கால் டாக்சி பெண் டிரைவரின் `திகில்' அனுபவங்கள்
இரவு பகல் பாராமல் இயங்க வேண்டியிருக்கும் பணிகளுள் ஒன்று டிரைவர் பணி. அதனால் அதனை பெண்கள் அதிகம் விரும்பாத நிலை இருந்தது. இன்று அந்த நிலை இல்லை. சொந்த உபயோகத்திற்காக மட்டுமின்றி வருமானத்திற்கான வாய்ப்பாகவும் வாகனம் ஓட்டும் கலையை ஆர்வமுடன் பயில்கிறார்கள். அதன் மூலம் சொந்தக்காலில் தானும் நின்று குடும்பத்தையும் நிலை நிறுத்துகிறார்கள். இரவு நேரத்திலும் தைரியமாக வாகனம் ஓட்டிச்சென்று, தனிமை பயணம் மேற்கொள்ளும் மற்ற பெண்களுக்கு முன்மாதிரியாகவும் விளங்குகிறார்கள். அப்படிப்பட்ட தைரிய லட்சுமிகளுள் ஒருவர், ரூத். 43 வயதாகும் இவர் கால் டாக்சி டிரைவர்.
இவருடைய சொந்த ஊர் சேலம் மாவட்டம் சர்க்கார் கொல்லப்பட்டி. ஏழ்மை குடும்பத்தில் பிறந்த ரூத்துக்கு கல்வி எட்டாக்கனியாகி விட்டது. இள வயது திருமணம் வாழ்க்கையின் அடுத்தகட்டம் என்னவென்று தெரியாத சூழலுக்கு தள்ளிவிட்டது. அந்த இருண்ட காலத்தை கடந்து தன்னை போன்று வாழ்க்கையில் பின்தங்கி நிற்கும் பெண்களுக்கு வழிகாட்டும் சுடர் ஒளியாக பிரகாசிக்கிறார் ரூத்.
வெளியூர் சவாரிக்காக காரை தயார்படுத்திக் கொண்டிருந்தவர், தனது வாழ்க்கையில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அதை நாமும் கேட்போமா!
''நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே, சேலம் மாவட்டம் சர்க்கார் கொல்லப்பட்டிதான். என்னுடன் பிறந்தவர்கள் 4 சகோதரிகள், 2 சகோதரர்கள். நான் 3-வது மகள். ஏழ்மையின் பிடியில்தான் எங்களது வாழ்க்கை இருந்தது. குடும்ப சூழ்நிலையால் சிறு வயதிலேயே எனக்கு திருமணம் ஆகி விட்டது.
கணவர் பெயர் மோசஸ். எனக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். என்னுடைய மூத்த மகனுக்கு திருமணம் ஆகி விட்டது. ஒரு பேத்தியும், ஒரு பேரனும் உள்ளனர்'' என்பவர் கார் ஓட்டும் ஆசை தனக்குள் எழுந்த தருணத்தை நினைவு கூர்கிறார்.
''திருமணத்துக்கு பிறகு குடும்பம் ஏழ்மையில் இருந்ததால் என்னுடைய கணவருடன் சேர்ந்து நானும் கூலி வேலைக்கு சென்று வந்தேன். தோட்ட வேலையின்போது செடிகளில் ஒட்டுச்செடி தயாரிப்போம். சில நேரங்களில் வெளி இடங்களுக்கு சென்றும் ஒட்டுச்செடி தயாரித்து கொடுக்க வேண்டியிருக்கும். அப்போது கார்களில் அழைத்து செல்வார்கள். நான் பெரும்பாலும் டிரைவர் இருக்கைக்கு அருகில் அமர்ந்து கொள்வேன். அப்போதுதான் எனக்கு கார் ஓட்ட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. எனது விருப்பத்தை டிரைவர்களிடம் கூறினேன். அவர்களோ முதலில் டிரைவிங் ஸ்கூலில் சென்று கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர். அங்கு சென்று விசாரித்தால் 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் கேட்டார்கள். அதற்கு என்ன செய்வது என்று யோசித்தேன்'' என்பவர் தோட்ட வேலை பார்த்த சம்பளத்தில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக சேமித்து அந்த பணத்தில் டிரைவிங் ஸ்கூல் சென்று கார் ஓட்ட கற்றுக்கொண்டுவிட்டார். அந்த அனுபவத்தை பகிர்கிறார்.
