கருத்து செல்வங்களின் கருவூலமே நூலகம்


கருத்து செல்வங்களின் கருவூலமே நூலகம்
x

கேடில் விழுச்செல்வம் கல்வி ஆகும். அத்தகைய கல்வி செல்வத்தை பெற நூல்பல கல், நூலளவே ஆகும் நுண்ணறிவு என்பன அவ்வை கூறும் அறிவுரைகளாகும். அறிஞர் பெருமக்களின் கருத்து செல்வங்களை அள்ளித் தரும் கருத்து கருவூலமே நூலகம்.

இந்த நூலகம் எல்லோரும் சென்று எளிதில் படிப்பதற்கேற்ற பொதுவான இடத்தில் இருக்க வேண்டும். நூலகத்தின் அருகில் ரெயில்கள், பஸ்கள், தொழிற்சாலை இவற்றின் இரைச்சல் இருக்கக்கூடாது. படிப்போர் ஆர்வத்துடன் படிக்கும் வகையில் நூலகத்தில் நல்ல வெளிச்சமும், காற்றோட்டமும் கொண்டதாக அமைக்க வேண்டும். நூலகத்தில் எப்போதும் அமைதி நிலவவேண்டும்.

நூலகங்கள் படிப்போரின் தகுதிக்கேற்ப பலவகையாக பிரிக்கப்படும். அவை பள்ளி நூலகம், கல்லூரி நூலகம், ஆசிரியர் நூலகம், பொதுநூலகம், குழந்தைகள் நூலகம், ஆராய்ச்சி நூலகம், நடமாடும் நூலகம் என பல வகைப்படும். நூலகத்தில் பல்வேறு மொழி புத்தகங்கள் இருக்கும். நூலகத்தில் அரசியல், அறிவியல், கதை, கட்டுரை, பொறியியல், பொருளியல், வரலாறு, வானவியல், மருத்துவம், சமயம், கணிதம், நாடகம் போன்ற பல்வேறு துறை புத்தகங்களை தனித்தனியே அடுக்கி வைத்திருப்பார்கள். கலைக்களஞ்சியம் போன்ற நோக்கு புத்தகங்களும், வார, மாத இதழ்களும், தினசரி செய்திதாள்களும் இருக்கும். நூலகத்தில் உறுப்பினராக சேர்வதற்கு காப்புத்தொகை செலுத்த வேண்டும். நூலகத்தின் புத்தகங்கள் நமக்கேயன்றி மற்றவர்களுக்கும் பயன்படுகின்றன என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ஆகவே புத்தகங்களை படிக்கும் போது கோடிடவோ, எழுதவோ அல்லது சேதம் விளைவிக்கவோ கூடாது. முக்கியமான தகவல்களை குறிப்பெடுத்து கொள்ளவேண்டும்.

வீட்டுக்கு எடுத்து சென்று படித்து விட்டு உரிய காலத்தில் திருப்பி கொடுக்க வேண்டும். நூலகத்தில் எப்போதும் அமைதி காக்க வேண்டும். அறிவு வளர்ச்சிக்கு நாம் விரும்பும் புத்தகங்களையெல்லாம் நாமே விலை கொடுத்து வாங்கிட முடியாது. இந்த குறையை நூலகம் போக்குகிறது. நூலகத்தால் நாட்டின் நல்லுறவு வளரும். படிக்கும் பழக்கம் வளரும். சிக்கனத்தின் சீர் விளங்கும். காலத்தின் நற்பயன் தெளிவாகும். உலக அறிவு ஓங்கும். செய்தி அறிவு சேகரமாகும்.

நூலகத்தால் படிப்பாளியும் ஆகலாம். படைப்பாளியும் ஆகலாம். நூலகம் வழங்காத பயனை வேறு எதுவும் வழங்க முடியாது. நற்பண்புகள், அடக்கம், எளிமை, பொறுமை, வன்மை ஆகிய மனபயிற்சிகளுக்கும் நூலகம் வழிகாட்டும். நூலகத்தால் மாந்தர்தம் வாழ்வு முழுமை பெறுகிறது.

உலக வரலாற்றில் பெரியோர்களாய் விளங்குபவர்கள் தங்கள் அறிவை வளர்த்து கொள்ள உதவிய இடம் நூலகம் என்றால் அது மிகையன்று. நூலகங்களில் அறிஞர்கள் புத்தக வடிவில் நமக்காக காத்திருக்கிறார்கள். காத்திருக்கும் அறிஞர்களோடும், கவிஞர்களோடும், அறிவியல் வல்லுனர்களோடும் பழகி நம் அறிவை வளர்த்து கொள்வோம்.


Next Story