அதிகரிக்க வேண்டிய மூங்கில் பயன்பாடு
உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது மூங்கில் உற்பத்தியில் முன்னணி வகிப்பது நமது நாடு. மூங்கில் பயன்பாடு அதிகமாகும்போது, மூங்கில்களைப் பயிரிடும் சூழல் பெருகும்.
ஆனால், அதைப் பயன்படுத்துவதில் மிகவும் பின்தங்கியுள்ளது. உலகில் பல இடங்களிலும் மூங்கில் பொருட்களை கட்டுமானத்திற்கு பயன்படுத்துகின்றனர். ஏழைகளுக்கு குறைந்த செலவில் அவர்களுக்கான குடியிருப்புகளைக் கட்டுவதற்கு மூங்கில் போன்ற மாற்றுக் கட்டுமானப் பொருட்கள் பயன்படுகின்றன. மூங்கில்கள் பலம் கொண்டவை. நில அதிர்வு வாய்ப்புள்ள பகுதிகளில் வீடுகளைப் பாதுகாப்பாகக் கட்டுவதற்கு மூங்கில்களை அதிகம் பயன்படுத்தலாம்.
தற்காலத்தில் கட்டுமானத்துக்கு அதிகமாக மரப் பொருட்களையும் பயன்படுத்துகிறோம். அவை அதிக விலையுள்ளதாக இருக்கின்றன. மரப்பொருட்களுக்கு பற்றாக்குறையும் இருக்கிறது. மரங்களை வெட்டுவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்படையும்.
அசாம் மாநிலத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட கட்டிடங்கள் மூங்கில்களின் உறுதியை இப்போதும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. மூங்கில் இயற்கையாக மக்கி அழியக் கூடியது. ஆனாலும், வெகு காலம் தாக்குப்பிடிப்பதற்கு நவீன வேதிச் செயல் முறைகளைக் குறைவான செலவில் செய்ய முடியும். மூங்கில் பயன்பாடு அதிகமாகும்போது, மூங்கில்களைப் பயிரிடும் சூழல் பெருகும். அது சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த மூங்கில்களைக் குறைந்த அளவாவது, அனைவரும் பயன்படுத்த முன்வர வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.