நம்பிக்`கை' நாயகி நிகிதா குமார்


நம்பிக்`கை நாயகி நிகிதா குமார்
x
தினத்தந்தி 31 March 2023 10:00 PM IST (Updated: 31 March 2023 10:01 PM IST)
t-max-icont-min-icon

டேபிள் டென்னிஸ் வீராங்கனையான நிகிதா குமார், காஸியாபாத்தில் டேபிள் டென்னிஸ் அகாெடமியைத் தொடங்கி 40 குழந்தைகளுக்கு இப்போது பயிற்சியளித்து வருகிறார்.

மார்ச் 18, 2012. நள்ளிரவு 12.30 மணி. உத்தரப்பிரதேசத்தின் பரபரப்பான நெடுஞ்சாலை அது. இரவுக்காட்சி முடிந்து அந்த சாலையில் தோழிகளுடன் காரில் விரைந்து கொண்டிருந்தார் இந்தியாவின் புகழ் பெற்ற டேபிள் டென்னிஸ் வீராங்கனையான நிகிதா குமார்.

அதிவேகத்தில் சீறிப்பாய்ந்த அந்தக் கார் கண்ணிமைக்கும் நொடியில் வளைவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி அப்பளம் போல நொறுங்கியது. காரில் பயணித்த ஐந்து இளம் பெண்களில் ஒருவர் விபத்து நடந்த இடத்திலேயே மரணமடைய, மற்ற நால்வரும் படுகாயத்துடன் உயிர்தப்பியது அவர்களின் அதிர்ஷ்டம்.

ஆனால், நிகிதா குமாரின் உயிரைக் காப்பாற்ற இடது கையைத் துண்டிக்க வேண்டிய நிலை. டேபிள் டென்னிஸுக்கு உயிர்மூச்சான கைகளில் ஒன்றை இழந்த நிகிதாவின் விளையாட்டு வாழ்வே கேள்விக்குறியாகியது. இடது கையை, தோழியை இழந்த சோகம் ஒரு பக்கம், 'நிகிதா அவ்வளவுதான்' என்று ஸ்பான்சர்கள் உட்பட பலரும் கைவிட்டது இன்னொரு பக்கம்.

உடல் ரீதியாகவும், மனதளவிலும் நிகிதா துவண்டுபோனார். ஐந்து வயதிலேயே டேபிள் டென்னிஸ் மட்டையைப் பிடித்து ஜூனியர் சாம்பியனாக வலம் வந்த அவரால் ஒரு நொடி கூட வீட்டில் இருக்க முடியவில்லை.

ஒரு கையாலேயே கடுமையான பயிற்சி மேற்கொண்ட இந்த நம்பிக்கைஅரசி, 2013-ல் நடந்த தாய்லாந்து ஓபனில் கலந்துகொண்டார். அதில் அவர் வெண்கலப் பதக்கத்தைத் தட்டியதுதான் ஹைலைட்.

''ஆசியன் விளையாட்டுகளில் கலந்துகொண்டு தங்கத்தைத் தட்ட வேண்டுமென்பது என் நீண்ட நாள் கனவு. ஆனால், உடல் ஊனமுற்றவர்களுக்கான ஆசியன் விளையாட்டுகளில் பங்கேற்கும்படி ஆகிவிட்டது...'' என்று வருந்துகிற நிகிதா, உடல் ஊனமுற்றவர்களுக்கான ஆசியன் விளையாட்டுப்போட்டிகளில் கலந்துகொண்டு வாகை சூடியது குறிப்பிடத்தக்கது.

சர்வதேசப் போட்டிகளில் இருந்து விலகிக்கொண்ட நிகிதா, காஸியாபாத்தில் டேபிள் டென்னிஸ் அகாெடமியைத் தொடங்கி 40 குழந்தைகளுக்கு இப்போது பயிற்சியளித்து வருகிறார். இன்று இந்தியாவின் தலைசிறந்த டேபிள் டென்னிஸ் பயிற்சிக்களமாக உயர்ந்து நிற்கிறது அந்த அகாடமி.

ஐந்து வயதிலேயே டேபிள் டென்னிஸ் மட்டையைப் பிடித்து ஜூனியர் சாம்பியனாக வலம் வந்த அவரால் ஒரு நொடி கூட வீட்டில் இருக்க முடியவில்லை.

1 More update

Next Story