எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப்பிடித்த மீனவ இளைஞர்...!


எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப்பிடித்த மீனவ இளைஞர்...!
x

எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப்பிடித்த சாதனையோடு சென்னை திரும்பியிருக்கும் ராஜசேகர் பச்சை-ஐ சந்தித்து பேசினோம்.

அவர், எவரெஸ்ட் மலையேற ஆசைப்பட்டது தொடங்கி, எவரெஸ்ட் சிகரத்தை தொட்டது வரையிலான சுவையான சுவாரசிய அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். அவை இதோ...

* உங்களை பற்றி கூறுங்கள்?

சென்னையை அடுத்த கோவளம் பகுதிதான், என் சொந்த ஊர். மீனவ குடும்பத்தை சேர்ந்த நான், பி.சி.ஏ. படித்திருக்கிறேன். அட்வெஞ்சர் நிறைந்த விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம் என்பதால், கயாகிங், அலைச்சறுக்கு பயிற்சிகளை பெற்றிருக்கிறேன். தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று, பரிசுகளையும் வென்றிருக்கிறேன். அதனால், அலைச்சறுக்கு பயிற்றுனர், பிட்னஸ் கோச்... போன்ற பல அடையாளங்கள் எனக்கு உண்டு.

* மலையேற்ற பயிற்சி மீது ஆர்வம் வந்தது எப்படி?

அலைச்சறுக்கு போட்டிகளில், என்னதான் கஷ்டப்பட்டு பயிற்சி எடுத்து உழைத்து பரிசுகளை வென்றாலும்... அந்த உழைப்பையும், வெற்றியின் மகிழ்ச்சியையும் என்னால் முழுமையாக கொண்டாட முடியவில்லை. ஏனெனில், ''மீனவனுக்கு கடல் விளையாட்டுகளும், அலைச்சறுக்கும் வெகு சுலபமானது'' என என் காதுபடவே நிறைய பேர் பேசியிருக்கிறார்கள். அதனால் எனக்கு முன்பின் அறிமுகமில்லாத ஒன்றில் சாதனைப்படைக்க வேண்டும் என்ற எண்ணமும், இதுவரை யாரும் செய்திராத செயல்களை செய்து சாதனை படைக்க வேண்டும் என்ற சிந்தனையும் தோன்றியது. அதன் வெளிப்பாடுதான், எவரெஸ்ட் மலையேற்றம்.

* எவரெஸ்ட் பயணத்திற்கு எப்போது தயாராகினீர்கள்?

கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் தான், எவரெஸ்ட் மலையேறி சாதனை படைக்கும் எண்ணம் தோன்றியது. கடந்த ஒரு வருடங்களாகவே இதற்கான பயிற்சிகளை முன்னெடுத்தேன்.

* எத்தகைய பயிற்சிகளை முன்னெடுத்தீர்கள்?

உடலை தயார்படுத்துவதற்கு முன்பாக, என் மனதை தயார்படுத்தினேன். என்னால் நிச்சயம் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப்பிடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை எனக்குள் வளர்த்துக்கொண்டேன். பிறகு, சென்னையில் இருக்கும் திரிசூல மலையிலும், வெள்ளையங்கிரி மலையிலும் ஆரம்பக்கட்ட பயிற்சிகளை தொடங்கினேன். முன் அனுபவம் இல்லாமல் திடீரென மலையேற்ற பயிற்சிகளை மேற்கொண்டது, சவாலாக இருந்தாலும் என்னுடைய குறிக்கோளில் கண்ணும் கருத்துமாய் இருந்தேன்.

* எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப்பிடிப்பது, பொருளாதார அளவிலும் சுலபமான காரியமில்லை. நீங்கள் எப்படி சமாளித்தீர்கள்?

ஆம்...! செலவு நிறைந்த முயற்சிதான். பயிற்சி எடுக்கவே நிறைய செலவழிக்க வேண்டிய நிலையில், என்னுடைய ஆசையை சபரீசன் என்பரிடம் தெரியப்படுத்தினேன். அவர், எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப்பிடிக்க முழு உதவிகளை செய்து கொடுத்தார். குளிரான சீதோஷண நிலையில் மலையேற்ற பயிற்சி பெறுவதற்காக, குலு மணாலிக்கு அனுப்பி வைத்து, பயிற்சி பெற உதவினார். அதுமட்டுமல்ல... பயிற்சியில் தொடங்கி எவரெஸ்ட் சென்று திரும்பியது வரை... எல்லா தருணங்களிலும் உறுதுணையாக நின்று, என் கனவிற்கு உயிர்கொடுத்தார்.

* எவரெஸ்ட் சிகரத்தை எட்டிவிட முடியும் என நம்பினீர்களா?

ஆரம்பத்தில், என் மீது எனக்கே நம்பிக்கையில்லை. இருப்பினும், தொடர் பயிற்சிகளினால் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டேன்.

* எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப்பிடிக்க ஆசைப்பட்டதும் என்ன செய்தீர்கள்?

