சர்வதேச அரங்கில் அசத்தும், 'குட்டி மாடல்'


சர்வதேச அரங்கில் அசத்தும், குட்டி மாடல்
x

6 வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் ரிஷான், அதற்குள்ளாக சர்வதேச மாடலிங் அரங்கிற்குள் கால்பதித்துவிட்டார். கடந்த ஆண்டு கோவையில் நடந்த மாநில பேஷன் போட்டியில் விளையாட்டாக கலந்துகொண்ட ரிஷான், முதல் பேஷன் போட்டியிலேயே இளம் மாடலாக வெற்றிபெற்று அசத்தினார். இதைத்தொடர்ந்து கிடைத்த தேசிய அளவிலான பேஷன் போட்டியிலும் வெற்றிபெறவே, அடுத்த வாரம் தாய்லாந்தில் நடைபெற இருக்கும் சர்வதேச பேஷன் போட்டியில் பங்கேற்க இருக்கிறார். இந்த போட்டியில், மிக குறைந்த வயதில் பங்கேற்பவர் என்ற பெருமையும் ரிஷானுக்கு கிடைக்க இருக்கிறது. இதுதொடர்பாக ரிஷான் குடும்பத் தினருடன் சிறு கலந்துரையாடல்....

''எங்களுடைய குடும்ப நண்பர் புகைப்பட கலைஞராக இருப்பதால், ரிஷானை-ஐ வைத்து விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறோம். அதில் கிடைத்த அனுபவம், போஸ் கொடுக்கும் விதம்... இவைதான், ரிஷானை மாடல் குழந்தையாக மாற்றியிருக்கிறது. கோவை பேஷன் ஷோ நிகழ்ச்சி பற்றி தெரிந்து கொண்டதும், மிகவும் விளையாட்டாக ரிஷானை அதற்காக தயார்படுத்தினோம். ஆனால் ஆடம்பர தயாரிப்புகள் இன்றி, சிறந்த பேஷன் மாடலாக தேர்வாகி, பிரபல மாடல் ஓஸ்மா ஜாஸ்மினின் பாராட்டுகளை பெற்றான். அதுதான், மாடலிங் பயணத்திற்கான டிக்கெட்'' என்று ரிஷானின் தந்தை கிருஷ்ணா பேசி முடிக்க, தாய் சங்கீதா தொடர்ந்தார்.

''கோவை வெற்றியினால், கொச்சியில் நடந்த தேசிய மாடலிங் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. கேரளா, குஜராத், ஹைதராபாத், டெல்லி என இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து மாடலிங் குழந்தைகள் பங்கேற்றதால், இம்முறை சுதாரித்துக்கொண்டு, சிறப்பான தயாரிப்போடு களம் கண்டோம். மன்னர்கள் உடை, தேசிய சின்னங்கள் அடங்கிய உடை ஆகியவற்றை அணிந்து ராம்ப் வாக் செய்து அசத்தினான். கூடவே, தனித்திறமை சுற்றில் சிலம்பம் சுழற்றி மதிப்பெண் பெற்றான். இவனுடைய முகபாவனையும், போஸ் கொடுக்கும் திறமையும் 'புரொபெஷனலாக' இருந்ததால், கொச்சி போட்டியையும் வென்றான். இதைத்தொடர்ந்து தாய்லாந்து சர்வதேச போட்டிக்கு தயாராகி வருகிறோம்'' என்றவர், சர்வதேச போட்டியின் சிறப்புகளை கூறினார்.

''இந்த மாடலிங் போட்டிகளை ஒருங்கிணைக்கும் நிறுவனம்தான், இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் மிஸ்டர், மிஸ் மற்றும் மிசர்ஸ் போட்டிகளை நடத்துபவர்கள். இப்போது 4 வயது, 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான சர்வதேச பேஷன் ஷோ போட்டிகளை நடத்துகிறார்கள். இதில் உடை சுற்று, நடை சுற்று, தனி திறமை சுற்று, உரை நிகழ்த்தும் சுற்று.... என பல்வேறு சுற்றுக்கள் இருக்கும். அவை ஒவ்வொன்றிலும் நாம் சிறப்பாக செயல்பட்டால்தான், வெற்றிக்கான மதிப்பெண் கிடைக்கும். எதார்த்தமாக பேஷன் உலகிற்குள் நுழைந்திருந்தாலும், சர்வதேச போட்டிக்கான தரத்தில் தயாராகி வருகிறோம். இத்தகைய சர்வதேச மாடலிங் போட்டிகளில், 6 வயதிற்குட்பட்ட பிரிவில் சென்னையை சார்ந்த குழந்தைகள் இதுவரை கலந்துகொண்டதே இல்லை என்பதால், மகிழ்ச்சியுடன் கூடிய பதற்றமும் இரட்டிப்பாகி இருக்கிறது'' என பதற்றத்துடன் பேசி முடித்தார். இவர்களிடம் தென்பட்ட பதற்றம் கொஞ்சமும் இல்லாமல், ஜாலியாக அமர்ந்திருந்த ரிஷானிடம் பேச, மழலை மொழியில் உரையாட ஆரம்பித்தான்.

''இந்த முறை, (தனித்திறமை சுற்றில்) சிலம்ப கம்பு, ஈட்டி, வாள்... இவைகளுடன் நடனமாட பயிற்சி எடுத்திருக்கேன். அடுத்த வாரம் நல்லா ஆடி முடிச்சிருவேன்னு நினைக்கிறேன். மம்மியும், டாடியும் காஸ்டியூம் ரெடி பண்ணிட்டாங்க. எல்லாம் 'ஓகே' தான்'' என்று படபடவென பேசி சென்றான் ரிஷான்.

இவற்றை பேசி முடிப்பதற்குள்ளாகவே, அவ்வளவு ஸ்டைல், அவ்வளவு 'முகபாவனை' செய்து காண்பித்து, சர்வதேச மாடலிங் போட்டியாளருக்கான தரத்தை நிரூபித்துச் சென்றான்.


Next Story