தமிழர்கள் தஞ்சமடையும் 'தமிழ் குடில்'..!


தமிழர்கள் தஞ்சமடையும் தமிழ் குடில்..!
x

தெரியாத நாட்டில், மொழி புரியாத மக்களிடம் உதவி கேட்டு திண்டாடும் தமிழர்களை, தேடி பிடித்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதையே தன்னுடைய பணியாக கொண்டிருக்கிறார், ஏ.கே.மஹாதேவன்.

அமீரகம் மனிதவளமிக்க தேசம். இங்கு எப்போதும் ஏதாவது ஒரு பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். படித்தவர்கள் அதற்காக தற்காலிக விசா எடுத்து வந்து வேலை தேடுகின்றனர். ஆனால் விழிப்புணர்வு இல்லாத சிலர் முன் பின் அறிமுகம் இல்லாத ஏஜெண்ட்களிடம் பணத்தை கொடுத்து வேலை தேடுகிறார்கள்.

அவர்கள் என்ன வேலை வாங்கி கொடுப்பார்கள், உண்மையிலேயே வேலை வாங்கி கொடுப்பார்களா..? என்பது எல்லாம், சந்தேகத்திற்குரிய கேள்விகள்தான்.

அவ்வாறு ஏஜெண்ட்கள் மூலம் பணம் கொடுத்து சரியான வேலை கிடைக்காமல், துன்புறுத்தப்பட்டு ஒரு கட்டத்தில் அங்கு இருந்து வெளியேறி வீதியில் தஞ்சமடைபவர்கள், ஏராளம்.

தெரியாத நாட்டில், மொழி புரியாத மக்களிடம் உதவி கேட்டு திண்டாடும் தமிழர்களை, தேடி பிடித்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதையே தன்னுடைய பணியாக கொண்டிருக்கிறார், ஏ.கே.மஹாதேவன்.

ஆம்...! இதற்காகவே, அவர் அங்கு தமிழ் குடில் என்ற காப்பகத்தையும் நடத்தி வருகிறார்.

ஏஜெண்ட்களால் ஏமாற்றப்பட்டு அமீரகத்தில் திக்கு திசை தெரியாமல் தவிப்பவர்கள், அமீரக பணியிடத்தில் கொடுமைக்கு உள்ளாகி அங்கிருந்து தப்பித்தவர்கள்... என பலரும் தமிழ் குடிலில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். அவர்களுக்கு உணவு, இருப்பிடம் போன்ற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் மஹாதேவன், அவர்களின் சிக்கல்களுக்கு சட்ட ரீதியில் தீர்வு காண முயல்கிறார். முடியாதபட்சத்தில், அவர்களை சொந்த ஊருக்கு பத்திரமாக அனுப்பி வைக்கிறார்.

இதை அறிந்ததும், துபாய் ஹோர் அல் அன்ஸ் பகுதியில், அமைந்திருந்த தமிழ் குடில்-ஐ பார்வையிட சென்றிருந்தோம். அங்கு மீட்கப்பட்ட தமிழர்களுடன் நடுவில் சமூக ஆர்வலர் மஹாதேவன் அமர்ந்திருந்தார்.

பெரும்பாலும் புதுக்கோட்டை, மதுரை, கள்ளக்குறிச்சி போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள்தான், அங்கு அதிகம் இருந்தனர். அவர்களை சந்தித்து பிறகு சமூக ஆர்வலர் மஹாதேவனிடம் நமது கேள்வியை தொடர்ந்தோம். அவரிடம் கேட்ட கேள்விகள் மற்றும் பதில்கள் பின்வருமாறு...

* உங்களை பற்றி சொல்லுங்கள்?

எனக்கு சொந்த ஊர் நாகர்கோவில். டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங், பி.பி.ஏ, எம்.பி.ஏ படித்திருக்கிறேன். எனது தந்தை எஸ்.கிருஷ்ணமூர்த்தி உதவி அஞ்சல் அதிகாரியாக இருந்தவர். தாய் எம்.மீனாட்சி தமிழ் ஆசிரியை. இருவரும் மறைந்து விட்டனர். எனது மனைவி ராஜலட்சுமி கோயம்புத்தூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஒரு மகள் அவருடன் பணிபுரிகிறார்.

மகன் உயர்நிலை பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படிக்கிறார். 21 ஆண்டு வெளிநாட்டு வாழ்க்கையில் அமீரகத்தில் கடந்த 17 ஆண்டுகளாக வசித்து ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறேன்.

* இந்த சமூகப்பணிகளில் எப்போது ஈடுபட தொடங்கினீர்கள்?

