சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள்..!
101 சிறப்பு ஜோடிகளுக்கு, ஒரே சமயத்தில் திருமணம் நடப்பது இதுவே முதல்முறை என்பதால், இதற்கு உலக சாதனையும் வழங்கப்பட்டிருக்கிறது. கின்னஸ் சாதனைக்கும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாக திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக கூறுவார்கள். உண்மையிலேயே, இவர்கள் அனைவரது திருமணங்களும், சொர்க்கத்தில்தான் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இல்லையென்றால், 101 மாற்றுத்திறனாளி மற்றும் ஏழை-எளிய ஜோடிகளுக்கு, ஒரே நேரத்தில் எங்களால் திருமணம் செய்து வைத்திருக்க முடியாது. அது அவ்வளவு சுலபமான காரியமும் இல்லை'' என்று மகிழ்ச்சியோடு பேச தொடங்குகிறார்கள், டபிள்யூ வி கனெக்ட் அமைப்பினர்.
இவர்கள் சமீபத்தில் மாமல்லபுரம் பகுதியில் 101 மாற்றுத்திறனாளி மற்றும் ஏழை-எளிய ஜோடிகளுக்கு பிரமாண்டமான முறையில், இலவசமாக திருமணம் நடத்தி வைத்தனர். கடற்கரை மணலில், பிரமிக்க வைக்கும் திருமண ஏற்பாடுகளுடன் இந்த திருமணம் தடபுடலாக அரங்கேறி இருக்கிறது. இப்படி 101 சிறப்பு ஜோடிகளுக்கு, ஒரே சமயத்தில் திருமணம் நடப்பது இதுவே முதல்முறை என்பதால், இதற்கு உலக சாதனையும் வழங்கப்பட்டிருக்கிறது. கின்னஸ் சாதனைக்கும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
இந்த சாதனை திருமணத்திற்கு பின்னால் ஒளிந்திருக்கும் பல சுவாரசியங்களை தெரிந்துகொள்ள, இந்த அமைப்பின் தலைவர் தட்சிணாமூர்த்தி மற்றும் இயக்குனர் நந்தினி விஜய் ஆகியோரை சந்தித்து பேசினோம். அவர்கள், பல சுவையான தகவல்களை ஒருசேர பகிர்ந்து கொண்டனர். அவை இதோ...
* எப்படி உருவானது இந்த யோசனை?
திருமணங்களை வித்தியாசமான முறையில், சிறப்பாக நடத்தி கொடுப்பதுதான் எங்களுடைய அமைப்பின் முக்கிய வேலை. எங்களை போலவே இந்தியா முழுவதும் இருக்கும் திருமண ஏற்பாட்டாளர்களை, திருமணம் சார்ந்த தொழில்முனைவோர்களை ஒருங்கிணைத்து, மிகப்பெரிய 'மாநாடு' நடத்த திட்டமிட்டோம். அதில் ஒரு அங்கமாகவே, இந்த திருமண முயற்சி அரங்கேறியது. சமூகத்திற்கு ஏதாவது கைமாறு செய்யவேண்டும் என்ற சமூக அக்கறையில் உருவானதுதான், இந்த 101 மாற்றுத்திறனாளிகள் திருமணம்.
* உங்களது கனவிற்கு எப்படி உயிர் கொடுத்தீர்கள்?
நாங்கள் சார்ந்திருந்த நல்ல உள்ளங்கள், எங்களை சார்ந்திருந்த நல்ல உள்ளங்கள்... இந்த முயற்சிக்கு, முழு ஆதரவு கொடுத்ததால், 101 ஜோடிகளுக்கான திருமண ஏற்பாடுகளை முன்னெடுத்து செல்ல முடிந்தது.
* அதிக எண்ணிக்கையிலான ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படுவது வழக்கம் தானே. நீங்கள் எப்படி வேறுபடுகிறீர்கள்?
இது இயல்பான திருமணம் அல்ல. 'டெஸ்டினேஷன் வெட்டிங்'. அதாவது, செல்வந்தர்கள் வீட்டு விஷேசங்கள் எப்படி நடைபெறுமோ, அதேபோலதான் திருமணத்திற்கு என இடம் தேடி, அங்கு வெகுவிமரிசையான திருமண ஏற்பாடுகளை செய்தோம். சமீபகாலமாக, 'டெஸ்டினேசன் வெட்டிங்' மிக பிரபலம். அதே ஸ்டைலில்தான், மாமல்லபுரத்தில் திருமண ஏற்பாடுகளை செய்தோம். 5 நட்சத்திர ஓட்டல் தேர்வில் தொடங்கி, உணவு உபசரணைகள், தோரண அலங்காரங்கள், நாதஸ்வர சங்கீதம்... என எதிலும் சமரசமின்றி, பார்த்து பார்த்து தேர்வு செய்து நடத்தினோம்.
* 101 ஜோடிகளை எப்படி தேர்வு செய்தீர்கள்?
