தொழில் வாய்ப்புகள் மின்னும் 'நியான் அலங்காரம்'


தொழில் வாய்ப்புகள் மின்னும் நியான் அலங்காரம்
x
தினத்தந்தி 19 Aug 2023 6:49 AM IST (Updated: 19 Aug 2023 6:51 AM IST)
t-max-icont-min-icon

ஒரு காலத்தில் டிஜிட்டல் விளம்பரங்கள் பெற்றிருந்த முக்கியத்துவத்தையும், அலங்கார தொழில் யுக்தியையும் இன்று நியான் விளக்குகள் பெற்றிருக்கின்றன.

டிஜிட்டல் உலகிற்கு ஏற்ப புதுமையான நிறங்களில், புதுமையான எழுத்துருவில் (பாண்ட்) வளைந்து நெளிந்து வாக்கியங்களை எழுத நியான் விளக்குகளையும் பயன்படுத்துகின்றனர். திருமண வரவேற்பில் மணமகன்-மணமகள் பெயர்கள் நியான் விளக்குகளில்தான் இன்று ஒளிர்கின்றன. மேலும் ஷாப்பிங் மால்கள் தொடங்கி உள்ளூர் மளிகை கடைகள் வரை பல வியாபார யுக்திகளுக்கு நியான் விளக்குகளே ஜொலிக்கின்றன.

''நியான் விளக்கு மட்டுமல்ல, அதை செய்ய கற்றுக்கொள்பவர்களின் வாழ்க்கையும் பிரகாசமாகவே ஜொலிக்கும்'' என்கிறார், மணிவேல் என்ற இளைஞர். தர்மபுரி ஏர்ரப்பட்டியை சேர்ந்தவரான இவர், பொறியியல் பட்டதாரி. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி பின்னர், குடும்ப சூழலால் தன் மாமாவின் அலங்கார தொழிலை கையில் எடுத்தவர், அலங்கார வித்தையின் ஒரு அங்கமாக அறிமுகமான நியான் விளக்கில் இன்று பட்டைய கிளப்புகிறார். நிஜ மலர் அலங்காரத்துடன் நியான் விளக்குகளை ஒளிரவிட்டு, தமிழ்நாட்டில் புதுடிரெண்டை உருவாக்கிய மணிவேல், நியான் விளக்கு பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்.

* அது என்ன நியான் விளக்கு?

அலங்காரத்தின் நவீன அப்டேட். விரும்பிய வண்ணத்தில், விரும்பிய வடிவில் இதை ஒளிரவிட முடியும். இதன் விலையும், வேலைப்பாடும் குறைவு என்பதால் நியான் விளக்குகள், கடந்த 3 ஆண்டுகளில் அசூர வளர்ச்சி பெற்றுள்ளன.

* நியான் விளக்குகள் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன?

ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காக மட்டுமே இதை பயன்படுத்த வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை. கடைகள், பெட்ரோல் பங்குகள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள்... என வணிக நிறுவனங்கள் விளம்பர யுக்திக்காக பயன்படுத்துகின்றன. இதுபோக, திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் நியான் விளக்குகள் அதிக பங்காற்றுகின்றன. மண மேடை அலங்காரம், திருமண வரவேற்பு பெயர் பலகை, கல்யாண மண்டப அலங்காரம்... என பலவற்றுக்கும் இதை பயன்படுத்துகிறார்கள்.




* இது பட்ஜெட் விளக்கா?

நிச்சயமாக, மற்ற சீரியல் விளக்குகளை விட இது மலிவானது. 5 மீட்டர் நியான் விளக்கை, வெறும் 200 ரூபாய்க்குள் வாங்கிவிடலாம்.

* நியான் விளக்கு அலங்காரத்தை எளிதாக கற்றுக்கொள்ளலாமா?

மிக சுலபமாக கற்றுக்கொள்ளலாம். சால்ட்ரிங் மெஷின், நியான் விளக்கு சுருள், அக்ரிலிக் போர்ட், கொஞ்சம் கற்பனைத் திறன் இவை மட்டும் இருந்தால் போதும், நீங்களும் நியான் விளக்கு அலங்காரத்தில் அசத்தலாம்.

* நல்ல லாபம் கிடைக்குமா?

'பிறந்த நாள் வாழ்த்து' என்ற வாக்கியத்தை நியான் விளக்கில் தயாரிக்க, வெறும் 800 ரூபாய் தான் செலவாகும். ஆனால் இதை 3 ஆயிரத்திற்கு விற்பனை செய்கிறார்கள். மேலும், ஒரு நபர், ஒரு நாளில் 10 முதல் 15 நியான் விளக்கு வடிவங்களை செய்து விடலாம். இப்போது, இது லாபம் தரும் தொழிலாக தெரிகிறதா..?

* நியான் விளக்கு அலங்காரம் குறித்த விழிப்புணர்வு இளைஞர்களுக்கு இருக்கிறதா?

நியான் அலங்காரத்தை நான் கற்றுக்கொண்டது முதல் சமூக வலைத்தளங்கள் வாயிலாக நிறைய வீடியோக்களில் கற்றுக்கொடுத்தேன். அதில் நிறைய இளைஞர்கள் ஆர்வம் காட்டியதால், சென்னை உட்பட பல இடங்களில் பயிற்சி முகாம்களை நடத்தினேன். இதில் பெண்கள் உட்பட பலரும் கலந்துகொண்டு நியான் விளக்குகளை செய்ய கற்றுக்கொண்டனர்.

* புதிதாக நியான் விளக்கு அலங்காரம் தொழில் தொடங்க ஆசைப்படுபவர்கள், எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

பயிற்சி, முதலீடு... என ரூ.25 ஆயிரம் செலவழித்தால் போதும், நியான் விளக்கு அலங்காரம் கடையை அமைத்துவிடலாம்.

* விளக்கு என்பதால், ஷாக் அடிக்கும் பிரச்சினைகள் உண்டா?

இல்லை. இதில் அடாப்டர் கொண்டுதான் மின்சாரம் பாய்ச்சப்படும் என்பதால், ஷாக் அடிக்கும் தொல்லைகள் இல்லை. சிறு குழந்தைகள் கூட இதனை கையாளலாம். பாதுகாப்பானது.

* அரசு மானியம் கிடைக்குமா?

இதற்கு மட்டுமல்ல, பட்டம் பயின்றவர்கள் தொழில் தொடங்க அரசு நிறைய மானிய உதவிகளை கொடுக்கிறது. அதனால் நியான் விளக்கு தொழில் தொடங்கினாலும், பட்டதாரிகள் அரசின் மானியத்தைப் பெறலாம்.


Next Story