உலகின் டாப்-7 உளவு அமைப்புகள்...!


உலகின் டாப்-7 உளவு அமைப்புகள்...!
x

அமெரிக்க உளவுத்துறை அமைப்பான சி.ஐ.ஏ. பற்றி திரைப்படங்களின் மூலம் அறிந்த அளவுக்கு மற்ற நாட்டு உளவு நிறுவனங்களை நாம் அறிந்ததில்லை என்றாலும் அவையும் செயல்பாட்டில் காரம் குறைந்தவையல்ல என்பது நிஜம்.

இதோ உலக அளவில் நிபுணர்கள் வரிசைப்படுத்திய டாப்-10 உளவு நிறுவனங்களின் சுறுசுறு அலசல் ரிப்போர்ட் உங்கள் முன்னே...

1. சி.ஐ.ஏ-அமெரிக்கா (Central Intelligence Agency-CIA)

1947-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, அமெரிக்காவில் உள்ள 15 உளவு அமைப்புகளில் முதல் இடத்தில் உள்ளது. அரசு, தனிப்பட்ட மனிதர்கள் குறித்த விவரங்களை சேகரிப்பது, அதனை அதிகாரிகளுக்கு அனுப்புவது, அரசின் ஆணைப்படி அடுத்த நடவடிக்கையில் இறங்குவது என்பது தான் இவர்களின் 3 ஸ்டேஜ் வொர்க்கிங் ஸ்டைல். தற்போது 21 ஆயிரத்து 575 பேர் சி.ஐ.ஏ.வில் வேலை பார்த்து வருகின்றனர்.

பனிப்போர் காலகட்டமான 1953-1966-ம் ஆண்டுகள் மற்றும் 1954-1975-ம் ஆண்டுகளில் நடைபெற்ற வியட்நாம் போர், அல்கொய்தாவுக்கு எதிரான போர் உள்ளிட்டவைகளில் சி.ஐ.ஏ. காட்டிய வீரம் வரலாறு மறக்க முடியாதது.

2. மொசாத்- இஸ்ரேல்

1949-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாத், டெல் அவிவ் நகரில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. ஆயிரத்து 200 பேர் வேலை செய்யும் மொசாத் உளவு அமைப்பு சுயாட்சி பெற்ற அமைப்பல்ல. பிரதமருக்கு கட்டுப்பட்டு இதன் இயக்குநர் மொசாத் செயல்பாடுகள் குறித்து அறிக்கை தரவேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. ஆனாலும் மொசாத் தரும் பயிற்சி குறித்து உலகெங்கும் பிரமிப்புகள் உண்டு. அரபு நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இஸ்ரேல் மக்கள் தினம் தினம் நிம்மதியாக உறங்க மொசாத் அமைப்பே காரணம்.

3. ரா- இந்தியா (Research and Analysis Wing)

இந்தப் பட்டியலில் 3-வது இடம் பிடிக்கும் இந்தியாவின் 'ரா' உளவு அமைப்பு 1968-ம் ஆண்டு செப்டம்பர் 21 அன்று தொடங்கப்பட்டது. பிரதமரின் அலுவலகம்தான் உளவு அமைப்பின் முகவரி. 1962-ம் ஆண்டு இந்திய-சீனா போர், 1965-ம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போர் ஆகிய போர்களில் இந்தியா வாங்கிய விழுப்புண்கள்தான் நமக்கென உளவு அமைப்பு ஒன்று வேண்டும் என்ற பாடத்தைக் கற்றுத்தந்தது.

வெளிநாட்டு உறவுகள், தீவிரவாதம் என இரண்டையும் கவனித்துக்கொள்வதுதான் 'ரா' அமைப்பின் முதன்மைப் பணி. இந்தியாவின் அணுசக்தி பாதுகாப்பு பணிக்கும் ரா உளவு நிறுவனம்தான் தனிப்பொறுப்பு வகிக்கிறது.

