சாதனை நாயகன் கார்லோஸ் அல்கராஸ்


சாதனை நாயகன் கார்லோஸ் அல்கராஸ்
x

நாடு: ஸ்பெயின், முர்சியா நகரம்

பிறப்பு: 2003-ம் ஆண்டு, மே 5-ந் தேதி

பெற்றோர்: கார்லோஸ் அல்கராஸ் கோன்சலஸ்-வர்ஜீனியா கார்பியா எஸ்கண்டன்

டென்னிஸ் ஆர்வம்

20 வயது இளைஞன், பல டென்னிஸ் ஜாம்பவான்களை வீழ்த்தி விம்பிள்டன் பட்டம் வென்றது, நமக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அவரது தந்தை, தாத்தா ஆகியோரும் டென்னிஸ் வீரர்கள். இதில் கார்லோஸின் தந்தை, ஸ்பெயின் ஓபன் சாம்பியன்ஷிப் வரை முன்னேறியவர். ஸ்பெயினில் இவர்களுக்கு என டென்னிஸ் அகாடமியும் இயங்குகிறது. இவருடன் பிறந்தவர்களும் அங்குதான் டென்னிஸ் பயிற்சி பெறுகிறார்கள்.

தந்தை வழிகாட்டுதல்



கார்லோஸ் அல்கராஸின் டென்னிஸ் வாழ்க்கையை கட்டி எழுப்புவதில் முக்கிய பங்கு, அவரது தந்தைக்கு உண்டு என்று சொன்னால் அது மிகையல்ல. தனது மகனுக்கு டென்னிஸ் பயிற்சிகளை வழங்கி, அவரை சாதனையாளராக மாற்றுவதற்காக முன்னாள் உலகின் நம்பர் 1 வீரரான ஜுவான் கார்லோஸ் பெரெராவை பயிற்சியாளராக நியமித்தார். இந்த கூட்டணி, டென்னிஸ் வரலாற்றை மாற்றி எழுத ஆரம்பித்தது.

வெற்றி படிகள்

இளம் வயதிலேயே (17 வயது) ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகளில் பங்கேற்ற சாதனையுடன் தன்னுடைய சர்வதேச டென்னிஸ் வாழ்க்கையை ஆரம்பித்த கார்லோஸ், யு.எஸ். ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் ரபேல் நடால் மற்றும் நோவக் ஜோகோவிச் ஆகியோரை தோற்கடித்து, ஏ.டி.பி. தரவரிசையில் நம்பர்-1 இடத்தைப் பிடித்த இளம் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

உலக தரவரிசையில் அவரது நகர்வு நம்பமுடியாத அளவுக்கு இருந்தது. 2021-ஆண்டு, தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் நுழைந்து, பின்பு யு.எஸ். ஓபன் போட்டிகளுக்கு பிறகு முதல் 50 இடங்களுக்கு முன்னேறினார். மியாமி வெற்றி காரணமாக உலகின் 11-வது இடத்தைப் பிடித்தார்.

விம்பிள்டன்-2023 வெற்றி

பரபரப்பான ஐந்து செட் இறுதிப் போட்டியில் அல்கராஸ், நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்து தனது முதல் விம்பிள்டன் பட்டத்தை வென்றார். இந்த வெற்றியானது அவைர வளர்ந்து வரும் சாதனையாளர்களின் பட்டியலில் சேர்த்தது. மேலும் அவரை ஓபன் சகாப்தத்தில் மூன்றாவது இளைய விம்பிள்டன் சாம்பியனாக்கியது.

மிகப்பெரிய சாதனைகள்

20 வயதே ஆன அல்கராஸ் ஏற்கனவே தனது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மைல்கற்களை அடைந்துள்ளார். விம்பிள்டன் சாம்பியன்ஷிப் (2023), யு.எஸ்.ஓபன் (2022) மற்றும் நான்கு மாஸ்டர்ஸ், பன்னிரெண்டு ஏ.டி.பி. டூர்-லெவல் ஒற்றையர் பட்டங்கள் உட்பட சுமார் ஆயிரம் வெற்றிகளை ருசித்திருக்கிறார்.

மிகப்பெரிய போட்டியாளர்

அல்கராஸ் தனது வாழ்நாள் முழுவதும் பல்வேறு வலிமைமிக்க போட்டியாளர்களை எதிர்கொண்டிருந்தாலும், 'பிக் 3'-க்கு (ரோஜர் பெடரர், ரபேல் நடால் மற்றும் நோவக் ஜோகோவிச்) எதிரான அவரது போட்டிகள் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றன. எல்லோராலும் அதிகம் ரசிக்கப்பட்டன.

விளையாட்டு ஸ்டைல்

அல்கராஸ் ஆல்-கோர்ட் வீரர். ஆக்ரோஷமான விளையாட்டு பாணியைக் கொண்டவர். சக்திவாய்ந்த முன்கை ஷாட் மற்றும் திறமையான பின் கை ஷாட் மூலம் போட்டியாளர்களை திணறடிக்கக்கூடியவர். மேலும் 'டிராப் ஷாட்' இவரது கூடுதல் திறன். அல்கராஸின் உடல்வாகு, ஆக்ரோஷமான 'சர்வ்' மற்றும் மன உறுதி ஆகியவை போட்டியாளர்களை வெகுவாக மிரட்டுகிறது.

சொத்து மதிப்பு

2022-ல் அல்கராஸின் வருமானம் 5.9 மில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது அவரது டென்னிஸ் விளையாட்டில் இருந்து கிடைக்கும் வருவாய் என்றால், பிராண்டிங் மூலமாக அதைத்தவிர சுமார் 5 மில்லியன் டாலர்கள் வருவாய் பெறுகிறார். இனிமேல் மேலும் அதிகரித்து, அவரது நிகர மதிப்பு கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காதலி


தற்போது மரியா உடன் டேட்டிங் செய்கிறார், கார்லோஸ் அல்கராஸ். இருவரும் ஸ்பெயினின் முர்சியா என்ற நகரத்தைச் சேர்ந்தவர்கள். சிறுவயது முதல் ஒருவரையொருவர் அறிந்தவர்கள். இருவரும், தங்கள் உறவை மறைத்து வைத்திருந்தாலும், அல்கராஸ் மரியாவை முத்தமிட்ட இன்ஸ்டாகிராம் கதை, அவர்களின் காதல் ஈடுபாட்டை அம்பலப்படுத்திவிட்டது.


Next Story