குறுங்கவிதை வடிவில் திருக்குறள்... பெண் கவிஞரின் புதுமுயற்சி..!


குறுங்கவிதை வடிவில் திருக்குறள்... பெண் கவிஞரின் புதுமுயற்சி..!
x

1330 திருக்குறளையும், நீண்ட நெடிய விளக்க உரைகள் இன்றி எளிமையான குறுங்கவிதைகளாக மாற்றினால் எப்படி இருக்கும்..? கவிச்சோலை போல இருக்கும் அல்லவா...! அப்படியொரு அமர்க்களமான வேலையை செய்திருக்கிறார், சித்ரா மகேஷ். பொள்ளாச்சியை பூர்வீகமாக கொண்டவரான இவர், தமிழ் கவிதைகள் குறித்த பி.எச்டி ஆராய்ச்சியை முன்னெடுத்தவர். திருமணத்திற்கு பிறகு குடும்பத்துடன் அமெரிக்காவின் டாலஸ் நகரில் செட்டிலாகினாலும், தமிழ் மீதான ஆர்வமும், தமிழ் இலக்கியங்களை ரசித்து வாசிக்கும் காதலும் அவருக்கு குறைந்தபாடில்லை.

தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றிருக்கும் காதலை மையப்படுத்தி, 'காதல் கதை சொல்லட்டுமா..?' மற்றும் 'பூக்கள் பூக்கும் தருணம்' என இரு புத்தகங்களை எழுதியிருப்பதுடன், இப்போது திருக்குறளை குறுங்கவிதைகளாகவும் மாற்றி பிரமிக்க வைத்திருக்கிறார்.
திருக்குறள் குறுங்கவிதை புத்தக வேலைகளுக்காக, அமெரிக்காவில் இருந்து சென்னை வந்திருந்த சித்ரா மகேஷிடம் பேசினோம். திருக்குறள் குறுங்கவிதைகள் சம்பந்தமான பல சுவாரசியங்களை பகிர்ந்து கொண்டார். அவை இதோ....

தமிழ் இலக்கியங்கள் மீதான காதல் எப்போது அரும்பியது?

திருமணம் முடிந்து அமெரிக்காவில் செட்டிலாகினாலும், அங்கிருந்த தமிழ் சங்கங்கள் மூலமாக தமிழோடு இணைந்திருந்தேன். அங்கு நடைபெறும் தமிழ் வளர்ச்சி பணிகளில் என்னை ஐக்கியப்படுத்திக் கொண்டேன். அப்படி 2016-ம் ஆண்டு, திருக்குறள் ஒப்புவிப்பு முயற்சியை முன்னெடுக்க, அது சங்க இலக்கியங்கள், திருக்குறள் மீதான ஆர்வத்தை தூண்டியது. நிறைய தமிழ் இலக்கியங்களை மீண்டும் தேடி படிக்க ஆரம்பித்தேன். அப்படிதான் தமிழ் இலக்கியங்கள் மீதான காதல் அரும்பியது.

தமிழ் இலக்கியங்களை மையப்படுத்தி, புத்தகம் எழுத ஆரம்பித்தது ஏன்?

தமிழ் இலக்கியங்கள் எல்லாமே பொக்கிஷம் போன்றது. ஆனால் அவை பொக்கிஷமாகவே பாதுகாக்கப்படுவதில் எந்த பயனும் இல்லை. குறிப்பாக, தமிழ் இலக்கியங்கள் மீது அறவே நாட்டமில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு அதுபற்றிய புரிதலை, எளிமையான கவிதைகளாக உணர்த்த ஆசைப்பட்டேன். அப்படி உருவானதுதான், சங்க இலக்கியங்களை மையப்படுத்திய கவிதை நூல்கள்.

திருக்குறளை குறுங்கவிதைகளாக மாற்றும் எண்ணம் எப்படி தோன்றியது?

திருக்குறள் ஒப்புவிப்பு போட்டிக்காக தயாரானபோதுதான், இதற்கான முதல் விதை என்னுள் விழுந்தது. மனப்பாடம் செய்ய கடினமாக இருக்கும் திருக்குறளை, எல்லோரும் ரசிக்கக்கூடிய எளிய கவிதைகளாக மாற்றினால் என்ன? என தோன்றவே, எனக்கு மிகவும் பிடித்த 'இன்பத்து பால்' திருக்குறளை குறுங்கவிதைகளாக மாற்ற ஆரம்பித்தேன். அதைத்தொடர்ந்து, கடந்த ஒரு வருடத்திற்குள்ளாக, அறத்துப்பால் மற்றும் பொருட்பால் திருக்குறள்களையும் குறுங்கவிதைகளாக மாற்றினேன்.

