வீட்டை அலங்கரிக்கும் வால்பேப்பர்கள்..!
லேட்டஸ்ட் அப்டேட் சுவர் முழுவதுமோ அல்லது தேவையான இடங்களிலோ ஒட்டிக்கொள்ளும் வால் பேப்பர் வீட்டு சுவர் அலங்காரம் பற்றி பேச ஆரம்பிக்கிறார், கவிதா சண்முகம்.
''ஆசையாக ரசித்துக்கட்டிய வீட்டின் அவுட்லுக் என்பது, அந்த வீட்டின் இன்டீரியர் டிசைனில்தான் இருக்கிறது. படுக்கை அறைக்கு மென்மையான கலர், வரவேற்பு அறைக்கு வார்ம் கலர், கிச்சனுக்கு நியான் கலர் எனப் பார்த்துப் பார்த்து வண்ணங்களைத் தேர்ந்தெடுப்பது ஒரு சவால். என்னதான் ரசனையுடன் வீட்டைக் கட்டி யிருந்தாலும், சில சமயம் தவறான பெயிண்ட் தேர்வு, மொத்த அழகையும் கெடுத்துவிடும்.
வீட்டில் ஒரே மாதிரியான வண்ணத்தையே பார்த்துப் பார்த்து போர் அடிக்கிறது என்பவர்கள், சுவரில் விரும்பும் இடங்களில் வால் ஆர்ட், தீம் வால் ஸ்டிக்கர், வால் டெக்ஸ்டர் மூலம் அலங்கரிப்பது லேட்டஸ்ட் டிரெண்டு. அதில், லேட்டஸ்ட் அப்டேட் சுவர் முழுவதுமோ அல்லது தேவையான இடங்களிலோ ஒட்டிக்கொள்ளும் வால் பேப்பர். இது, உங்கள் வீட்டை கலைநுட்பத்துடன் வண்ணமிட்ட தோரணையை அளிக்கும்'' என்று வீட்டு சுவர் அலங்காரம் பற்றி பேச ஆரம்பிக்கிறார், கவிதா சண்முகம்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவரான இவர், இன்டீரியர் டெக்கரேஷன் துறையில் பல ஆண்டு அனுபவம் பெற்றவர். குறிப்பாக அனுபவ பயிற்சியினால், பலரது வீடுகளை அழகாக்கி வருகிறார். இவர் வால்பேப்பர் அலங்காரம் பற்றியும், அதை பராமரிப்பது பற்றியும் விளக்கு கிறார்.
''வண்ணம் பூசுவதை விரும்பாதவர்கள், வால் ஸ்டிக்கரிங் செய்து கொள்ளலாம். ரெடிமேட்டாக கிடைக்கும் வால் ஸ்டிக்கர்களை ரசனைக்கு ஏற்ப தேர்வுசெய்து வீட்டில் ஒட்டலாம். வால் ஸ்டிக்கர் உங்கள் சாய்ஸ் எனில், ஆன்லைனிலும் தேர்வுசெய்து கொள்ளலாம். அல்லது இன்டீரியர் டிசைனர்களின் உதவியை நாடலாம்.
சுவர் முழுவதுமே கலைநயத்துடன் இருக்க வேண்டும் என்பவர்கள், வால் பேப்பர்களைத் தேர்வுசெய்யலாம். இதில் ஓவன், நான் ஓவன், ஹேண்டு மேட் எனப் பல வகையான மெட்டீரியல்கள் கிடைக்கின்றன. வீட்டுக்கு கிளாசிக் லுக் விரும்புபவர்கள், நான் ஓவனைத் தேர்வுசெய்யலாம். டிரெண்டி லுக் வேண்டும் என்பவர்கள், ஓவன் மெட்டீரியலைத் தேர்வுசெய்யலாம். வித்தியாசமான லுக் விரும்புபவர்களுக்கு, ஹேண்ட்-மேட் மெட்டீரியல் பொருத்தமாக இருக்கும்'' என்பவர், வால்பேப்பர் மூலம் வீட்டை அழகாக்கும் தகவலை பகிர்ந்து கொள்கிறார்.
