சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்


சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்
x
தினத்தந்தி 4 Jun 2023 1:15 PM GMT (Updated: 4 Jun 2023 1:15 PM GMT)

அமேசான் பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் மற்றும் நெட்பிளிக்சில் சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள் கிடைக்கிறது.

பாச்சுவும் அத்புத விளக்கும்

மும்பையில் ஆயுர்வேத மருந்துக்கடை ஒன்றை பாச்சு என்கிற பிரசாந்த் நடத்துகிறார். கடையின் வியாபார உரிமையை புதுப்பிக்கவும், அம்மா தேடி வைத்த வரனை சந்திக்கவும் பாச்சு கேரளா செல்கிறார். அங்கே விபத்தில் பாச்சு சிக்க மும்பை திரும்ப தாமதம் ஆகிறது. அந்தநேரத்தில் தனது அம்மாவை உடன் அழைத்துவர பாச்சுவுக்கு மும்பை நிலக்கிழார் ரியாஸ் கட்டளையிடுகிறார்.

ரெயில் பயணத்தில் ரியாசின் அம்மா உம்மச்சி கோவாவுக்கு ேபாக பாச்சுவுக்கு பிரச்சினை கிளம்புகிறது. இதனால் உம்மச்சியை தேடி பாச்சு கோவா செல்கிறான்.

தன் மன எண்ணங்கள் ஈடேற உதவினால் கடை நிலத்தை சொந்தமாக கொடுப்பதாக உம்மச்சி பாச்சுவுக்கு வாக்குகொடுக்கிறாள். லாபகர வாய்ப்பை கைநழுவிட மனதின்றி விபரீத பயணத்தை பாச்சு தொடங்குகிறான்.

புது உறவுகளை பெற்றுகொள்ளும் வகையில் அமையும் இந்த பயணம் வெற்றிகரமாக முடிந்ததா என்பதே மலையாள படத்தின் கதை. வெகுளித்தனத்தோடு கூடிய நடுத்தர வர்க்கத்து இளைஞன் பாச்சுவாக பகத் பாசில் வருகிறார். பார்வையாளர்களை தன்நடிப்பால் கவர்ந்திழுத்துள்ளார். பாசிலுக்கு சம பாத்திரமான நிழக்கிழார் தோற்றத்தில் வினித் அசத்தியுள்ளார்.

அஞ்சனா பிரகாஷ், விஜி வெங்கடேஷ் ஆகியோர் கொடுத்த வேலையை செம்மையாக செய்துள்ளனர். மறைந்த நடிகர் இன்னசென்ட் சில காட்சிகளில் வந்தாலும் தன் திறமையை காட்டியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசை மனதை வருடும். வாழ்வின் யதார்த்தத்தை தன்பாணி கதை சொல்லல் வழியே அகில் சத்யன் படம் பிடித்துள்ளார். அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகியுள்ள இது குடும்பத்துடன் பார்க்க சிறந்தது.

புபார்

அமெரிக்க ராணுவத்தினர் 2-ம் உலகப்போரின் போது சொலவடையாக அறிமுகம் செய்த வார்த்தையே 'புபார்'. விரும்பத்தகாத சூழ்நிலையை புபார் என அவர்கள் கூறுவார்கள்.

அர்னால்டு ஸ்வார்ஸ்நேக்கரின் முதல் ஓ.டி.டி. விஜயம். அமெரிக்கா உளவு அமைப்பின் 'பழுத்த' ஏஜெண்டான அர்னால்டின் சேவை முடிவுக்கு வருகிறது. வேலையே கதியாக கிடந்த அவர் தன் ஓய்வு காலத்தை பிரிந்துபோன மனைவி, மகளுடன் ஜாலியாக கொண்டாட நினைத்து வீடு திரும்ப தயாராகிறார்.

ஆனால் விதி கதகளி ஆடுகிறது. போதைப்பொருள் கடத்தலில் கொடிகட்டி பறக்கும் தாதா குறித்து துப்பு கொடுக்க இளம் அதிகாரி ஒருவரை உளவு அமைப்பு கயானாவிற்கு அனுப்புகிறது. அவர் பிரச்சினையில் சிக்க அர்னால்டை உதவிட பணிகிறது. தன் மகளே எதிரிகளின் பிடியில் சிக்கியிருக்கும் இளம் அதிகாரி என்பது அர்னால்டுக்கு தெரியவர அதிர்ச்சியாகிறார். சிறுவயதில் தந்தையின் அன்பை இழந்த மகளும், மகளை புரிந்து கொள்ளாத தந்தையும் யுத்தகளத்தில் ஒன்றாக இணைய சரவெடி காமெடியில் ஒரு குடும்ப உளவாளி கதையாக புபார் வந்துள்ளது.

வித்தியாசமான தொழில்நுட்ப சாதனங்கள், துரத்தல் காட்சிகள், தந்தை-மகள் உறவு குறித்தான காட்சிகள் புதுவித அனுபவத்தை தருகிறது. 'வயசானாலும் உன் ஸ்டைல் மாறல' என்பதற்கிணங்க அர்னால்ட் நடிப்பு ராட்சசனாக உள்ளார். மகளாக வரும் மோனிகா பார்பரோ அதகளம் பண்ணியுள்ளார். 8 எபிசோடுகளுடன் நெட்பிளிக்சில் வெளியாகியுள்ளது.