''2010-ம் ஆண்டு கார் ஓட்டும் பயிற்சி பெற்றேன். அப்போதே கார் ஓட்டக்கூடிய தற்காலிக உரிமம் பெற்றுக்கொண்டேன். 2013-ம் ஆண்டு முதல் சொந்தமாக கார் வாங்கி ஓட்டி வருகிறேன். அந்த சமயத்தில் 8-ம் வகுப்பு முடித்து இருந்தால்தான் லைசென்ஸ் வாங்க முடியும் என்று சட்டம் இருந்தது. நான் 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன். அதற்கான சான்றிதழும் என்னிடம் இல்லை. எனவே லைசென்ஸ் பெற முடியாது என்ற நிலை ஏற்பட்டது. அதனால் பழகுனர் உரிமத்தை புதுப்பித்தபடியே நீண்ட நாட்களாக கார் ஓட்டி வந்தேன். எங்கு சென்றாலும் சிலர் 'எல் போர்டு' என்று கேலி செய்வார்கள். அதனை நான் கண்டுகொள்ளவே இல்லை. 2018-ம் ஆண்டு லைசென்ஸ் பெற எந்த படிப்பும் தேவை இல்லை என்று மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் வந்தது. அந்த சட்டம்தான் என்னை போன்று படிப்பறிவு இல்லாதவர்கள் வாழ்வில் ஒளியேற்றியது. உடனே நான் கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ் வாங்கினேன்.
அதுவரை சேலம் பகுதியில் மட்டுமே வாடகை கார் ஓட்டி வந்தேன். அதன்பிறகு வெளி இடங்களுக்கும் ஆட்களை அழைத்து செல்ல தொடங்கினேன். தமிழ்நாட்டில் இன்று நான் போகாத இடங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு என்னுடைய காரும், நானும் தமிழகம் எங்கும் பயணித்துள்ளோம். அதுமட்டும் அல்லாமல் கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களுக்கும் சவாரி சென்றுள்ளேன்'' என்பவர் இரவு பகல் பாராமல் கார் ஓட்டி வருகிறார்.
''என்னால் தொடர்ச்சியாக ஆயிரம் கிலோ மீட்டர் வரை கார் ஓட்ட முடியும். சுமார் 500 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க ேவண்டியிருந்தால் என்னுடைய காரின் நலன் கருதி 100 அல்லது 150 கிலோ மீட்டர் தூரம் சென்றவுடன் காரை நிறுத்தி டீ குடித்து விட்டு 5 நிமிடம் கழித்து காரை ஓட்டி செல்வேன். நாமாக இருந்தாலும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தால் மூச்சு அடைப்பு ஏற்பட்டு விடும். அதேபோலதான் கார் என்ஜினுக்கு சிரமத்தை கொடுக்க கூடாது என்பதற்காக நீண்டதூரம் செல்லும்போது காரை நிறுத்தி நிறுத்தி ஓட்டுகிறேன். கார்தான் என்னுடைய உற்றத்தோழன். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கார் ஓட்டி வருகிறேன். எத்தனையோ இரவுகளிலும் வெளியூர்களுக்கு சென்று விட்டு வந்து இருக்கிறேன். ஒருமுறை கூட என்னுடைய கார் நடுவழியில் என்னை தவிக்க விட்டதே கிடையாது. சில நேரங்களில் கார் பஞ்சர் ஆகி விட்டால், அதைக்கண்டு நான் கலக்கம் அடைவதும் கிடையாது. காரின் பின்பக்கத்தில் வைத்துள்ள ஸ்டெப்னி எனப்படும் மாற்று சக்கரத்தை எடுத்து, ஜாக்கி உதவியுடன் நானே காரில் பொருத்தி ஓட்டி விடுவேன். அதற்காக 15 முதல் 20 நிமிடங்கள் மட்டுமே நேரம் செலவாகும். எனவே என்னுடைய காரில் வருவோர் என்னுடைய உழைப்பை கண்டு பாராட்டி இருக்கிறார்களே தவிர, ஏன் இப்படி ஆகிறது என்று ஒருமுறை கூட கேட்டது இல்லை. அதேபோல் சில குறுகலான தெருக்களிலும் சிலர் காரை கொண்டு வர சொல்வார்கள். அந்த தெரு 5 அடி அகலம்தான் இருக்கும். என்னுடைய கார் 4 அடி அகலம் கொண்டது. அந்த தெருவில் சென்று திரும்ப கூட முடியாது.
