ஹெட்போன்கள்: அன்றும், இன்றும்..!


ஹெட்போன்கள்: அன்றும், இன்றும்..!
x
தினத்தந்தி 17 Jun 2023 3:07 AM GMT (Updated: 17 Jun 2023 4:35 AM GMT)

இன்றைய டிஜிட்டல் உலகில், எல்லோரது காதிலும், கழுத்திலும் இயர்போன்களை பார்க்கமுடியும். ரெயில், பேருந்து பயணங்களில் இயர்போன் இல்லாமல் பயணிப்பவர்களின் எண்ணிக்கை, மிகவும் குறைவுதான். அந்தளவிற்கு, வயது வித்தியாசம் இல்லாமல், எல்லா வயதினரும் இயர்போன்களை பயன்படுத்த பழகிவிட்டனர். இன்று, வயர் இல்லாத ஹெட்போன்களை பயன்படுத்தி வரும் நமக்கு, ஹெட்போனின் வரலாறும், அதன் தொழில்நுட்ப வளர்ச்சியும் முழுவதுமான தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சுமார் 5 கிலோ எடையில் ஹெட்போன்கள் உருவாக தொடங்கி, இன்று லேசான ஹெட்போன்களாக மாறிய சுவாரசிய பின்னணியை தெரிந்து கொள்வோமா...!

* ஸ்டெதாஸ்கோப் :

இதில் பாடல் கேட்கமுடியாதுதான். ஆனால் ஹெட்போன் கருவிகள் உருவாக ஊக்கம் தந்தது ஸ்டெதாஸ்கோப்தான். 1850-களில் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்டெதாஸ்கோப் நோயாளிகளின் இதயத் துடிப்பு மற்றும் நுரையீரல் செயல்பாடு பற்றி மருத்துவர் அறிய பயன்படுத்தப்படுகிறது. தாமஸ் ஆல்வா எடிசன் ஸ்டெதாஸ்கோப்பை தன்னுடைய போனாகிராப் மெஷினுடன் இணைத்துப் பயன்படுத்தினார்.

* முதல் ஹெட்போன் :

5 கிலோ எடையுள்ள முதல் ஹெட்போன்

1880-களில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் ஹெட்போன், இன்றைய ஹெட்போன்களுக்கு முன்னோடி. இந்த ஹெட்போன்களை முதலில் பயன்படுத்தியது டெலிபோன் ஆபரேட்டர்கள்தான். தோள்களில் தாங்கியபடி ஒற்றைக் காதில் பயன்படுத்த வேண்டும். எடைதான் சற்று அதிகம், எவ்வளவு என்கிறீர்களா...? 5 கிலோ...! 1890-ம் ஆண்டு பிரிட்டிஷ் ஓபரா நடன அரங்குகள் மற்றும் தியேட்டர்களில் திரையிடப்படும் நாடகங்களை பார்வையாளர்கள் ரசிக்க வசதியாக இதனை வழங்கினர்.

* காப்பர் வயர் ஹெட்போன் :

காப்பர் வயர் ஹெட்போன்

1910-ம் ஆண்டு நதானியேல் பால்ட்வின் என்ற ஆராய்ச்சியாளர் அமெரிக்க கடற்படையின் உதவியுடன், ஒலியைப் பெறும் இரு ரிசீவர்களுடன் உள்ள முதல் ஹெட்போனைக் கண்டுபிடித்தார். இதுவே இரண்டாம் உலகப்போரின்போது மின்சாரமில்லா டெலிபோனை கண்டுபிடிக்க ஆதாரமாய் அமைந்தது.