4. எஸ்.ஐ.எஸ்- இங்கிலாந்து (Secret Intelligence Service)

007 வேடத்தில் பாண்ட் படாதபாடுபட்டது இந்த உளவு அமைப்புக்காகத்தான். 1909-ம் ஆண்டு இங்கிலாந்தில் உருவான இந்த எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு இன்னொரு பெயரும் உண்டு. 'எம் 16' என்றும் கூறுவார்கள். முதலாவது உலகப்போரின் சிக்கல் தீர்க்கவே முதலில் எஸ்.ஐ.எஸ். தொடங்கப்பட்டாலும், பனிப்போர் காலகட்டம், அமெரிக்காவின் பென்டகன் கட்டிடத்தை தீவிரவாதிகள் தகர்த்த விவகாரம் என பலவற்றிலும் எக்கச்சக்க இன்வால்வ்மென்ட் காட்டி வேலை பார்த்த உளவு நிறுவனம் இது.

இங்கிலாந்தில் உள்ள 7 உளவு அமைப்புகளில் நம்பர் 1 ஆக நீடிக்கும் எஸ்.ஐ.எஸ்., 1961-ம் ஆண்டு காங்கோவிலும், 1951-ம் ஆண்டு ஈரானிலும் அமெரிக்காவின் சி.ஐ.ஏ.யோடு இணைந்து கூட்டுத் திட்டங்களை மேற்கொண்டது. 1980-ம் ஆண்டு லெபனான் நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தந்தது.

5. எப்.எஸ்.எஸ்.-ரஷியா (Federal Security Service)

எப்.எஸ்.எஸ். எனும் ரஷிய உளவுத்துறை நிறுவனம் செயல்படுகிறதா இல்லையா என ரஷிய அரசுக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. அவ்வளவு பரம ரகசியமாக வெளிநாட்டு உளவு வேலைகள், குறிப்பிட்ட ஆட்களை கட்டம் கட்டி தீர்ப்பது, எல்லை பாதுகாப்பு உள்ளிட்டவைகளைச் செய்யும் உளவு நிறுவனம் இது. ரஷியாவுக்கு முதல் ஆப்கன் போரில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, 1995-ம் ஆண்டு ஏப்ரலில் மறுசீரமைக்கப்பட்ட உளவு நிறுவனம் இது. 'எப்.எஸ்.எஸ். உளவு அமைப்பு அதிகாரபூர்வமாக செயல்படும் அமைப்பல்ல' என்பது இதன் செயல்பாடு எப்படி என விளக்கிடும் தாரக மந்திரம்.

6. எம்.எஸ்.எஸ்.- சீனா (Ministry of State Security)

அங்குலம் அங்குலமாக உலகை ஆக்கிரமிக்கும் சீனாவின் எம்.எஸ்.எஸ். உளவு நிறுவனம் தோன்றியது 1983-ம் ஆண்டுதான். இதற்கு முன்னே சி.டி.எஸ்.ஏ. எனும் அமைப்பே உளவு வேலைகளைப் பார்த்து வந்தது. உள்நாடு, வெளிநாடு, ஆராய்ச்சி என பல வேலைகளை சுறுசுறுவென பார்க்கும் உளவு நிறுவனம் இது.

உலக நாடுகளிடையே நிகழும் பல்வேறு நிகழ்வுகளுக்கும் அதன் எதிரி நாட்டு உளவுத்துறைகளுக்கும் பீட்ஸாவுக்கும் சீஸுக்கும் உள்ளது போல தொடர்புண்டு. உலகை நடத்துவதே உளவுத்துறை அமைப்புகளின் சூட்சும செயல்பாடுகள்தான் என்று கூட சொல்லலாம்.

7. ஐ.எஸ்.ஐ - பாகிஸ்தான் (Inter Services Intelligence -ISI)

1948-ம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின்போது தொடங்கப்பட்ட முதல் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., தற்போது பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஏழு அமைப்புகளிலும் முதல் இடம் பிடித்து நம்பர் 1 நாயகனாக வலம் வருகிறது.

கார்கில் போர், 1965-ம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போர் மற்றும் ஆப்கன் போர் உள்ளிட்டவைகளில் ஐ.எஸ்.ஐ.யின் மூளை தீவிரமாக வேலை செய்ததை உலகம் அறிந்தது. மொத்தம் 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள ஐ.எஸ்.ஐ.யில் 10 ஆயிரம் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் செயல்பட்டு வருகின்றனர். 2014-ம் ஆண்டு அமெரிக்கன் க்ரைம் நியூஸ் அமைப்பு உலகின் சக்திவாய்ந்த உளவுத்துறை அமைப்பு குறித்த ஆய்வில் இதனைத் தெரிவித்துள்ளது.


Next Story