந்தது ஏராளம். 'இதயம் இயங்க மறுத்து நின்று போன மனிதர்களின் புகலிடம்' - இது அர்சுனன் வனத்தை உருவாக்கிய மயானத்தில் எழுதப்பட்டு இருக்கும் வாசகம். அதை படித்துக்கொண்டே, அர்ச்சுனனை நேரில் சந்தித்து பேசினோம். அப்போது அவரது இதயம் எப்போதும், அங்குள்ள மரங்களுக்காக தான் துடிக்கும் என்பதை தெளிவுபடுத்தி, நம்மிடையே பேச தொடங்கினார்.

''நான் எனது மூத்த மகனை பறிகொடுத்து, இந்த மயானத்தில் அடக்கம் செய்தேன். அங்கிருந்த சூழல் எனது மனதுக்கு மேலும் வலி தந்தது. இதை ஏன், நாம் மாற்றி அமைக்கக்கூடாது என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அதன் முயற்சியாக முதலில் அங்கு ஒரு தென்னை மரக்கன்றை வைத்தேன். பின்னர், பூச்செடிகள், பல்வேறு பழவகை மரக்கன்றுகள் என்று எண்ணற்ற மரக்கன்றுகளை நடவு செய்தேன். இதற்கு தண்ணீர் தேவை. ஆனால், போர் வசதி எதுவும் அங்கு கிடையாது. ஆகையால், அருகில் உள்ள பம்பு செட்டில் இருந்து தண்ணீர் எடுத்து வந்தேன். மோட்டார் மூலம் பாய்ச்சுவதற்கு மணிக்கு ரூ.50 கொடுத்தேன். 5 மணி நேரம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மாதத்தில் 4 முறை தண்ணீர் பாய்ச்சி வந்தேன்.

இதற்கு ஒரு தொகை நிச்சயம் தேவை. ஆகையால் கிடைத்த வேலையை செய்தேன். அப்போது எனது மனைவியிடம், '5 ஆண்டுகளுக்கு எனக்கு வீட்டில் உணவு மட்டும் கொடுங்கள். ஆனால் நான் உழைக்கும் வருமானத்தில் பெரும் பகுதியை மயானத்தில் உள்ள மரங்களை வளர்த்தெடுக்க தான் செலவு செய்ய போகிறேன்' என்றேன். அதற்கு எனது மனைவியும் மறுக்கவில்லை. அவ்வப்போது குடும்பத்தோடு சென்று களையும் எடுத்தோம்.

ஒரு கட்டத்தில் தென்னை மரங்கள் காய்க்க தொடங்கியது. பின்னர் கிராமத்தில் அதை ஒப்படைத்து, இதன் மூலம் வருவாய் ஈட்டலாம் என்றும் கூறினேன். கிராம மக்கள் சார்பில் நான் உருவாக்கிய வனத்தில் பொங்கல் வைத்து எங்களையும் கவுரவித்தார்கள். மயானத்தில் கல்லறை எதுவும் கட்டக்கூடாது என்று கிராமத்தில் இருந்து ஒட்டுமொத்தமாக முடிவு செய்தோம். உடல்கள் எரியூட்டப்பட்டாலும், அதில் உள்ள சாம்பல் உள்ளிட்டவற்றை சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் அகற்றிக்கொள்வார்கள். ஏனெனில், இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் வந்து செல்வார்கள். அவர்களுக்கு ஏதேனும் அச்சம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தான் இந்த முடிவை அனைவரும் சேர்ந்து எடுத்தோம்.

இதன் பின்னர் சிறிது காலத்துக்கு நான் கேரள மாநிலத்துக்கு வேலைக்கு சென்றுவிட்டேன். பின்னர் சொந்த ஊர் வந்த போது, அந்த வனம் மீண்டும் பராமரிப்பு இல்லாமல் இருந்தது. இதை கண்டு எனது மனம் ஏங்கியது. மீண்டும் அந்த வனத்தை கையில் எடுத்து, செலவு செய்தேன். அப்போது, என் மனைவி, ஊரில் மற்றவர்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு மட்டும் ஏன்? என்று கேட்டார். நான் உருவாக்கிய வனத்தை பாதியில் விட்டுவிட முடியாது, அந்த வனமும் எனது வாழ்க்கையில் ஒன்று தான் என்று கூறிவிட்டேன்'' என்றவர், தனது குடும்பத்துக்கு இணையாக அந்த வனத்தையும் அவர் காதலிக்க தொடங்கினார். அதன் விளைவு இத்தனை வலி மிகுந்ததாக அமையும் என்று அவர் எண்ணவில்லை. ஆம்! இம்முறை அவரது குடும்பத்தினர் அவரை தனியே விட்டு சென்றுவிட்டார்கள்.