* இரைச்சல் இல்லாத ஹெட்போன் :

1958-ம் ஆண்டு ஜாஸ் பாடகர் ஜான் சி கோஸ், மார்ட்டின் லான்ஞ் ஜூனியர் என்ற என்ஜினீயருடன் இணைந்து போர்டபிள் போனோகிராப் எஸ்பி-3 ஸ்டீரியோபோன் பிளேயரை கண்டுபிடித்தார். பக்கவாட்டில் ஸ்பீக்கர்கள் கொண்ட இந்த ஹெட்போனில் பிரைவசி ஸ்விட்சை அழுத்தினால் புறவெளி இரைச்சலின்றி ஸ்டீரியோ போனிலிருந்து துல்லிய தரத்தில் நமது தனியுலகில் பாட்டை ரசிக்க முடியும்.

* வாக்மேன் ஹெட்போன் :

1979-ம் ஆண்டு, சோனி கம்பெனி வாக்மேனைக் (கேசட் ப்ளேயர்) கண்டுபிடித்தது. கூடவே 3.5 எம்.எம். ஹெட்போன்களும் இணைந்தால் என்னாகும்..? சூப்பர் ஹிட் தானே..! இதுவரை 38 கோடியே 50 லட்சம் வாக்மேன்கள் பரபரவென விற்றுத் தீர்ந்துள்ளன என்பதிலிருந்தே இதற்கான வரவேற்பை அறியலாம்.

* ஐ-பாட் ஹெட்போன்கள் :

2001-ம் ஆண்டு, 'ஐ-பாட்' எனும் மீடியா பிளேயரை அறிமுகப்படுத்தி, ஆப்பிள் நிறுவனம் ஹெட்போன்களின் போட்டியை வேறு லெவலுக்கு கொண்டு சென்றது. 2 முதல் 128 ஜி.பி.கள் வரை இதன் சேமிப்புத்திறனை அதிகரித்துக்கொள்ள முடியும். இன்று வரை 30 கோடி ஐ-பாடுகளை ஆப்பிள் நிறுவனம் ஏகபோகமாக விற்றுள்ளதற்கு, அதன் ஹெட்போன்களின் அசத்தல் தரமும், தனித்துவ வடிவமைப்பும் முக்கிய காரணமாகும்.

* புளூடூத் ஹெட்போன் :

புளூடூத் என்ற தொழில்நுட்பத்தினால், வயர் இல்லாமலேயே செல்போனுடன் இணைந்து பாடல்களை ஒலிபரப்ப ஏதுவாகவும், செல்போன் அழைப்புகளை பேசவும் வழிவகை செய்தது.

* இயர் பாட்ஸ் :

இரண்டு காதுகளுக்குள்ளும், குட்டியாக வைத்து கொண்டு பாட்டு, திரைப்படம், செல்போன் அழைப்பு என எல்லா வசதிகளையும் அனுபவிக்கும் வகையில், இந்த இயர் பாட்ஸ் வந்துவிட்டது. இதுவும், வயர் இல்லாத முறையில், புளூடூத் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது.

இயர் பட்ஸ்

* நெக் பாண்ட்

கழுத்தில் நெக்லஸ் போல் அணிந்து, வயர்லெஸ் இயர்போன்களை காதில் பொருத்தி இஷ்டப்படி பாடல்களை ரசிக்கலாம். அத்துடன் இதன் நீளத்தை சுருக்கிக்கொள்ளவும், பெரிதாக்கிக் கொள்ளவும் முடியும்.

* சிறப்பு ஹெட்போன்கள் :

தங்க ஹெட்போன்

ஹெட்போன்கள் வைரம் மற்றும் தங்கத்திலும் உருவாக்கப்பட்டுள்ளன. பெல்ஜியம் நாட்டின் காசா ஜி என்ற நகை தயாரிப்பாளர், 18 கேரட் தங்கத்தை இழைத்து சிறப்பு ஹெட்போன் உருவாக்கினார். இதில் தங்கம் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், அதைவிட அதிகமாக வைரம் பயன்படுத்தப்பட்டிருந்தது. இடது, வலது என இரு இயர்போன்களிலும் தலா 59 தரமான வைரங்கள் என மொத்தம் 118 வைரங்கள் அந்த ஹெட்போனை அலங்கரித்தன.


Next Story