சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்..!


சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்..!
x

ஹாப் சிஏ

10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் பலரும் டாக்டராகவோ, என்ஜினீயராகவோ ஆகிவிடலாம் என்ற நினைப்போடு 'சயின்ஸ் குரூப்பை' தேர்வு செய்வர். ஆனால் பட்டயக்கணக்காளர் ஆகும் முனைப்புடன் வணிகம், பொருளாதார பிரிவை தேர்ந்ெதடுப்பவர்கள் வெகுசிலரே. நாட்டின் கடினமான தேர்வுகளின் ஒன்றை வென்று சாதிக்க துடிக்கும் ேதர்வர்கள் பற்றிய கதைதான் இது.

சிறுவயது முதல் சாட்டர்டு அக்கவுண்டன்ட் (சி.ஏ.) ஆக வேண்டும் என்னும் கனவோடு மும்பையில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் ஆர்ச்சி சேருகிறார். 2 முறை தோற்றும் மனந்தளராது அடுத்த முயற்சிக்கு தயாராகும் நீரஜ்ஜை அங்கு சந்திக்கிறாள். பயிற்சியின்போது எதிர்கொள்ளும் சோதனைகள், தியாகங்கள், அறிவுரைகள், தேர்வு சூத்திரங்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்களின் லட்சியப்பாதை குறித்து 5 எபிசோடுகள் வழியே சொல்லப்பட்டுள்ளது.

சாதிக்க துடிக்கும் எண்ணங்களுடன் ஒருவர் முன்னேறும் வேளையில் இடர்பாடுகள் தோன்றும். பின்னடைவு, எதிர்மறை எண்ணங்கள் சூழ்ந்துகொள்ளும். ஆனால் மாணவர்கள் தங்கள் இலக்கை நிர்ணயித்து துரத்த வேண்டும்.

வாழ்க்கையில் இலக்கை எட்டிப் பிடிக்கும் வரை கடுமையாக உழைப்பவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பதை ஆணித்தரமாக சொல்லும் படைப்பு இது. இளம் தலைமுறையினரின் நாடித்துடிப்பை கணித்து அமேசான் பிரைம் வெளியிட்டுள்ள இது லட்சியவாதிகளுக்கானது.

கால்கூட்

பாற்கடலை கடையும்போது வாசுகி பாம்பு கக்கிய நஞ்சை 'ஆலகால விஷம்' என்பார்கள். ஜியோ சினிமாவின் இந்ததொடருக்கும் அதுவே பெயராகி போனது.

இந்தியில் விஷத்தை 'கால்கூட்' என்பார்கள். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மலிந்த ஊரில் சப்-இன்ஸ்பெக்டராக ரவி இருக்கிறார். விதவை தாய் மீதான சமூகத்தின் பார்வை, சீரழித்த கொடூரனோடு குடும்பம் நடத்தும் தங்கை என துயரங்களை தனக்குள்ளே அடக்கியவர். மேலும் உயர் அதிகாரிகள் தொல்லை காரணமாக வேலையை ராஜினாமா செய்து விட ரவி நினைக்கிறார்.

இந்தநிலையில் ஆசிட் வீச்சுக்கு உள்ளாகும் பாரூலின் வழக்கை விசாரிக்கும் பொறுப்பு அவருக்கு வருகிறது. இளம்பெண்ணுக்கு நீதி கிடைக்கும் வகையில் ரவி விசாரணையை தொடங்க, அதனால் பிரச்சினைகள் வருகிறது. போலீஸ்துறையில் ஆர்வமில்லாத அவர் நேர்மையாக விசாரணையை நடத்த முடியாமல் தடுமாறி எழுச்சி பெறுகிறார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைத்ததா? ரவி வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட்டதா? என்பது குறித்தான தொடர் இது.

தன்பாலின ஈர்ப்பாளர்கள் மீதான வெறுப்பு, விவசாயிகளின் தற்கொலை, பெண் சிசுக்கொலை உள்ளிட்ட கருப்பு பக்கங்களையும் புரட்டியுள்ளனர். அதிகாரவர்க்கத்து குற்றவாளியை சட்டத்தின் முன்பு நிறுத்த போராடும் போலீஸ்காரரின் வாழ்க்கையையும் காட்சிப்படுத்தியுள்ளனர். சப்-இன்ஸ்பெக்டர் ரவியாக விஜய் வர்மா ஜொலித்துள்ளார். வில்லனாக பார்த்து பழகிய அவரின் மாறுபட்ட பாத்திரம் புதுமை. ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண்ணாக ஸ்வேதா வருகிறார்.

பெண்கள் மீதான அடக்குமுறை, ஆணாதிக்கம் குறித்து திரைக்கதை எழுதி சுமித் சக்சேனா இயக்கியுள்ளார்.

ட்வீஸ்டட்மெட்டல்

90-களில் சோனி தயாரிப்பில் வெளியாகி பிரபலமான 'ட்வீஸ்டட் மெட்டல்' வீடியோ கேம் காலமாற்றத்திற்கேற்ப மாறுபட்டு பல பகுதிகளாக வெளியானது. அதன் சாராம்சத்தை கொண்டது இந்த லைவ்-ஆக்ஷன் தொடர்.

உலகில் உள்ள அனைத்து கம்யூட்டர்களும் நவீன வைரஸ்களால் சைபர்-தாக்குதலுக்கு உள்ளாகின்றன.