கடினமான முயற்சி என்றாலும், அதை சுலபமாக சாதித்தது எப்படி?

தமிழ் இலக்கியங்கள் மீதான காதலும், இலக்கியங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் ஆசையும்தான், இந்த வித்தியாசமான முயற்சிக்கு அச்சாணியாக அமைந்தது.

இந்தப் பணியில் எத்தகைய சவால்களை எதிர்கொண்டீர்கள்?

உலக பொதுமறையாக கருதப்படும் திருக்குறளுக்கு, மூத்த தமிழ் அறிஞர்கள் பலரும் விளக்க உரை எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புரிதல் இருக்கும். அப்படி வேறுபட்ட கருத்துடைய விளக்க உரைகளை படித்து, அதில் என்னுடைய கருத்தையும் ஒப்பிட்டு சிறப்பான பொருள்படும் கவிதைகளை உருவாக்குவது கொஞ்சம் சிரமமாக இருந்தது. மேலும், மத நம்பிக்கை உள்ளவர்கள், இல்லாதவர்கள்... என எல்லோருக்கும் பொதுவான கருத்துடைய கவிதைகளை எழுதுவதிலும் சில சவால்கள் இருந்தன. இருப்பினும், இதுவும் கடந்து போகும் என்பதைபோல, எல்லா சவால்களையும் கடந்துவிட்டேன்.

* நீங்கள் எழுதிய குறுங்கவிதை தொகுப்பில் பிடித்தது எது? ஏன்?

காதலும், இன்பமும் ததும்பும் 'இன்பத்து பால்' குறட்பாக்கள் என்றும் ஸ்பெஷல். அதை கவிதை வடிவிற்கு மாற்றும்போது, எண்ணிலடங்கா ஆனந்தம் எனக்குள் வெளிப்பட்டது.

திருக்குறளை கவிதையாக மாற்றும்போது, ஒருசில கருத்துக்களை தவிர்த்திருக்கலாம் என்று தோன்றியது உண்டா?

ஆம்...! இருந்தது. திருக்குறள் எல்லோருக்குமானது, எக்காலத்திற்குமானது... என்பதால் அதில் ஒருசில இடங்களில் 'விலை மாதுக்கள்' பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. அது தவறல்ல, ஆனால் அந்த பெண்கள் எத்தகைய வாழ்க்கை சூழலில் அப்படி மாறினார்கள், வறுமை சூழ்ந்த அவர்களது வாழ்க்கை பற்றியும் குறிப்பிட்டிருந்தால், முழுமை பெற்றிருக்குமோ எனத் தோன்றியது.

1330 திருக்குறளையும், குறுங்கவிதை களாக மாற்ற முடியும் என நம்பினீர்களா?

'இன்பத்து பால்' குறள்களை கவிதைகளாக மாற்றிய ஆர்வத்தில், மீதமிருக்கும் குறளையும் கவிதைகளாக மாற்ற ஆரம்பித்தேன். ஆனால், நாம் நினைப்பதுபோல இது சுலபமானதாக இல்லை. பலமுறை, சரியான வார்த்தைகளுக்காக, அப்படியே ஸ்தம்பித்திருக்கிறேன். அதிலிருந்து மீண்டு, அடுத்தடுத்த குறள்களுக்கு நகர்ந்தால் மட்டுமே மனம் லேசாகும்.

இப்படி ஒரு முயற்சியில் வேறு யாரும் ஈடுபட்டது உண்டா?

எனக்கு தெரிந்த வரையிலும், இப்படி ஒரு முயற்சியில் பெண்கள் ஈடுபட்டதில்லை.

கு.ஞானசம்பந்தன், திருக்குறளுக்கு இதுவரை பெண்கள் யாரும் முழுமையாக உரை எழுதவில்லை என்று ஒரு மேடையில் கூறியிருந்ததாக நினைவு. அந்த வகையிலும் இந்த நூல் முழுமை பெறும் என்று நம்புகிறேன்.


Next Story