சிறு வயது முதலே மக்கள் பணியில் ஈடுபாடு இருந்தது. கொரோனா தொற்று பரவல் காலகட்டத்தில்தான், இந்த செயல்பாடுகள் அதிகரித்தன. கொரோனா பாதிக்கப்பட்ட மக்களையும், சொந்த ஊருக்கு திரும்ப விரும்பியவர்களையும் மீட்டு பத்திரமாக சொந்த ஊருக்குள் அனுப்ப ஆரம்பித்தேன். அப்படி ஆரம்பமான இந்த சேவைக்காக, அமீரக நண்பன் என்ற வாட்ஸ் அப் குழு தொடங்கினேன். அதில் ஆயிரக்கணக்கானோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

முதலில் 7 பேருக்காக அறை எடுத்து இந்த பணியை தொடங்கினேன். அப்போது அனைத்து செலவீனங்களையும் செய்வது பெரிய விஷயமாக தெரியவில்லை. ஒரு மாதம் அடைக்கலம் கொடுக்க தொடங்கியதும் அதன் தொடர்ச்சியாக 3 மாதமாக நீடித்து இன்று நிரந்தரமாக 'தமிழ் குடில்' என்ற அறை செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் 30 பேர் தங்கி தீர்வு பெற்று செல்கின்றனர்.

* அமீரகத்தில் எந்தெந்த மாதிரியான தொண்டுகளை செய்து வருகிறீர்கள்?

சொந்த ஊரில் இருந்து வந்து சிக்கல்களில், பிரச்சினைகளில் மாட்டிக்கொண்டு தவிப்பவர்களை மீட்டு தாயகத்திற்கு அனுப்பி வைப்பது, காப்பகத்தில் இருக்க இடம், உணவு என அத்தியாவசிய வசதிகளை இலவசமாக செய்து தருவது, உணவின்றி வீதிகளில் உறங்குபவர்களை மீட்டு அவர்களை பத்திரமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பது, வீட்டு வேலை செய்பவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு, இலவசமாக வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவது, மருத்துவ உதவி மற்றும் பாதுகாப்பு என என்னால் முடிந்த அனைத்தையும் முழு மனதுடன் செய்து வருகிறேன்.

* இதில் நீங்கள் மறக்க முடியாத அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்?

நிச்சயமாக, 20 ஆண்டுகள் கடந்தும் விசா இல்லாமல் தவித்த மதியழகன் என்பவருடைய அபராதங்களை ரத்து செய்ய உதவி கோரி, அவரை தாயகத்திற்கு திருப்பி அனுப்பி வைத்தேன். அதேபோல மனநலம் குன்றி தான் யார் என்றே உணர முடியாத நிலையில் இருந்த சிராஜ் மற்றும் கணேசன் என்பவர்களை மீட்டு அவர்களுக்கு உரிய உளவியல் ஆலோசனை அளித்து விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தோம்.

திருச்சியில் இருந்து வந்து, அமீரகத்தில் சிக்கிக்கொண்ட சகோதரி மீனாவை மீட்டெடுத்து அனுப்பியது, தங்க கடத்தலில் ஈடுபட இருந்த ராஜ்குமார் என்பவரை மீட்டு அவருக்கு ஆலோசனை கூறி அனுப்பி வைத்தது என நூற்றுக்கணக்கானோருக்கு செய்த பணிகள் நிறைய உள்ளது.

* உங்களிடம் அழைப்பு வரும்போது அதன் நம்பகத்தன்மையை சரி பார்ப்பீர்களா? போலியான அல்லது தவறான நபரை எப்படி அடையாளம் காண்பீர்கள்?

எனக்கு வருகிற எந்த அழைப்பையும் நான் தவறவிடுவது இல்லை. மிஸ்டு கால் செய்தாலும் அழைத்து பேசிவிடுவேன். உண்மையில் உதவி வேண்டுவோரை அவரது அழைப்பிலேயே அறிந்துகொள்ளலாம். முதலில் அவரது நிலை குறித்து அறிந்துகொள்வேன். அவர் சாப்பிட்டு விட்டாரா? என்பது எனது முதல் கேள்வியாக இருக்கும். உடனடியாக அந்த நபரை எனது குழுவில் உள்ள உறுப்பினர் அல்லது நண்பர்கள் உதவியுடன் முதற்கட்டமாக அவரை ஒரு இடத்தில் அமர வைக்க கூறிவிடுவேன். அந்த நபருக்கு உணவளித்து பிறகு நான் சென்று அவரை தமிழ் குடிலுக்கு அழைத்து வந்து தங்க வைப்பேன். பெரும்பாலும் தவறான நபர்களிடம் இருந்து அழைப்பு வருவது இல்லை.