மாற்றுத்திறனாளிகள், ஏழை-எளிய மக்களின் நலனுக்காக, முழு மூச்சாக செயல்படும் சில தொண்டு அமைப்புகளின் உதவியோடு, 101 ஜோடிகளை தேடினோம். தமிழகம் முழுவதிலும் இருந்து அப்படி பெறப்பட்ட தகவல்களில், இலவச திருமணத்திற்கு தகுதியான ஏழை-எளிய ஜோடிகளை பிரித்தெடுத்து, அவர்கள் வழங்கி இருந்த தகவல்களை ஒன்றுக்கு பலமுறை அலசி ஆராய்ந்துதான், 101 ஜோடிகளை தேர்வு செய்தோம்.
* இந்த திட்டமிடுதல் பணிகள் எவ்வளவு காலம் நீடித்தது?
கடந்த 6 மாத காலமாகவே, இதற்கான திட்டமிடுதல் மற்றும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. ஏனெனில் 101 ஜோடிகளுக்கு ஒரே நாளில், ஒரே நேரத்தில் திருமணம் நடைபெறுவதால், அவர்கள் அனைவருக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக செயல்பட்டோம். அதனால், முகூர்த்த நாள் தேர்வு, திருமணம் நடைபெறும் ஓட்டல் தேர்வு, உணவு மற்றும் அலங்கார வேலைகள்... இவை அனைத்தை யும் திட்டமிட, 6 மாத காலங்கள் ஆகின.
* மாமல்லபுரத்தை தேர்வு செய்தது ஏன்?
சமீபகாலமாக, எல்லோரும் 'டெஸ்டினேஷன் வெட்டிங்' வகையிலான திருமணங்களைதான் எதிர்பார்க்கிறார்கள். அதாவது, கோவா, ஜெய்பூர் போன்ற நகரங்களுக்கு சென்று திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார்கள். அந்தவகையில், நம் தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தையும் டெஸ்டினேஷன் வெட்டிங் தளமாக முன்னிறுத்தும் முயற்சியில்தான், மாமல்லபுரத்தை தேர்வு செய்து, திருமணம் நடத்தினோம்.
* 101 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைப்பது என்பது சுலபமானது அல்ல. செலவுகளை எப்படி சமாளித்தீர்கள்?
இப்படியொரு நல்ல காரியம் நடப்பதை அறிந்த பல நல்ல உள்ளங்கள், கல்யாண செலவில் அவர்களும் பங்கெடுத்து கொண்டனர். தாலிக்கு தங்கம், பட்டுப்புடவை-பட்டு வேஷ்டி, சீர்வரிசை செட்டுகள், கல்யாண மாலை மற்றும் அலங்கார பொருட்கள்... இப்படி ஒவ்வொரு செலவினங்களையும் பல நல்ல உள்ளங்கள், பகிர்ந்து, உதவி செய்தனர். அதனால் கல்யாணத்தை வெகுவிமரிசையாக நடத்த முடிந்தது.
* மாற்றுத்திறனாளிகள் எப்படி உணர்ந்தார்கள்?
அவர்கள், ஆரம்பத்தில் இதன் தன்மையை முழுமையாக உணர்ந்து கொள்ளவில்லை. நிறைய இடங்களில் நடைபெறுவதுபோல, மண்டபத்திற்குள் நடத்தி வைக்கப்படும் திருமணங்களை மனதில் வைத்து, எந்தவித கற்பனையும் இன்றி, வெகு இயல்பாகவே கலந்து கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் திருமண ஏற்பாடுகளை கண்கூடாக பார்த்ததும், பிரமித்து போனார்கள். எங்களது திருமணம் இப்படி தடபுடலாக நடக்கும் என்பதை கனவிலும் நினைத்து பார்க்கவில்லை என, பலரும் கண்கலங்கினர்.
* திருமண சீர்வரிசைகள் கொடுத்தீர்களா?
ஆம்...! 101 ஜோடிகளுக்கும், 2 கிராம் தங்க தாலி, ஆடம்பர திருமண உடைகளுடன் சேர்த்து மின்விசிறி, படுக்கை விரிப்பு செட்டுகள், அரிசி, சமையல் பொருட்கள் அடங்கிய சீர்வரிசைகளையும் இலவசமாக வழங்கினோம்.
* உலக சாதனை கிடைத்திருப்பது பற்றி கூறுங்கள்?
இது எதிர்பார்த்த ஒன்று என்றாலும், அது எதிர்பாராதவிதமாக எங்களது கைகளுக்கு கிடைத்தது. ஆம்...! திருமண ஏற்பாடுகளை கின்னஸ் மற்றும் மற்ற சாதனை அமைப்பினருக்கு இ-மெயில் மூலமாக தெரியப்படுத்தி இருந்தோம். அவர்களும், எங்களுக்கு செவிசாய்த்தனர். ஆனால், 101 திருமணங்கள் நடைபெற்ற அன்றே, உலக சாதனை பிரதிநிதி ஒருவர், அச்சிடப்பட்ட சான்றிதழோடு, திருமணத்திற்கு வந்து, எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இப்படி இன்ப அதிர்ச்சியாக கிடைத்த உலக சாதனை, 101 திருமணத்தை, கூடுதலாக சிறப்பாக்கியது. கின்னஸ் சாதனைக்கான முன்னெடுப்புகளும் தொடங்கி இருக்கிறது.
அடுத்த இலக்கு என எதுவும் உண்டா?
நிச்சயமாக...! மாமல்லபுரத்தை தொடர்ந்து, ஜெய்பூர் நகரில் இதுபோன்ற பிரமாண்ட திருமணத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.