''வால் பேப்பர்களைப் பொறுத்தவரை, எந்த இடத்துக்கு எந்த டிசைனை, எந்த வடிவத்தில் தேர்வு செய்கிறோம் என்பதில்தான் இருக்கிறது அதன் அழகு. சிலர் வீட்டின் எல்லா அறைக்கும் வால் பேப்பர்களைப் பயன்படுத்த நினைப்பார்கள். அதைவிட சில அறைகளுக்கு மட்டுமே பயன்படுத்தும்போதுதான் அதன் அழகை ரசிக்க முடியும்.
படுக்கை அறைக்கு வால்பேப்பர் தேர்வுசெய்வதாக இருந்தால், வெளிர் நிறங்களில் மாயத் தோற்றங்கள் நிறைந்தவற்றைத் தேர்வுசெய்யலாம். குழந்தை படிக்கும் அறைக்கு எனில், அவர்களைச் செயல்படத் தூண்டும் தன்னம்பிக்கையுடன் கூடிய படங்களைத் தேர்வுசெய்யலாம்.
வரவேற்பறைக்கு எனில், கற்பனைத்திறனைத் தூண்டும் படங்கள் அழகூட்டும். குழந்தைகளின்படுக்கை அறைக்கு, கார்டூன், விளையாட்டுப் படங்கள் சூப்பராக இருக்கும். சமையலறைக்கு எனில், மைல்டு கலரில் சீக்குவன்ஸ் டிசைன் கொண்டவை பெஸ்ட் சாய்ஸ்.
இவை தவிர்த்து, குறிப்பிட்ட தீமிலும் உங்கள் அறைக்கான வால் போஸ்டரை வடிவமைத்துக்கொள்ளலாம். ஒரு வண்ணம், ஒரு டிசைன் கொண்ட சிங்கிள் டிசைன் போஸ்டர்கள், பல்வேறு வண்ணங்கள், வடிவங்கள் கொண்ட கொலாஜ்கள் என வால் பேப்பருக்கான வாசல், பரந்து விரிந்துள்ளது'' என்றவர், பலருக்கு இலவச ஆலோசனை வழங்கி, அவர்களின் வீடுகளுக்கு ஏற்ற வால்பேப்பர்களை தேர்ந்தெடுக்க வழிகாட்டுகிறார். இவரது முயற்சிகளுக்கு குடும்பத்தினரும், சகோதரர்களும் உறுதுணையாக இருக்கிறார்கள்.
''வால்பேப்பர்களை பொறுத்தமட்டில் ஒரு சதுர அடி மிக குறைந்த விலையில் இருந்தே கிடைக்கிறது. விலை குறைவு என்பதும், இதன் பராமரிப்பு வேலைகள் குறைவு என்பதும் இதன் தேவையை அதிகரித்திருக்கின்றன.
முழுவதும் பூசி முடித்த சுவரில் மட்டுமே வால்பேப்பர்களை பயன்படுத்த முடியும். இவற்றில் ஏதேனும் கறை பட்டால் உடனே தண்ணீரால் துடைத்துவிடலாம். உங்களின் பராமரிப்பைப் பொறுத்து, 6 வருடங்கள் வரை பொலிவுடன் வைத்துக்கொள்ளலாம். இதற்கு இடையில் வேறு டிசைன் மாற்ற விரும்புபவர்கள், ஏற்கனவே இருக்கும் ஸ்டிக்கரைப் பிரித்துவிட்டு, அதே இடத்தில் புது பேப்பர் ஒட்டிக்கொள்ளலாம்.
வால் பேப்பர் ஏதேனும் ஓரிடத்தில் மட்டும் கிழிந்துவிட்டால், அதே அளவுக்கு அதே டிசைனில் வால் போஸ்டர் ஒட்டிக்கொள்ளலாம். பெயிண்டை விட வால் போஸ்டர்கள் உங்கள் இல்லத்தைப் பல மடங்கு ரசனையுடன் காண்பிக்கும்'' என்றவர், வீட்டின் அழகை மெருகேற்றும் தகவல்களுடன் விடைபெற்றார்.