அமெரிக்கன் பார்ன் சைனீஸ்

ஆஸ்கர் விருதுகளை வென்று குவித்த 'எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்' படஜுரம் குறைய வில்லை. அதேபோல அமெரிக்க வாழ் சீனர்களின் நிலையை இந்த தொடரில் டிஸ்னி நிறுவனம் இளம் வயதினர் பார்த்து மகிழும் வகையில் காட்சிப்படுத்தியுள்ளது.

சிறுவன் ஜின் இனவெறி காரணமாக சக மாணவர்களின் கேலி கிண்டல்களுக்கு ஆளாகிறான். இதனால் பள்ளிப்படிப்பு காலத்தை அனுபவிக்க முடியாத சூழல். இந்தநிலையில் அதே பள்ளிக்கு சென் என்னும் சீன மாணவன் புதிதாக வருகிறான். முதலில் அவனை வெறுக்கும் ஜின், தன்னிலையை பகிர்ந்து கொள்ள தனக்கு ஒரு நண்பன் கிடைத்ததை எண்ணி ஆர்ப்பரிக்கிறான்.

ஆனால் சென்னின் நிலை வேறு. 'மங்கி கிங்' என்னும் சீன கடவுளின் மகனான அவன் தன் அப்பாவின் மந்திர ஆயுதத்தோடு பூமிக்குள் நுழைந்துவிடுகிறான். சொர்க்கத்திற்கு மீண்டும் திரும்ப வழிகாட்டியை தேடி அமெரிக்க தெருக்களை சுற்றி அலைகிறான். மந்திர ஆயுதத்தை அபகரிக்கும் எண்ணத்தில் எதிரிகள் நெருங்க அவர்களை எதிர்க்க சென்னுக்கு ஜின் உதவுகிறான். அதனால் ஏற்படும் பிரச்சினைகளை அலப்பறையுடன் இதில் சொல்லியுள்ளனர்.

2006-ம் ஆண்டில் வெளியான கிராபிக் நாவலை தழுவி கதை எழுதப்பட்டு 8 எபிசோடுகளுடன் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. கருணை தேவதையாக ஆஸ்கர் நாயகி மிச்செல் யோ வருகிறார். மேலும் ஆஸ்கர் வென்ற கி யூகுவான், ஸ்டெபனி சூ ஆகியோரும் துணை பாத்திரங்களில் அசத்தியுள்ளனர். நாயகர்களான சிறுவர்களின் நடிப்பு திரையில் நன்றாக வந்துள்ளது. ஜாலியான ஒரு சூப்பர் ஹீரோ அம்சம் கொண்ட காமெடி தொடராக இது உள்ளது.

டெமன் ஸ்லேயர்-சீசன் 3

பேய்களால் குடும்பத்தை இழந்ததும் தங்கை நெசுகோ பிசாசாக மாறியதும் தஞ்சிரோவுக்கு கலக்கத்தை கொடுக்கிறது. பிசாசுகளை வதம் செய்து தங்கையை மீட்கும் பயணத்தில் வளரும் சூரர்களான இனோசுகே, ஜெனிட்சு ஆகியோரின் நட்பு தஞ்சிரோவுக்கு கிடைக்கிறது. மூவரும் வித்தைகளை கற்றுக்கொண்டு தங்களை பட்டை தீட்டி கொள்கிறார்கள்.

எதிரி பேய்களோ எமகிங்கரரர்கள். 6 முதன்மை பிசாசுகள், கீழமை பேய்களை கொண்டு பிசாசுத்தலைவன் முசான் மனிதத்தை கருவறுக்க முயற்சிக்கிறான். வாள்வீச்சில் வல்லவர்களான 'ஹசீரா'க்கள் வர்க்கம் அதனை தடுக்கிறது. சுயநலம் கலந்த பொதுநலமாக ஹசீராக்களுடன் தஞ்சிரோ இணைந்து பிசாசுகளுக்கு பாடை கட்டுவதே 'டெமன் ஸ்லேயரு'க்கு அறிமுகம். 2-ம் பகுதி முடிவில் சகாக்கள், ஒலி 'ஹசீரா' சூயி உடன் இரட்டை பிசாசுகளை தஞ்சிரோ கொல்கிறான். உயிர் ஊசலாட பேய் கலையால் சிறுமி நெசுகோ நாயகர்களை காப்பாற்றுகிறாள்.

3-ம் அத்தியாய தொடக்கமே அதிரடியாக உள்ளது. இறந்த பிசாசுகளின் வெற்றிடத்தை நிரப்ப முசான் தலைமையில் தேடல் தொடங்குகிறது. கோமாவுக்கு சென்ற தஞ்சிரோ மீண்ட பின், உடைந்த வாளுக்கு பதிலாக புதிதை பெற கொல்லப்பட்டறை கிராமத்திற்கு செல்கிறான். மறைபொருளாக இருக்கும் கிராமத்தை மோப்பம் பிடித்து இரு முதன்மை பிசாசுகள் ஊடுருவ அங்கு பூகம்பம் கிளம்புகிறது.

மனிதர்கள் பிசாசுகளாக மாற கூறப்படும் காரணங்கள் கல்நெஞ்சை கரைக்கும். பிரமாண்டமான அனிமேஷனில் அசரவைக்கும் ஆக்ஷன் காட்சிகள் இதன் பலம். இசையும் சூப்பர் ரகம். உடன்பிறப்பு பாசம், நண்பர்களின் விசுவாசம், எதிரிகளின் வில்லத்தனம் குறித்து அக்மார்க் தரத்தில் சொல்லப்படும் இது நெட்பிளிக்சில் கிடைக்கிறது. கற்பனைக்கு அப்பாற்றப்பட்ட படைப்பு.


Next Story