* இங்கு வருபவர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு அனுப்பப்படுகிறார்களா, அதனை எப்படி செய்கிறீர்கள்?

பெரும்பாலும் இங்கு அடைக்கலம் தேடி வருபவர்களுக்கு பாஸ்போர்ட் இருப்பது இல்லை. அவர்களுக்கு துணைத்தூதரகத்தின் உதவியுடன் அவுட் பாஸ் எனப்படும் வெள்ளை பாஸ்போர்ட் பெற்று அனுப்பி வைக்கும் பணியையும் செய்து வருகிறோம். இதனை நான் மட்டுமல்ல, பல்வேறு நண்பர்கள் குழுவின் உறுப்பினர்கள் உதவியுடன் அனைத்தையும் செய்து வருகிறேன். இங்கு செலவீனங்களுக்கு நாங்கள் பணமாக எதையும் பெறுவது இல்லை. அமீரக சட்ட திட்டங்களை மதித்து அதுபோன்ற நன்கொடைகளை பெறுவது இல்லை. அது அவசியமும் இல்லை. தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை நண்பர்கள் கொடுத்து உதவுகின்றனர். ஒருபோதும் தடையில்லாமல் எங்கிருந்தோ உதவிகள் கிடைத்துக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக எனக்கு உறுதுணையாக தமிழ் குடிலில் தங்கியிருக்கும் மஹாதேவன்-விசாலாட்சி என்ற தம்பதி இங்குள்ளவர்களை தங்கள் பிள்ளைகளாக கருதி வந்து பார்த்து வேண்டியதை செய்து கொடுக்கின்றனர்.

* இங்கு வரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதா?, குறைகிறதா?

இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவே கருதுகிறேன்.

* தூதரகம், துணைத்தூதரகம் போன்ற இந்திய அரசுத்துறைகள் இதுபோல செய்ய முடியாதா? நீங்கள் அப்படி என்னென்ன செய்கிறீர்கள்?

முடியும், ஆனால் அனைவரது பிரச்சினையையும் தெருவில் இறங்கி அவர்களால் முடித்துக்கொடுக்க முடியாது அல்லவா? அவர்கள் இந்த நாட்டின் சட்டத்திற்குட்பட்டு குறிப்பிட்ட வளாகத்திற்குள் தங்கள் அதிகார வரம்புக்குட்பட்டு சேவைகளை அளிக்க முடியும். அமீரகத்தில் இதுபோன்ற தொழிலாளர் பிரச்சினைகளுக்காக அரசு சார்பில் அமெர், தஸ்ஹீல் போன்ற அரசு சேவை மையங்கள் உள்ளது. அங்குள்ள சேவைகளை நமது தொழிலாளர்களுக்கு பெற்றுத்தர உதவி வருகிறேன். துபாயில் ஈமான் அமைப்பு சார்பிலும், பல்வேறு நிறுவனங்கள் சார்பிலும் தன்னார்வ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றையெல்லாம் தேவைப்படுவோருக்கு எடுத்துச்சென்று சேர்க்கும் தபால்காரர் பணியை போலத்தான் இதனை செய்து வருகிறேன்.

* எதிர்காலத்தில் என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்? இதனை விரிவுபடுத்தும் எண்ணம் உள்ளதா?

இன்றைய தினத்தில் மஹாதேவன்-விசாலாட்சி தம்பதிகள் போல முகம் தெரியாத பலரது உதவிகள் கிடைத்து வருகிறது. அவர்களுக்கு தூக்கத்தில் கூட தமிழ் குடில் நினைவுதான் இருக்கும். அந்த அளவுக்கு அனைவர் மனதிலும் தமிழ் குடில் இன்றைக்கு குடிகொண்டுள்ளது. இங்கிருந்து பலர் தீர்வு கிடைத்து சென்று விட்டால் அடடா!! இடம் காலியாக உள்ளதே என ஒருபுறம் தோன்றினாலும் ஏமாற்றப்படுபவர்களின் எண்ணிக்கை குறைகிறதே என்ற மகிழ்ச்சியும் மனதில் இருக்கும். 'தமிழ் குடில்' அமைத்து, ஏமாறுபவர்கள் தஞ்சமடைய வைக்கும் சேவையை தொடர அவசியம் இல்லாத காலம் வர வேண்டும் என்பதே எனது எண்ணமாக உள்ளது.

அவரது எண்ணம் நிறைவேறட்டும்...!


Next Story