இதன் பின்னர், தனது வாழ்க்கையை அந்த மரங்களோடு அர்ச்சுனன் மாற்றி அமைத்துக்கொண்டார். தனது மகன் மற்றும் மகளுக்கு திருமணம் ஆகி பேரக்குழந்தைகள் பிறந்துவிட்டது. ஆனால் இன்னும் அந்த குழந்தைகளை அவர் பார்த்ததில்லை. குழந்தைகளை பார்க்காவிட்டாலும், இந்த கிராமத்தில் எனக்கு 50-க்கும் மேல் பேரக்குழந்தைகள் உள்ளனர் என்கிறார் அவர்.

ஏன் இத்தனை ஆதங்கம் என்று அவரிடம் கேட்டோம். ''எனக்கு தற்போது 70 வயது ஆகிறது. எத்தனையோ முறை உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தும் என்னை எனது மனைவி, மகன், மகள் என்று யாரும் பார்க்க வர வில்லை. இதுபோன்ற ஆதங்கம் எனது மனதை மேலும் கல்லாக மாற்றிவிட்டது. இருப்பினும், செடி-கொடிகள், மரங்களோடு இருக்கையில், அந்த வலி எனக்குள் வருவதில்லை'' என்று, கண்களில் கண்ணீர் தழும்ப கூறினார்.

அவருக்கு ஆறுதல் கூறி, முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு உடனான சந்திப்பு குறித்தும், அவரிடம் உங்களுக்கு என்று எதையாவது கேட்டீர்களா? என்று கேட்டோம்.

அதற்கு அவர், ''அது ஒரு மகிழ்ச்சியான தருணம் தான். எனக்கு என்று எதுவும் கேட்கவில்லை, பசுமை வனத்தில் சேதமான சுற்றுச்சுவரை கட்டி தர வேண்டும், ஆழ்துளை கிணறு வசதி வேண்டும் என்று கேட்டேன்'' என்றார்.

மேலும் இதற்கு முன்பாக இந்த வனத்தை கடலூர் மாவட்ட கலெக்டர்களாக இருந்த ராஜேந்திர ரத்னூ, அமுதவள்ளி ஆகியோர் நேரில் வந்து பார்த்து சென்று இருக்கிறார்கள் என்றும் நம்மிடம் கூறினார்.

''நான் மயானத்தில் மட்டும் மரங்களை வளர்க்கவில்லை, அங்கு ஏரிக்கரையில் உள்ள 2 கோவில்களில் மரங்களை வளர்த்து வருகிறேன். மரங்களுடனான எனது காதலை யாராலும் பிரித்துவிட முடியாது. இனி இங்கு காய்கறி தோட்டம் அமைக்க இருக்கிறேன். அதை நோக்கியே எனது பயணமும் இருக்கிறது'' என மகிழ்ச்சி ததும்ப கூறினார்.

மரங்களையும், செடி, கொடிகளையும் உருவாக்க குடும்பத்தையே பிரிந்து தனது வயது முதிர்ந்த காலத்தில் தள்ளாடும் அவருக்கு நாம் சல்யூட் செய்வதோடு, குடும்பத்தோடு சேர்ந்து மரங்களை காதலிக்கும் காலம் அவருக்கும் மலர வேண்டும் என்பதே நமது எண்ணமும் கூட. விரைவில் கைகூடும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

28 தென்னை மரங்கள், 4 நாவல் மரங்கள், மா, பலா, கொளஞ்சம், நெல்லி மரங்கள் தலா 1, கொய்யா, சப்போட்டா, சீத்தா மரங்கள் தலா 2, இதுதவிர தேக்கு, பில்லிமருது, மல வேம்பு, செம்மரம் தலா 1 மற்றும் பூச்செடிகள் மயானத்தில் உள்ளன. இங்குள்ள மரங்களில் விளையும் பழங்கள், தேங்காய்கள் கிராமத்தில் இருந்து குத்தகைக்கு விடப்பட்டு, அதன் மூலம் கிராமத்துக்கு வருவாய் ஈட்டப்படுகிறது.


Next Story