பேரழிவு காரணமாக சமுதாயம் சமநிலையை இழக்க சமூகவிரோதிகள் என முத்திரை குத்தப்படும் நபர்கள் ஊரில் இருந்து ஒதுக்கப்படுகிறார்கள். கட்டாய வெளியேற்றத்திற்கு பின்பு ஊரை சுற்றி கோட்டை சுவர்கள் கட்டப்பட்டு ஆதிக்க வர்க்கத்தினர் தங்களை பாதுகாத்து கொள்கிறார்கள்.

உணவு பொருட்கள், மருந்துகள் உள்ளிட்டவற்றை வினியோகிக்க டெலிவரி ஆட்கள் பாடுபட்டாலும் குற்றவாளிகளாகவே அவர்கள் வகைப்படுத்தப்படுகிறார்கள். உயிரை பணயம் வைக்கும் இந்த வேலைக்கு வெகுமதி வழங்கப்பட்டாலும் சப்ளை பொருட்களை அபகரிக்கும் கூட்டத்தினரையும் சுலபமாக ஈர்க்கிறார்கள்.

இதனால் பயங்கர ஆயுதங்கள் பொருந்திய வாகனங்களின் மோதலால் வெளியுலகம் கபளீகரமாகிறது. சிறுவயது நினைவுகளை இழக்கும் ஜோ தன் 'எவ்லின்' காரில் 'அத்தியாவசியங்கள் வினியோகிப்பவர்' அடையாளத்துடன் பவனி வருகிறார்.

இந்தநிலையில் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோவுக்கு சென்று மர்ம பார்சலை மீட்டுவரும் பணி ஜோவுக்கு வருகிறது. 3 ஆயிரம் கிலோமீட்டர் தூர பயணத்தை 10 நாட்களுக்குள் முடித்தால் விசேஷ சலுகை வழங்கப்படும் எனவும் ஆசை காட்டப்படுகிறது. குரூர பயணத்தை தொடங்கும் ஜோ, பழிவாங்கும் வெறியோடு சுற்றும் கொயட்டை சந்திக்கிறார்.

குறுகியகால பயணத்தில் ஒன்றாக பயணிக்க வேண்டிய சூழலில் இருவருக்கும் இடையே காதல் வருகிறது. வழியில் இவர்கள் சந்திக்கும் கொடூர வில்லன்கள், ஈகோ பிரச்சினைகள் குறித்தது.

யாரை பழிதீர்க்க நாயகி இறங்கினாள்? பார்சலை நாயகன் வெற்றிகரமாக கொண்டு சேர்த்தாரா? என்பதை 10 எபிசோடுகள் வழியே பரபரப்புடன் சொல்லியுள்ளனர். வீடியோ கேமில் வந்த 'ஸ்வீட் டூத்' உள்ளிட்ட பாத்திரங்களையும் காட்சிப்படுத்தி கேம் பிரியர்களை குஷிப்படுத்தியும் உள்ளனர். நாயகன் ஜோவாக 'அவெஞ்சர்ஸ்' புகழ் அந்தோணி மேக்கி நடிப்பிலும், காதலிலும் அசத்தியுள்ளார். அழகும் ஆபத்தும் நிறைந்த கொயட் பாத்திரத்தில் ஸ்டெபனி பொருந்தியுள்ளார். ரத்தம் தெறிக்கும் சண்டை காட்சிகள், பிரமிக்க வைக்கும் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் கொண்ட இதனை சோனி லைவ்வில் காணலாம்.

அப்பத்தா

பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷனின் படைப்பு. இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சிமலை அடிவார கிராமத்தில் இருந்து கதை தொடங்குகிறது. கணவரை இழந்த கண்ணம்மா (எ) 'அப்பத்தா' ஊறுகாய் விற்று தன் ஒரே மகனை படிக்க வைக்கிறார். அம்மாவின் தியாகத்தை புரிந்துகொள்ளாத மகன், சென்னையில் குடும்பத்துடன் 'செட்டில்' ஆகிறார்.

உள்ளூரிலோ அப்பத்தாவுக்கு மவுசு ஜாஸ்தி. குடிசை தொழில் நடத்தி வருமானம் ஈட்ட பெண்களுக்கு உதவுகிறார். நாய்கள் மீதான பயம் அப்பத்தாவின் பலவீனம்.

இந்தநிலையில் சென்னைக்கு வந்து உடன் தங்க வேண்டும் என மகன் அழைப்பு விடுக்க தன் ரத்த உறவை பார்க்கும் குஷியோடு அப்பத்தா கிளம்புகிறார்.

ஆனால் அங்கே தன் வளர்ப்புநாயை அவரிடம் விட்டுவிட்டு குடும்பத்துடன் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு மகன் பறக்கிறார். புதிய சூழலில் அப்பத்தாவின் போராட்டம் நாயுடன் தொடங்க அதனால் அவர் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பே ஆட்டம் காண்கிறது. பிரச்சினைகளுக்கு நடுவே தன் சமையல் கலைத்திறனையும் வெளிப்படுத்துகிறார். பலவீனத்தை ஒழித்து தன்னிலை உணரும் அப்பத்தாவுக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்ன என்பதை சொல்லியுள்ளனர்.

அப்பத்தா பாத்திரத்தில் அனுபவ நடிகை ஊர்வசி வருகிறார். வளர்ப்பு நாயுடனான அலப்பறை, மகனால் அவமானத்திற்குள்ளாவது என மனத்திற்குள் நிலைக்கிறார். அவருக்கு இது 700-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. வளர்ப்பு நாயின் குசும்புத்தனம் ரசிக்க வைக்கிறது. குடும்பத்துடன் காண ஜியோ சினிமாவில் கிடைக்கும்.


Next Story