அப்படிப்பட்ட குறுகலான இடங்களுக்கும் சென்று ஆட்களை ஏற்றிக்கொண்டு, காரை பின்னோக்கி ஓட்டியபடி சுமார் ½ கிலோ மீட்டர் தூரம் என்னால் ஓட்ட முடியும். மதுபோதையில் வருவோரை கண்டால் காரில் ஏற்றுவது இல்லை. குடும்பத்துடன் வருபவர்கள், அவர்களது குடும்பத்தில் ஒருவராகத்தான் என்னை நினைத்து இருக்கிறார்கள். ஒருமுறை என்னுடைய காரில் பயணம் செய்தவர்கள் மீண்டும் என்னுடைய காரைத்தான் சவாரிக்கு அழைப்பார்கள். அந்த அளவுக்கு நேர்த்தியாகவும், விவேகமாகவும் கார் ஓட்டுவேன்.
காரில் செல்லும் போது, நான் பெண்ணாக இருப்பதால் சிலர் என்னை முந்தி செல்வதும், பின்னால் வருவதுமாக இருப்பார்கள். நான் அவர்களை கண்டுகொள்வதே கிடையாது. நாம் ஒற்றை ஆளாக இருக்கிறோமே என்ற பயமும் எனக்குள் இருந்தது கிடையாது. என்னுடைய கவனம் முழுவதும் கார் ஒட்டுவதில்தான் இருக்கும். ஏனென்றால் அவர்களை பார்த்தாலோ அல்லது ஏதாவது சொன்னாலோ அது தேவை இல்லாத பிரச்சினையை, குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே அதனை கண்டுகொள்ளாமல் நம்முடைய செயலில் மட்டும் கவனமாக இருந்தால் சிறிது தூரம் வருவார்கள். பின்பு அவர்களே என்னை பின்தொடராமல் சென்று விடுவார்கள்'' என்பவர் ஆரம்பத்தில் கார் ஓட்டும்போது குடும்பத்திலும் எதிர்ப்பை சந்தித்திருக்கிறார்.
''பெண் எப்படி இந்த தொழிலை செய்ய முடியும் என்று உறவினர்கள், கணவர் உள்பட வீட்டில் உள்ள அனைவருமே எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கார் ஓட்ட வேண்டும் என்ற என்னுடைய நோக்கம்தான் எனக்கு முன்னால் நின்றது. எனவே அனைவரையும் எதிர்த்து கால் டாக்சி ஓட்ட தொடங்கினேன். 'இவர்கள் எதிர்ப்பை மீறி நாம் கார் ஓட்டுகிறோம். கட்டாயம் சாதித்து காட்ட வேண்டும்' என்ற எண்ணத்தோடு கார் ஓட்ட தொடங்கினேன். மழை, வெயில், இரவு, பகல் என எதுவாக இருந்தாலும் ஆரம்பத்தில் கார் ஓட்டுவது சிரமமாக தெரிந்தது. அதுவெல்லாம் சில நாட்களில் நான் தினமும் கடந்து செல்லும் நாட்களை போன்று ஆகி விட்டது.'' என்று மனம் பூரிக்கிறார்.