எவரெஸ்ட் சிகரத்தை, தனி மனிதனாக ஏறி கடந்துவிட முடியாது. நேபாளத்தை சேர்ந்த ஒரு நிறுவனம்தான் எவரெஸ்ட் சிகர பயணத்தை ஒருங்கிணைக்கிறது. அவர்கள், உடல் பரிசோதனை செய்து, நம்மை சில மலை சிகரங்களை ஏற வைத்த பிறகுதான் எவரெஸ்ட் பயணத்திற்கு தயார்படுத்துவார்கள். அப்படிதான், நானும் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப்பிடித்தேன்.

* எத்தனை நாட்களில், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தீர்கள்?

எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப்பிடிக்க, 45 முதல் 50 நாட்கள் ஆனது.

* எவரெஸ்ட் சிகர பயணம், உங்களை எப்படி சோதித்தது?

நாம் வெறும் கை, வெறும் காலோடு எந்தவிதமான சுமையும் இன்றி மலையேறுவதே கடினமாக இருக்கும். இதில் நமக்கு தேவையான பொருட்களை முதுகு பையில் சுமந்து கொண்டு, கடுங்குளிரில் மலையேறுவது எவ்வளவு சவாலானதாக இருக்கும் என யோசித்து பாருங்கள்.

மலையேற்றத்திற்கு உபயோகிக்கும் ஷூ ஒவ்வொன்றும், 3 கிலோ எடை இருக்கும். முதுகு பையில் 15 கிலோவிற்கு குறையாமல் பொருட்கள் இருக்கும். இதோடு ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும் மலை சிகரத்தில் மலையேற வேண்டும். நான் சென்றிருந்த குழுவில், என்னை தவிர மற்றவர்கள் அனைவருமே வெளிநாட்டவர் என்பதால், நான் தனிமைக்கு தள்ளப்பட்டேன். முதல் 10 நாட்கள் உடல் அழுத்தமும், மன அழுத்தமும் என்னை வெகுவாக சோதித்துவிட்டது. இதற்கு மத்தியில், எங்கு திரும்பினாலும் வெள்ளை நிறத்தில் பனியும், செங்குத்தான மலைகளுமே காட்சி தரும். என்னுடன் பேச, என்னை உற்சாகப்படுத்த யாருமே இல்லை என்ற கவலை எனக்குள்ளாகவே இருந்தது. இருப்பினும், 10 நாட்களில் அந்த சீதோஷண நிலையும், சக மனிதர்களும் எனக்கு பழக்கமாகிப் போனார்கள். அதனால் நிலைமையை சமாளித்துவிட்டேன்.

* எவரெஸ்ட் பயணத்தில் மறக்கமுடியாத அனுபவம் உண்டா?

நான் மலையேறி கொண்டிருக்கிறேன். எங்களுக்கு முன்பாக ஏற்கனவே மலையேறி சென்றவர்களில் சிலர் இயற்கை பேரிடராலும், உடல் பாதிப்பினாலும் இறந்துவிட்டார்கள். அவர்களது உடல்களை கடக்கும் போதெல்லாம், ஒருவித பதற்றம் என்னை தொற்றிக்கொள்ளும். உள்ளம், திடீரென கனமாகும்.

* மலையேற்ற பயணத்தின்போது, என்ன சாப்பிட்டீர்கள்?

வெந்நீர் கலந்து உண்ணக்கூடிய இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், சாதம் மற்றும் பிளாக் டீ-காபி தான் எவரெஸ்ட் பயணத்தின் போதான சாப்பாட்டு வகைகள். மைனஸ் 30 டிகிரியில், உலகிலேயே மிகப்பெரிய மலைசிகரத்தில் இவைகளை சமைத்து சாப்பிட முடிந்ததே நாங்கள் செய்த அதிர்ஷ்டம்.

* உயிரை பணயம் வைக்கும் சாதனை இது. குடும்பத்தினரின் ஆதரவு உங்களுக்கு கிடைத்ததா?

என்னை உற்சாகப்படுத்தி, சிறப்பாக வழி நடத்தினார்கள். எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து கீழ் பகுதிக்கு இறங்க, 5 நாட்களாகும். அந்த 5 நாட்களும் எந்தவிதமான தகவல் தொடர்பும் இருக்காது. அந்த 5 நாட்களில் பத்திரமாக தரை இறங்கிவிடவும் முடியும். இல்லையேல் துரதிருஷ்டவசமாக ஏதாவது விபத்துகளில் சிக்கிவிடவும் முடியும். அந்த 5 நாட்களையும், கனத்த மனதுடனே என்னுடைய குடும்பத்தினர் கடந்திருக்கின்றனர்.

* எவரெஸ்ட்டை எட்டிப்பிடித்துவிட்டீர்கள். இன்னும் வேறு என்ன செய்ய இருக்கிறீர்கள்?

உலகில் இருக்கும் 7 கண்டங்களுக்கும் சென்று அங்கிருக்கும் மிகப்பெரிய மலைச் சிகரங்களில் கால்பதிக்க வேண்டும் என்பதே, என்னுடைய ஆசை.


Next Story